Shadow

அய்யனார் வீதி விமர்சனம்

Ayyanar Veethi Review

பாகுபலி 2 படத்தினுடைய வெளியீட்டின் பொழுது நமக்கென்ன வேலை என்று தமிழ், தெலுங்கு, ஹிந்தித் திரையுலகங்கள் வசவசவென்ற வெளியீட்டில் இருந்து சற்றே ஓய்வெடுத்துக் கொள்ள, ‘அய்யனார் வீதி’ எனும் படமெட்டும் பாகுபலியுடன் சேர்ந்து வெளியாகி, வரலாற்றில் தனக்கென்றொரு நிரந்திர இடத்தைப் பிடித்துள்ளது இப்படம்.

‘நாட்டாமை’ படத்தின் கரு, ‘நட்புக்காக’ படத்தினுடைய கதையின் கரத்தைப் பற்றி ‘அய்யனார் வீதி’க்குள் திரைக்கதையாக நுழைந்துள்ளது.

அய்யனார் வீதி என்பது ஊர்ப் பெயர். அய்யனாராக பொன்வண்ணனும், சுப்ரமணிய சாஸ்திரிகளாக கே.பாக்கியராஜும், செந்திலாக யுவனும் நடித்துள்ளனர். ‘படத்தில் யூத் சப்ஜெக்ட்டே இல்லையே! இளைஞர்களைக் கவர யூத் சமாச்சாரம் சேருங்க’ என பாக்யராஜ் கேட்டுக் கொண்டதால், இயக்குநர் யுவனை இணைத்துள்ளார். இப்படிப் படத்தில் மூன்று கதாபாத்திரங்கள் இருந்தும், திரைக்கதை எவர் மீதும் பயணிக்காமல் தன்னியல்பில் தேமோவெனச் செல்வதை இயக்குநர் ஜிப்சி ராஜ்குமார் கட்டுப்படுத்தியிருக்கலாம்.

Senthil Velதயாரிப்பாளர்களில் ஒருவரான செந்தில் வேல், மருது எனும் பாத்திரத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். படத்தின் நாயகன் யாரென்ற குழப்பம் க்ளைமேக்ஸ் தொடங்கும் வரை நிலவினாலும், வில்லன் யார் என்பதில் அத்தகைய குழப்பம் ஏற்படவில்லை. செந்தில் வேல் நன்றாக நடித்துள்ளார். நல்ல கதாபாத்திரத்தினைத் தேர்ந்தெடுத்து அவர் தொடர்ந்து நடிக்கலாம். வில்லனான அவருக்கு ஒரு குத்துப்பாட்டும் உண்டு. செந்தில் வேலுக்கும், இயக்குநர் ஜிப்சி ராஜ்குமாருக்கும் ஓர் அதகளமான சண்டைக் காட்சியொன்றும் வருகிறது. அந்தக் காட்சியில், புயல் போல் எங்கிருந்து இயக்குநர் திடீரென்று வந்தாரெனத்தான் தெரியவில்லை.

படத்தில் சாரா ஷெட்டி, சிஞ்சு மோகன் என இரண்டு கதாநாயகிகள் உள்ளனர். ஒருவர் நாயகனால் காதலிக்கப்பட, மற்றொருவர் நாயகனைக் காதலிக்க. ஆனால், திணிக்கப்பட்ட யுவன் படத்திற்குச் சற்றும் பொருந்தாமல் போவது துரதிர்ஷ்டம். காமெடியனான சிங்கம்புலியும் மனதில் ஒட்டாமல் மறைகிறார். இசையமைப்பாளர் U.K.முரளி படத்தின் நாடகத்தன்மையைப் பூதாகரப்படுத்திக் காட்டியுள்ளார். க்ளைமேக்ஸில் அய்யனாராய் ரெளத்திரம் கொள்கிறார் பாக்யராஜ். ஆனால், அதற்கான நியாயத்தை திரைக்கதை கற்பிக்காததால் அக்காட்சி சிலிர்ப்பை ஏற்படுத்தாமல் கடந்து செல்கிறது. பொன்வண்ணனுக்கும் பாக்கியராஜுக்குமான நட்பை இன்னும் காவியத்தன்மையோடு மிளிர விட்டிருக்கலாம் இயக்குநர் ஜிப்சி ராஜ்குமார்.