Shadow

பிளாக் ஷீப் டிவி | ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ – புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி

பிரபல தொகுப்பாளரும், சர்வதேசளவில் புகழ்பெற்ற இலங்கைத் தமிழ் அறிவிப்பாளருமான முனைவர் B.H.அப்துல் ஹமீத் அவர்களது வாழ்நாள் அனுபவங்களை உள்ளடக்கிய ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ எனும் புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சியை “பிளாக் ஷீப் டிவி” ஒளிபரப்பவுள்ளது. இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி, டிசம்பர் 18 ஆம் தேதியன்று மாலை 05:30 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நிகழ உள்ளது.

அரை நூற்றாண்டுக் காலமாக நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் கோலோச்சிய ஆளுமையான அப்துல் ஹமீதின் இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் RJ விக்னேஷ்காந்த். முந்தைய தலைமுறை மேதைகளைத் தேடி ஓடிக் கொண்டாடி மகிழும் பிளாக்‌ ஷீப் டிவி நிறுவனம், இந்நிகழ்ச்சியின் முதன்மை நல்கையாளராகவும் (Title Sponsorship) செயற்படவுள்ளது.

புத்தகத்தைப் பற்றி, B.H.அப்துல் ஹமீத், “இது எனது வாழ்க்கையைப் பற்றிய சுயதம்பட்ட நூல் இல்லை. தென் கிழக்கு ஆசியாவின் முதல் ஒலிபரப்பு திணைக்களமான இலங்கை வானொலியின் (Radio Ceylon) வரலாற்றை ஒரு வழிப்போக்கனின் பார்வையில் இருந்து சொல்லியுள்ளேன். இங்கிலாந்து, ஜப்பான், பெருவிற்குப் பிறகு இலங்கையில் தான் ஒலிபரப்பு தொடங்கப்பட்டது. இலங்கை ஒலிபரப்புத் துறையின் தந்தையென அழைக்கப்பட்டவர் எட்வேர்ட் ஹாப்பர் என்றாலும், அய்யம்பிள்ளை நடராசன் என்ற தமிழர்தான் இலங்கை வானொலி உருவாக முழுமுதற்காரணம். ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட அலைபரப்பியின் (Transmitter) உதவியோடு 1925 ஆம் ஆண்டு இலங்கை வானொலி ஆரம்பிக்கப்பட்டது. அந்த அலைபரப்பியை எப்படி ஒலிபரப்பிற்குப் பயன்படுத்தலாமென அய்யம்பிள்ளை நடராசன், மார்க்கோனி அவர்களிடமே சென்று பயிற்சி எடுத்துவந்தார். அவரைச் சிறப்பிக்கும் வகையில் அவரைப் பற்றி ஒரு அத்தியாயமே எழுதியுள்ளேன்.

நான் எழுத்தாளன் இல்லை. கொரோனா காலகட்டத்தில் என்னை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள இந்நூலை எழுதத் தொடங்கினேன். என் குரல் காற்றில் கரைந்து மறைந்துவிடலாம். என்னை மக்கள் மறந்து விடாமல் இருக்க இந்நூல் உதவுமென நினைக்கிறேன். நான், பணியாற்ற வந்தபோது நிகழ்ச்சிகளை நேரடியாகப் பேசில் லைவில் ஒலிபரப்பினர். பின்னர் தான், டேப்பில் பேசி ஒலிபரப்பச் செய்யும் வசதி வந்தது, பின் அது கணினியில் சேமிக்கப்பட்டு ஒலிபரப்பாகத் தொடங்கிவிட்டது. நான், இந்த எல்லாக் காலகட்டங்களிலும் பணியாற்றியுள்ளேன். இந்த நூல், நான் நண்பரோடு உரையாடுவது போல் அமையவேண்டும் என ஆசைப்பட்டு, அவ்வாறு எழுதியுள்ளேன்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வெளியிட டி.எம்.சௌந்தர்ராஜன் நூலைப் பெறவேண்டுமென்பெது என் விருப்பம். அதற்கு நிகரானவர்களாக, நான் நடிகர் கமல்ஹாசனையும், பாடகி P.சுசீலாவையும் கருதுகிறேன். இந்தப் புத்தகத்தை சரிபார்த்து உதவி செய்தவர் ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல்” என்றார்.

மதன்’ஸ் பேண்ட் (Madhan’s Band)-இன் இசை கச்சேரியுடன், இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி தொடங்குகிறது. முறையே, இசை கச்சேரியும், புத்தக வெளியீட்டு நிகழ்வும் முடிந்ததுமே, அதன் ஒளிபரப்பு, பிளாக் ஷீப் டிவி அலைவரிசையிலும், பிஎஸ் வேல்யூ ஓடிடி (BS Value OTT) தளத்திலும் விரைவில் பதிவேற்றப்படும்.