Shadow

போகி விமர்சனம் | Bhoghee review

தேவையில்லாதவற்றை ஒழிப்பதைப் போகி பண்டிகையாகக் கொண்டாடுவர். அப்படிச் சமூகத்திற்குத் தேவையில்லாதவர்களை ஒழிப்பதை, ‘போகி’ எனும் தலைப்பின் மூலமாக உணர்த்துகிறார் இயக்குநர் S. விஜயசேகரன். இந்தியாவை உலுக்கிய இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதையை அமைத்துள்ளனர்.

மறைத்து வைக்கப்படும் கேமராவின் மூலமாகத் தமிழ்ப் பெண்களை வீடியோ எடுத்து ஆபாச தளங்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கிறது மலேஷியாவைத் தலைமையகமாகக் கொண்ட ஒரு ரகசிய கூட்டமைப்பு (Syndicate). சிலர் மர்மான முறையில் கொல்லப்படுகின்றனர். காவல்துறை இந்த இரண்டு வழக்குகளையும் தீவிரமாகக் கண்காணிக்கிறது. இந்தப் பிரச்சனையில் நாயகன் நபி நந்தி எப்படிச் சிக்குகிறான், அதற்கான அவனது எதிர்வினை என்ன என்பதுதான் படத்தின் கதை.

ஒரே ஒரு பாடலுக்கு பூனம் கெளர் நடனமாடியுள்ளார். ஆனால், படத்தின் நாயகியோ இரண்டாம் பாதியில், பன்னிரெண்டாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுப்பவராக அறிமுகமாகும் லப்பர் பந்து நாயகி ஸ்வாஸ்விகா தான். நீண்ட நாள் கிடப்பில் இருந்த படம் என்பதை ஸ்வாஸ்விகாவின் இளமையான தோற்றத்தைக் கொண்டே யூகிக்க முடிகிறது. இப்போதைய ஸ்வாஸ்விகா போல் நடிப்பில் முதல் மதிப்பெண் பெறுமளவிற்கு இல்லாவிட்டாலும், மருத்துவ மாணவி கதாபாத்திரத்திற்குப் போதுமான நியாயத்தைச் செய்துள்ளார். ஸ்வாஸ்விகாவிற்கும், நபி நந்திக்குமான பிணைப்பை ஃப்ளாஷ்-பேக்கில் அழகான பாடல்கள், லோக்கேஷன்கள் மூலம் சொல்லியுள்ளனர். சென்னை வந்ததும், நாயகியைத் தேடி தாடி வளர்த்துக் கொள்கிறார். ஸ்வாஸ்விகாவை ஒரு தலையாகக் காதலிக்கும் பாத்திரத்தில் ஷரத்தும் உப நாயகன் போலவே வலம் வந்துள்ளர்.  

ராஜா C. சேகரின் ஒளிப்பதிவு, தொழில்நுட்ப ரீதியாகப் படத்தின் அழகை மெறுகேற்ற உதவவில்லை. படத்தில் வரும் மேகமூட்டமான மலைகள் போல் விஷுவல்கள் திரைமூட்டமாகவே உள்ளன. கதை சொல்லப்பட்ட விதத்தில் இயக்குநரின் கோபம் தெரிகின்றதே அன்றி, அது சுவாரசியத்தை அதிகரிக்கும் திரைக்கதையாகப் பரிணமிக்கவில்லை.

காவல்துறை உதவி ஆணையராக வேல ராமமூர்த்தி நடித்துள்ளார். இயக்குநரின் கோபத்தைத் தனது கண்களில் சுமந்து கொண்டு, எவரும் செய்யத் துணியாத முடிவொன்றைப் படத்தின் இறுதியில் எடுக்கிறார். அந்த முடிவின் அதிர்ச்சியையோ, நிறைவையோ, பார்வையாளர்கள் உள்வாங்கிக் கொள்ளும் முன், தொடரும் என அடுத்த பாகத்திற்கான லீடுடன் படத்தை முடித்துள்ளார்.