Shadow

பாரம் விமர்சனம்

Baaram-review

தேசிய விருது பெற்ற இப்படத்தின் தலைப்பே சற்று குழப்பம்தான். உடம்பு முடியாமல் படுத்துவிடும் முதியவர்களை தான் ‘பாரம்’ எனத் தலைப்பு சுட்டுகிறதோ என எண்ண வேண்டியுள்ளது.

தலைக்கூத்தல் (Thalaikkoothal – தலைக்கு ஊத்தல்) என்பது பற்றி ஆன்லைனில் படிக்க நேரிடும் இயக்குநர் பிரியா கிருஷ்ணாசாமிக்கு, மேலும் அது சம்பந்தமான ஒரு உண்மைக் கதையும் தெரிய வருகிறது. இது கண்டிப்பாகச் சொல்லப்பட வேண்டியதென முடிவுக்கு வந்து, திரைப்படமாக எடுக்க ஆய்வு மேற்கொள்கிறார். இப்படமும் டாக்குமென்ட்ரி டிராமா வகையைச் சார்ந்ததே!

தங்கை வீட்டில் தங்கி, வாட்ச்மேன் வேலை பார்க்கும் கருப்பசாமிக்கு விபத்து ஏற்பட்டு இடுப்பெலும்பு உடைகிறது. அவரது மகன் செந்தில், அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்காமல், நாட்டு மருத்யுவர் குணப்ப்டுத்துவார் என கிராமத்திற்கு அவரை அழைத்துச் சென்றுவிடுகிறான். அவர் இறந்து விடுகிறார். தனது தாய்மாமா கருப்பசாமியின் மரணத்தில் சந்தேகம் கொள்ளும் சமூக செயற்பாட்டாளரான வீரா, அதை ஊடகத்துக்குக் கொண்டு போய்ப் பலரின் கவனத்தை ஈர்க்கிறார். வேறு வழியில்லாமல், கருப்பசாமியின் மரணம் கொலையா, இயற்கை மரணமா என காவல்துறை விசாரிக்கத் தொடங்குகிறது. முடிவு என்ன என்பதே படத்தின் கதை.

ஆவணம் போல் படம் பயணித்தாலும், படம் எதையும் முழுமையாகத் தொடவில்லை. வீட்டிலுள்ள பெரியவர்களைச் சுமையாக நினைத்துக் கொல்லும் வழக்கம் உலகம் முழுவதும் உள்ளது. தென்னிந்தியாவில், தமிழகத்தில் மட்டும் அது நடப்பதாக ஒரு சித்தரிப்பு, இயக்குநருக்குத் தெரிந்தோ, தெரியாமலோ வந்துவிடுகிறது. இயக்குநர், ‘அது எங்கள் நோக்கம் இல்லை’ எனத் தெளிவுபடுத்தினாலும், அவர் இன்னும் கவனமாக இருந்திருக்கலாம்.

தலைக்கூத்தல் என்ற சடங்கில் கொல்லப்படுபவர்களைப் போஸ்ட் மார்ட்டம் செய்தாலும், குளிரில் உடல் இறைத்து அது இயற்கை மரணமாகத்தான் காட்சியளிக்கும். ஆனால், இப்படத்திலோ விஷ ஊசி போட்டுக் கொல்வது கூட தலைக்கூத்தலில் வரும் என்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் இயக்குநர். இது நேரடியான கொலை, தலைக்கூத்தல் கொஞ்சம் மறைமுகமாக கொலை. அதுவே சில சந்தர்ப்பங்களில், விரக்தியிலோ வேதனையிலோ இருப்பவர்கள் தாங்களே தேடிக் கொள்ளும் கருணைக் கொலைக்கான சடங்காகவும் தலைக்கூத்தல் உள்ளது.

இடுப்பெலும்பு உடைந்த நபரை வேனில் தூக்கிப் போட்டு கன்னாபின்னாவெனப் பயணிக்கும் காட்சிகள் அதிக பதற்றத்தை விளைவிக்கிறது. வலியில் துடிப்பதாகட்டும், வீராவைப் பார்த்ததும் ஒரு தெம்பு பெறுவதாகட்டும், வாழும் ஆசையை மகனிடம் வெளிப்படுத்தும் தருணமாகட்டும், வேதனையின் உச்சத்திலும் மகனை விட்டுக் கொடுக்காமல் தங்கையிடம் பேசுவதாகட்டும், கருப்பசாமியாக நடித்த R.ராஜு பதற்றத்தை ஏற்படுத்துகிறார்.

கருப்பசாமியின் தங்கை மென்மொழியாக நடித்துள்ள ஜெயலட்சுமி அற்புதமாகவும், எதார்த்தமாகவும் நடித்துள்ளார். கருப்பசாமியின் மகன் செந்திலாக நடித்துள்ள சுப முத்துகுமார், செந்திலின் மனைவி ஸ்டெல்லாவாக நடித்துள்ள ஸ்டெல்லா கோபி, கருப்பசாமியின் அண்ணன் மகன்கள் முருகன், மணி, வீரா பாத்திரங்களில் நடித்துள்ள சாமராஜா, ப்ரேம்நாத், சுகுமார் சண்முகம் ஆகியோர் அனைவதுமே மிக நன்றாக நடித்துள்ளார்கள்.

“தலைக்கூத்தல் – ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒரு விஷயம் என்பதைப் பதியவே இப்படம்” என்கிறார் எழுதித் தயாரித்து, இயக்கி, படத்தொகுப்பு செய்துள்ள பிரியா கிருஷ்ணசாமி. கொலைக்கும், கருணைக் கொலைக்குமான வித்தியாசத்தையும், படம் போகிற போக்கில் ஆவணப்படுத்தியிருக்கலாம்.