மாஃபியா – குற்றத்தை நிறுவனமயப்படுத்தும் ஓர் இயக்கம் எனப் பொருள் கொள்ளலாம்.
அப்படி, போதைப் பொருள் கடத்துவதை நிறுவனமயப்படுத்தும் திவாகர் குமரனைப் பிடிக்க நினைக்கிறார் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஆரியன். இதுதான் மாஃபியா படத்தின் கதை.
Ground to Earth பெர்ஸ்னாலிட்டியாக நடித்துள்ளார் பிரசன்னா. டிகே (DK) எனும் திவாகர் குமரன், பெரிய சிண்டிகேட்டின் லோக்கல் தலைவராக இருந்தும், யாரையாவது மிரட்ட, தானே நேரடியாகக் களம் இறங்குகிறார். அவரது அலட்டலில்லாத அமைதி ரசிக்க வைக்கிறது. காட்டில் தானொரு நரி எனச் சொல்லிக் கொள்ளும் அவர், அது போன்று குயுக்தியாக எதுவும் செய்வதில்லை.
நாயகனைக் காதலிக்கவும், ஸ்லோ-மோஷனில் நடக்கவும், ஆரியனின் குழு உறுப்பினர் சத்யாவாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இன்னொரு குழு உறுப்பினர் வருணாக பாலா ஹாசன் நடித்துள்ளார். வில்லனின் குடோனைத் தாக்கும் மிக முக்கிய பணியை இருவரும் செய்துள்ளனர்.
பரத் ரெட்டி, இன்ஸ்பெக்டர் நவீனாக நடித்துள்ளார். இவரையும் நாயகனின் டீமில் ஒருவராகப் பாவிக்கலாம். நாயகனின் உடற்மொழியைக் கொண்டே அவர் பிரச்சனையில் உள்ளார் எனப் புரிந்து கொள்ளும் திறமையான நல்ல போலீஸ் அதிகாரி பாத்திரம், அவருக்குப் பொருந்துகிறது.
ஆரியனாக அருண் விஜய். ஸ்லோமோஷனில் கார் ஓட்டுவது, நடப்பது, துப்பாக்கி எடுப்பது என படத்தில் கதைப் பகுதியை விட அருண் விஜய்க்கான பில்டப் ஷாட்ஸ்கள் அதிகம். 2 மணி நேரத்திற்குக் குறைவான படத்தையே, ஸ்லோமோஷன் பில்டப்ஸில் ஓட்ட வேண்டிய சிரமத்தை அழகாகக் கையாண்டுள்ளார் படத்தொகுபாளர் ஸ்ரீஜித் சாரங். துருவங்கள் பதினாறு வெற்றிக்கு, ஸ்ரீஜித்தின் பங்கு அளப்பரியது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் கார்த்திக் நரேன், தனது முதற்படம் மூலம் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தார். இப்படத்தின் க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்டில் மட்டுமே அதை மெலிதாக உணர முடிந்தது. அத்தியாயம் 2 இல், வில்லன் டெக்ஸ்டரின் (Dexter) வரவு சுவாரசியத்தையும் விறுவிறுப்பையும் கூட்டும் என நம்புவோமாக!