லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன். இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ‘பெட்டிக்கடை’ , ‘பகிரி’ ஆகிய படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார்.
முக்கிய வேடங்களில் லால், எஸ்.ஏ. சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, துருவா, ‘மிக மிக அவசரம்’ புகழ் ஸ்ரீபிரியங்கா, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை கார்த்திக் மேற்கொண்டுள்ளார். ‘தமிழ்க் குடிமகன்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் சென்னையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
படத்தின் இயக்குநர் இசக்கி கார்வண்ணன் பேசியதாவது…
மண்ணில் பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நல்லவர்களே, ஆனால் அவர்கள் வளர்க்கப்படும் விதத்தில் தான் நல்லவர்கள் ஆவதும் கெட்டவர்கள் ஆவதும் இருக்கிறது. இப்படத்தில் சாதி சார்ந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் காட்ட முனைந்திருக்கிறோம். நாங்குநேரி சம்பவம் மிகுந்த மனக்கொதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சாதியம், குலத்தொழில் குறித்து இப்படத்தில் கூறியுள்ளோம். அனைவரும் திரையங்கிற்கு வந்து திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார்.
திரைப்படத்தின் பாடலாசிரியர் விவேகா பேசியதாவது…
தமிழர்களின் வாழ்க்கை என்பது தாலாட்டில் தொடங்கி ஒப்பாரியில் முடியும் வாழ்க்கை முறை. நம் வாழ்க்கை முறையில் ஒப்பாரிக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எங்கள் ஊர் பகுதியில் ஒப்பாரி பாடலுக்கு என்றே பேர் பெற்ற பல பாடகர்கள் இருந்திருக்கின்றனர். இப்படத்தில் வரும் ஒரு ஒப்பாரி பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என்று நம்புகிறேன். சாம். சி.எஸ் உணர்வுபூர்வமான இசையை இப்படத்திற்கு கொடுத்துள்ளார். இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் காட்சிகள் மிகவும் காத்திரமாக உருக் கொண்டு திரைக்கு வந்திருக்கிறது. கண்டிப்பாக இப்படம் மக்கள் மத்தியில் ஒரு அசைவை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். என்று பேசினார்.
நடிகை தீபிக்ஷா பேசியதாவது…
இப்படம் சாதி தொடர்பான கதை என்று தெரிந்ததும் முதலில் இப்படத்தில் நடிப்பதற்கு நான் சற்று தயங்கினேன். ஆனால் முழுக்கதையையும் கேட்டப் பின்னர் தான் இது சமத்துவத்தைப் பற்றிப் பேசும் கதை என்பதை புரிந்து கொண்டேன். நான் இயக்குநர் சேரன் மற்றும் இசையமைப்பாளர் சாம்.சிஎஸ் ஆகியோரின் தீவிர ரசிகை. இயக்குநர் சேரனோடு நடித்தது மறக்கமுடியாத அனுபவம். கண்டிப்பாக இப்படத்தை அனைவரும் திரையரங்கிற்கு வந்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எழுத்தாளர் ராமசுவாமி பேசியதாவது…
முதலில் இயக்குநர் என்னிடம் கதை சொன்ன போது நான் லால் போன்ற திறமையான நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறதே என்று எண்ணி இந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டேன். ஆனால் படப்பிடிப்பில் இயக்குநர் என்னை பெரும்பாலும் பிணமாக உட்கார வைத்துவிட்டார். இதனால் மற்றவர்கள் எப்படி நடிக்கிறார்கள் என்பதைப் பார்க்கவோ இல்லை அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு நடிக்கவோ வாய்ப்பு கிடைக்கவில்லை. முன்னோட்டக் காட்சிகளைப் பார்க்கும் போது இயக்குநர் அற்புதமான வசனங்களை எழுதியிருப்பது தெரிகிறது. நாங்குநேரி சம்பத்தைப் பற்றி வெட்டப்பட்ட மாணவனின் தங்கை பேசும் போது, “மூன்று அண்ணன்கள் வெட்டிவிட்டார்கள்” என்று பேசுகிறாள். அது தான் மனிதம். அந்த மனிதத்தைப் பேசும் படமாக தமிழ்குடிமகன் உருவாகி இருக்கிறது. அது நிச்சயம் வெற்றி பெறும்” என்று பேசினார்.
