Shadow

பாகுபலி 2 விமர்சனம்

Bahubali 2 Thiraivimarsanam

பாகுபலி – தொடக்கம்

படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் எவ்வளவு உழைப்பினைச் செலுத்தியுள்ளனர் என்ற பிரமிப்பு, டைட்டில் கார்டிலிருந்தே தொடங்கி விடுகிறது. நல்ல திரையரங்கில் இப்படத்தினைப் பார்த்தால், அதன் பிரம்மாண்டத்தில் இருந்தும், விஷூவல் மேஜிக்கில் இருந்தும் மீளக் குறைந்தது ஓரிரு நாட்களாவது ஆகும்.

நேரடியாக ஃப்ளாஷ்-பேக்கிற்குள் நுழைந்து விடுகின்றனர். இயக்குநர் ராஜமெளலி சொன்னது போல், கதாபாத்திரங்களை முதல் பாகத்தில் ரசிகர்களுக்கு அறிமுகம் மட்டுமே செய்து வைத்துள்ளார். உண்மையில், கதை இந்த முடிவில் தான் தொடங்குகிறது.

படத்தின் முதல் பாதி மிக அற்புதமானதொரு கலைப் படைப்பு. அமரேந்திர பாகுபலியின் அசத்தலான அறிமுகம், பிங்கலதேவனின் வில்லத்தனம், தேவசேனையின் அறிமுகம், கள்வர்களுடனான சண்டை, இயற்கைச் செறிவாய்ப் பூத்துக் குலுங்கும் குந்தல தேசம், தேவசேனை மீதான பாகுபலியின் காதல், கட்டப்பாவின் நகைச்சுவை, பல்வாழ்தேவனின் சூழ்ச்சி, பிண்டாரிகளுடனான அமரேந்திர பாகுபலியின் போர், ‘ஒரு ஊரில் ஒரு ராஜா’ என்ற கப்பல் பறக்கும் பாடல், சிவகாமி – தேவசேனை சந்திப்பு என முதற்பாதி உங்களைக் கரைந்து போகச் செய்யும். இதற்கு எல்லாம் மகுடம் வைத்தாற்போல், இடைவேளைக் காட்சியை அமைத்துள்ளார் இயக்குநர் ராஜமெளலி. அப்பொழுது அதிர்வது மகிழ்மதி மட்டுமன்று, அப்பேரரசோடு பார்வையாளர்களும் மயிர்க்கூச்செறிப்பை உணர்வார்கள். இந்த இடைவேளையைப் பார்த்தவுடன், முதல் பாகத்து இடைவேளையை நினைவுகூர்ந்தால் ராஜமெளலியின் மேதைமை புரியும்.

ஏதோ ராஜா ராணி படம் என்றில்லாமல், இடைவேளைக்குப் பின்னான சில காட்சிகள் மிக அட்டகாசமாக உள்ளது. உதாரணத்திற்கு, கையில் சங்கிலியால் விலங்கிடப்பட்ட தேவசேனையை அரசவையில் விசாரிக்கும் காட்சி. அனுஷ்காவின் கம்பீரமும், பிரபாஸின் அமர்க்களமான பிரவேசமும் அக்காட்சியை மிகச் சிறப்பானதாய் ஆக்கியுள்ளது. இடைவேளைக்கு முன், பாகுபலியின் தோளில் நடந்து தேவசேனைப் படகிலேறும் காட்சி அழகியலின் உச்சம். ‘தங்களுக்கு அடியேதும் படவில்லையே யுவராணி’ என பிரபாஸ்க்கு டப்பிங் பேசிய ருத்ராபதி சேகரின் குரலில் தொனிக்கும் வாத்சல்யமும், அதற்கு அனுஷ்காவின் பாவனையும் மிக்க ரசனையோடு எடுக்கப்பட்டுள்ள காட்சி. இத்தகைய அற்புதங்களுக்குப் பின் வரும், 30 நிமிட பழிவாங்கும் க்ளைமேக்ஸ் எபிசோட் சோடை போய்விடுவது இயல்பானதே! முதல் பாதியில், பிண்டாரிகளுக்கு எதிரான போரில் அமரேந்திர பாகுபலியின் ஒன்-மேன் ஹீரோயிசம் முன், மகேந்திர பாகுபலியின் போர் தந்திரங்கள் பொலிவிழுந்து விடுகிறது.

