
மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடுகிறார். கதையின் நாயகனாக அமீர், கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம் வெற்றிகரமாக மறு பிரேவசம் செய்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர். பாடல்களை பா.விஜய் எழுத, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.
படம் விரைவில் வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், இயக்குநர் அமீர், மௌனம் பேசியதே படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்த 20 வருடங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவரைக் கெளரவிக்கும் விதமாகப் படக்குழுவினரால் அவருக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது.
இயக்குநர் சுப்பிரமணிய சிவா, “இந்தப் படத்தில் நானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அமீர் கதாநாயகன் மட்டுமல்ல. இந்தப் படத்தில் காதல் நாயகனாகவும் நடித்துள்ளார். இதுவரை அவரைக் கோபக்காரராக, அநீதிக்காக குரல் கொடுப்பவராகப் பார்த்திருப்போம். இதில் காதல் மற்றும் அரசியல் இரண்டிலும் பின்னிப் பிணைந்து நடித்து உள்ளதையும் பார்க்கலாம்” என்று கூறினார்.
நடிகர் இமான் அண்ணாச்சி, “ஒரு செட் பிராப்பர்ட்டி மாதிரி படப்பிடிப்பின்போது இயக்குநர் அமீருடன் கூடவே பயணிக்கும் விதமாக எனது கதாபாத்திரம் அமைந்துள்ளது. குறிப்பாக இந்தப் படத்தில் ஒரு சண்டைக்காட்சியை மூன்று நாட்கள் படமாக்கியபோது அமீர் ஒரு பேருந்துக்குள் வசமாகச் சிக்கிக் கொண்டு பட்ட அவஸ்தைகள், அந்தச் சமயத்தில் அவருடன் நடைபெற்ற நகைச்சுவை நிகழ்வுகள் எல்லாமே இனிமையானவை. யோகி படத்திற்குப் பிறகு, இந்த ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படம் அமீருக்கு உலக அளவில் மிகப் பெரிய இடத்தை பெற்றுத் தரும்” என்று கூறினார்.
நடிகரும் இயக்குநருமான ராஜ்கபூர், “அநேகமாக ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் முதல் சினிமா மேடை இதுவாகத்தான் இருக்கும். அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஒரு எதார்த்தமான அரசியல்வாதியாக அமீர் நடித்துள்ளார். இந்தப் படத்தில் காதலுக்காக அரசியலில் ஜெயிக்கப் போராடும் ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். அரசியலில் அவர் அழகாகக் காய்நகர்த்தும் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு இந்தப் படம் இன்னொரு மாநாடு போல வெற்றிப்படமாக அமையும்” என்று கூறினார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “இந்தப் படத்தின் டைட்டில் எனது மனதுக்கு நெருக்கமான, அதேசமயம் இப்போது இருக்கும் சூழலில் தேவையான ஒரு தலைப்பும் கூட. என் படங்களைக் கூட நான் வெளி நிறுவனங்களிடம் கொடுத்துதான் வெளியிட்டு வருகிறேன். ஆனால் அமீர் மீது கொண்ட மதிப்பால் இந்தப்படத்தை நான் வெளியிடுவது என முடிவு செய்தேன். அவருடன் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன். இது ஒரு தொடக்கம்தான். அரசியலையும் அமீரையும் தவிர்க்கவே முடியாது. சத்யராஜ், கவுண்டமணி போல இந்தப் படத்திற்கு பிறகு அமீர், இமான் அண்ணாச்சி என ஒரு காமெடிக் கூட்டணி உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்று கூறினார்.
நடிகர் ராஜசிம்மன், “இந்தப் படம் நிறைய நாட்கள் தயாரிப்பில் இருந்தது. வேறு யாராவது என்றால் இதைக் கிடப்பில் போட்டுவிட்டு சென்று இருப்பார்கள். ஆனால் இயக்குநர் ஆதம்பாவாவும் அமீரும் விடாமல் நின்று ரிலீஸ் வரை கொண்டு வந்து உள்ளனர். இந்தப் படத்தில் நடிப்பதற்காக திடீரென ஒரு நாள் படப்பிடிப்பிற்குக் கிளம்ப வேண்டியிருந்ததால், கோவையிலிருந்து இருசக்கர வாகனத்திலேயே சென்னை வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அந்த அளவுக்கு இந்தப் படம் எனக்கு நெருக்கமான ஒன்று” என்று கூறினார்.