நடிகரும் இயக்குநருமான ரவிமரியா பேசியதாவது…
எல்லாத் திரைப்படங்களையும் கலைப்படமாகவோ சமூகப் படமாகவோ தான் எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. மக்களை சிரிக்க வைக்கும் படியான கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு திரைப்படங்களும் வர வேண்டும் என்பது எனது கருத்து. நான் சற்று வெள்ளையாக இருப்பதால் இப்படத்தில் சில முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. நான் இயக்குநர்களிடம் கூறிக் கொள்ள விரும்புவது என்னவென்றால் தமிழ்நாட்டில் பெரும்பாலான நபர்கள் வெள்ளையாகவும் இருக்கிறார்கள். அதனால் கருப்பாகத்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம், என்று கேட்டுக் கொள்கிறேன். இப்படம் நாட்டிற்கு முக்கியமான ஒரு விசயத்தைப் பேசுகிறது. அதனால் இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறேன். வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி என்று பேசினார்.
நடிகர் அருள்தாஸ் பேசியதாவது…
இசக்கி கார்வண்ணன் இப்படத்தை வெற்றிப்படமாக உருவாக்கியுள்ளதுடன், பார்வையாளர்களிடம் தாக்கத்தையும் ஏற்படுத்துவார் என்று வாழ்த்துகளை சொல்லி விடைபெறுகிறேன். என்று பேசினார்.
நடிகர் பொன்வண்ணன் பேசியதாவது…
இப்படத்தின் இயக்குநர் கார்வண்ணனை எனக்குப் பல ஆண்டுகளாகத் தெரியும். மிகவும் பிடிவாதக் காரன். அது போல் இப்படத்தின் நாயகன் சேரனையும் பல ஆண்டுகளாகத் தெரியும். சேரனும் மிகவும் பிடிவாதம் உள்ளவர். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தை எடுக்கப் போகிறார்கள் என்றதும் எப்படி ஒத்துப் போகும் இருவரும் அடித்து மல்லுக்கட்டிக் கொண்டு உருளப் போகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் படத்தை சிறப்பாக திரைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அதுவே மிகப்பெரிய வெற்றி தான்.
இப்படத்தை நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன் என்பதால் சில விசயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இப்படத்தில் ஏற்கனவே இயக்குநர் பாதி ஜெயித்துவிட்டார் என்றே சொல்லுவேன். ஏன் என்றால் கதாபாத்திரங்களுக்கு நடிகர்கள் நடிகைகளையும் டெக்னீசியன்களையும் தேர்வு செய்வது என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பணி. அதை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன்.
இந்த படத்தில் பாடல்கள் மிகக் குறைவு, ஆனால் பின்னணி இசை மிக முக்கியம் என்று சொல்லலாம். கதையில முதல் ஃபிரேமில் இருந்து கடைசி ஃபிரேம் வரை நம்மை எங்கேஜிங்காக வைப்பது மிகவும் அவசியம். அது இந்த படத்தில் முழுமையாக வொர்க் ஆகியுள்ளது என்று நான் நினைக்கிறேன். ஒரு பார்வையாளனாக, ஒரு ரசிகனாக இந்த திரைப்படத்தை நான் ரசித்து பார்த்தேன். என்று பேசினார்.
நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி பேசியதாவது…
படத்தை பற்றி சொல்லவேண்டும் என்றால் ‘தமிழ்க் குடிமகன்’ என்ற தலைப்பே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது. தமிழக அரசியல் சூழலில் சாதி பற்றி இப்படம் பேசுகிறது. இப்படம் யாரையும் கோபப்படுத்தாமல், கேள்வி கேட்கத் தூண்டாமல், எதிர்வினை ஆற்றத் தூண்டாமல் அனைவரையும் ஒத்துக் கொள்ள வைக்கும் என்பதே இப்படத்தின் வெற்றி என்று நான் நினைக்கிறேன். இப்படம் வெற்றிகரமான படமாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
நடிகர் சரத்குமார் பேசியதாவது…
என் அன்பு சகோதரர் சேரன் நடித்த ‘தமிழ்க்குடிமகன்’ அனைவரும் பார்க்க வேண்டிய படம். நான் இங்கு வந்தது என் நண்பன் சேரனுக்காக மட்டுமே. உண்மை நிலையை எடுத்து கூறும் படமாக ‘தமிழ்க்குடிமகன்’ இருக்கும். குலத்தொழில் பற்றி இதில் பேசி இருக்கிறார்கள். அந்த முறையை உடைக்கின்ற படமாக ‘தமிழ்க்குடிமகன்’ இருக்கப் போகிறது. நானும் அரசியலுக்குள் வரவதற்கு முன்பு வரை என் உடன் படித்த நண்பரக்ள் யார் என்று எனக்குத் தெரியாது. நான் யார் என்று அவர்களுக்குத் தெரியாது. ஆனால் நான் அரசியலுக்குள் வந்தவுடன் எனக்கு முத்திரை குத்தி விட்டார்கள். நான் உண்மையாகவே சமத்துவத்தை விரும்புபவன். இப்படம் அந்த சமத்துவத்தைப் பேசுவதால் கண்டிப்பாக வெற்றி ப் படமாக அமையும் என நம்பி அவ்வாறே அமைய வாழ்த்துகிறேன்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பேசியதாவது…
பெரும்பாலான இசை வெளியீட்டு விழாக்களில் இசையமைப்பாளர்கள் கவர்னர் போல் தான் கலந்து கொள்வார்கள். ஏனென்றால் நிகழ்வில் பலரும் படத்தின் இசையைப் பற்றி பாடல்களைப் பற்றிப் பேசாமல் ஏதேதோ பேசுவார்கள். இங்கும் அது நடந்தது. ஆனால் இன்று இங்கு பலரும் பேசிய விசயம் எனக்கு சந்தோசத்தை கொடுத்தது. ஏனென்றால் இப்படத்தின் இசையைப் பற்றி பேசுவதை விட, இன்று இந்த நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்கள் சாதியக் கொடுமைகளைப் பற்றிப் பேசியது இந்த சமூகத்திற்கு மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன். நானும் சாதியத்திற்கு எதிரான என் பங்கை இசை மூலம் கொடுக்க விரும்புவேன். கொடூரமான ஜாதி வெறியர்களைக் காட்டும் போது அவர்களை டம்மி செய்வது போல் இசையமைக்க வேண்டும் என்ற ஆவல் மேலெழும். ஆனால் திரைப்படம் வேறொன்றைக் கோரும். அதனால் பல நேரங்களில் அதை நான் செய்ய இயலாது. நிறைய திரைப்படங்களுக்கு நான் இசையமைத்திருக்கிறேன். ஆனால் இந்த படத்திற்கு இசையமைத்தது குறித்து மிகவும் பெருமை அடைகிறேன். நல்ல கதை என்பது வெளி உலகத்திற்கு தெரிய வேண்டும், கண்டிப்பாக இத்திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும். இயக்குநர் இசக்கி கார்வண்ணன் அவர்களுக்கு நன்றி.
இயக்குநர் மாரிசெல்வராஜ் பேசியதாவது…
‘தமிழ்க்குடிமகன்’ ஒரு நல்ல திரைப்படமாக இருக்கும், இதில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். கண்டிப்பாக இப்படம் பெரிதாக பேசப்படும். என்று வாழ்த்திப் பேசினார்.
இயக்குநர் அமீர் பேசியதாவது…
இப்படம் உங்களுடைய சிந்தனையில் மாற்றத்தை உருவாக்கும் என்றால் அது கண்டிப்பாக சாதியை ஒழிக்க பங்காற்றும். என்றும் மனிதனாக வாழ்கிறேன் என்று கூறி விடைபெறுகிறேன். என்று பேசினார்.
இயக்குநர் மற்றும் இத்திரைப்படத்தின் நாயகன் சேரன் பேசியதாவது…
நான் பேசுவதற்கு என்று புதிதாக ஏதும் இல்லை. எனக்கு முன்னர் பேசிய என் நண்பர்களே எல்லாவற்றையும் பேசிவிட்டனர். அனைவரும் திரையரங்குகளில் வந்து திரைப்படத்தை பார்க்க வேண்டும். புத்திசாலித்தனமான திரைப்படம் இது. சாதிகளை ஒழிக்க வேண்டும் போன்ற நிறைய நல்ல விஷயங்களை இத்திரைப்படத்தில் சொல்லி இருக்கிறோம். என்று பேசினார்.