இரண்டு பாத்திரங்களையும் வேறுபாடு காட்ட மரு கூட ஒட்டிக் கொள்ளவில்லை பிரபாஸ். ஆனாலும், ஃப்ளாஷ்-பேக்கில் வரும் அமரேந்திர பாகுபலியை உங்களுக்கு மிகவும் பிடித்துவிடும். காரணம் திரைக்கதை. ராணா டக்குபாத்திக்கு இன்னும் அழுத்தமாகச் சில காட்சிகளைக் கொடுத்திருக்கலாம். அவருக்கு தேவசேனை மீதெழும் அளவிட முடியாத வஞ்சத்திற்கான காரணம் சரியாகச் சொல்லப்படவில்லை. ஒரு வசனத்தில் அதைக் கடந்து விடுகிறார். ‘தேவசேனையைச் சிறைப்பிடித்திருந்த சங்கிலியில்தான் என் சொர்க்கம்’ எனச் சொல்பவருக்கு அந்தச் சங்கிலியாலே முடிவு எழுகிறது. தன் மகனின் மரணத்திற்காகப் பழிவாங்குவார் எனப் பார்த்தால், தேவசேனையைச் சிறைப்பிடிப்பதிலேயே குறியாக இருக்கிறார். தேவசேனையான அனுஷ்காவிற்கும், சிவகாமியான ரம்யா கிருஷ்ணனிற்கும் அழுத்தமான கதாபாத்திரங்களை ராஜமெளலி அமைத்திருப்பது சிறப்பு. அனுஷ்காவின் செளந்தர்யம் முன், முதல் பாகத்து அவந்திகா பொலிவிழுந்தே காணப்படுகிறார். முடிவில், மருந்துக்கென ஸ்க்ரீனில் தோன்றி மறைகிறார் தமன்னா.

கட்டப்பா பாகுபலியின் முதுகில் குத்தும் காட்சியில், கீரவாணியின் பின்னணி இசை மிக மிக அற்புதம். கீரவாணி தான் படத்தின் உண்மையான பாகுபலி என்றே சொல்லலாம். படத்தைத் தன் இசையால் தோளில் தூக்கிச் சுமந்துள்ளார். மகிழ்மதி கோட்டையின் கதவைத் திறக்க, சுத்தியலால் பெரிய சங்கிலையை உடைத்து விட்டு, சொய்ய்ங்கென கதவில் சறுக்கிக் கொண்டே மகேந்திரா பாகுபலி குதிக்கும் பொழுது “சாஹோ” எனப் பின்னணி இசை ஒலிக்கும் (சாஹோ – அடுத்து, பிரபாஸ் நடிப்பில் வரவுள்ள பெரிய பட்ஜெட் ஆக்ஷன் படமென்பது குறிப்பிடத்தக்கது).

‘பகடை’ என்ற சொல்லைப் பயன்படுத்தி, பெரும் சர்ச்சைக்கு உள்ளானார் கார்க்கி வைரமுத்து. இம்முறை கதாபாத்திரங்கள் எவ்வளவு வன்மத்துடனும் கோபத்துடனும் பேசினாலும், ‘நாய்’ என்று மட்டுமே வசைபாடியது ஒட்டாமல் இருந்தது. ‘ஒரு முட்டாள் ஏன் முட்டாள் போல் நாடகமாட வேண்டும்’ என்ற நாசரின் வசனத்திற்குத் திரையரங்கில் கரவொலி எழுகிறது. பார்வையாளர்கள் படத்துடன் ஒன்றிவிட்டதற்கு இதுவே சாட்சி. மக்களின் கொண்டாட்ட மனநிலைக்கு மிகச் சிறந்த வடிகாலாக அமைந்துள்ளது பாகுபலி – முடிவு. எதிர்பார்த்தாற்போல் வசூல் சாதனைகள் நிகழ்த்தும் என்பது திண்ணம்.

ஜெய் ராஜமெளலி.!

2 Comments

Comments are closed.