Shadow

சித்தா விமர்சனம்

சிறு குழந்தைகள் கைகளில் போன் கொடுப்பதும், அவர்கள் போனில் இருக்கும் விளையாட்டுகளுக்கு அடிமையாவதும் என்ன மாதிரியான விளைவுகளை எல்லாம் ஏற்படுத்தலாம் என்பதை பதைபதைப்புடனும், பொறுப்புணர்ச்சியுடனும் பேசி இருக்கிறது “சித்தா”  திரைப்படம்.  சித்தப்பா என்பதை சுருக்கி “சித்தா, சித்தா” என்று கூப்பிடுவதையே  படத்தின் தலைப்பாக வைத்திருக்கின்றனர்.

அண்ணன் மறைவுக்குப் பின்னர் தன் அண்ணி மற்றும் அவர்களின் 8 வயது குழந்தையுடன் வாழும் ஈஸ்வரனாகிய சித்தார்த்தின் வாழ்க்கை இயல்பான மகிழ்ச்சியுடன் செல்கிறது. சிறுவயதில் தொலைத்த காதலியும் கூட எதிர்பாராவிதமாக மீண்டும் சித்தார்த் வாழ்க்கையில் வந்து ஐக்கியம் ஆகிறாள்.  சித்தார்த்திற்கு தன் அண்ணன் மகள் ஈஸ்வரி என்றால் உயிர்.  அது போல் சித்தார்த்தின் பள்ளிகாலத் தோழன் வடிவேலுவுக்கு அவனின் அக்கா மகள் வைஷ்ணவி என்றால் உயிர். இவர்கள் எல்லோரும் ஒரு குடும்பம் போல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வர, அவர்களின் மகிழ்ச்சியை குலைப்பது போல் அடுத்தடுத்து தொடர்ச்சியாக சில சம்பவங்கள் நடக்க, இதனால் இந்த நால்வரில் யாரின் வாழ்க்கையெல்லாம் திசைமாறிப் போனது என்பதை விரிவாகப் பேசுகிறது சித்தா திரைப்படத்தின் திரைக்கதை.

குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் கடினமாகி வரும் காலகட்டம் இது. அதிலும் பெண் குழந்தைகளை வளர்ப்பதும், அவர்களை பாதுகாப்பதும் எவ்வளவு சிக்கல் நிறைந்ததாக இந்த சமூகத்தில் மாறி வருகிறது என்பதை இத்திரைப்படத்தை பார்க்கும் போது யோசிக்கத் தோன்றுகிறது. பெண் பிள்ளைகளைப் பெற்ற ஒவ்வொரு தகப்பன்மார்களுக்கும் படத்தைப் பார்க்கும் போதே இதை தன் பிள்ளைக்கு சொல்லிக் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்திவிட வேண்டும் என்று மனம் துடியாய் துடிப்பதே இப்படத்தின் வெற்றிக்கு சான்று.

பெண் குழந்தைகள் மீது சிறுவயதிலேயே நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல் தொடர்பான  கதையாக இருப்பினும் அதை சமூக அக்கறையுடனும்,, கலை நேர்த்தியுடனும் அணுகியிருக்கும் இயக்குநர் அருண்குமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  இரு குழந்தைகளும் மான் பார்க்க பழனி மலை அடிவாரத்தில் இருக்கும் அய்யனார் கோவில் காட்டுக்குச் செல்லுவோம் என்று பேசத் தொடங்குவதில் இருந்தே திரைக்கதை தீப்பிடித்தது போல் பயணிக்கத் துவங்குகிறது. அதுவும் ஈஸ்வரியை தேடி அலையும் காட்சியும், அவள் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என்கின்ற செய்தி வரும் போது, அதை உறுதிபடுத்திக் கொள்ள பிணவறை செல்லும் காட்சியும் மனதை ரணம் ஆக்குகிறது.

அது போல் அந்த கொலைகாரனை தேடிச் செல்லும் பயணமும், அந்த கொலைகாரனுக்கான பாத்திர வார்ப்பும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. பள்ளியில் படிக்கும் குழந்தைகள் தன் அண்ணன் மகள், அவளைத் தேடும் காட்சிகள், போலீஸ் பின்னணி கொண்ட நண்பன் வடிவேல் போன்ற விடயங்கள் சற்று ‘ராட்சசன்’ திரைப்படத்தை நினைவூட்டுவதாக இருந்தாலும் கூட, இரண்டின் திரைக்கதையும் வேறு வேறு திசைகளில் பயணிக்கின்றன.

உணர்வுரீதியிலான பிடித்தமும், காட்சிக்கு காட்சி விறுவிறுப்பும் த்ரில்லும் நிறைந்த திரைக்கதை படத்திற்கு பெரும் பலம் சேர்க்கிறது. குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் இரண்டு சிறுமிகளும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.  நடிகர் சித்தார்த் தன் சாக்லேட் பாய் இமேஜை விட்டு இப்படத்திற்கு எப்படி பொருந்தப் போகிறார் என்கின்ற  அத்தனை கேள்விகளையும் தன் அற்புதமான நடிப்பினால் அடித்து உடைத்திருக்கிறார் சித்தார்த்.

நாயகியாக நடித்திருக்கும் நிமிஷா சஜயனும் அட்டகாசமாக நடித்திருக்கிறார்.  ஒரு தூய்மைப் பணி செய்யும் துப்பரவு பணியாள் பெண்ணாகவே தன் தோற்றத்தில் நடிப்பிலும் மாறி ஆச்சரியப்படுத்துகிறார்.  அது போல் நண்பன் வடிவேலாக நடித்திருப்பவரும், அண்ணியாக வரும் பெண்மணியும் என அனைவருமே அற்புதமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

பாலாஜி சுப்ரமணியனின் ஒளிப்பதிவும்,  திபு நிமன் தாமஸ் மற்றும் விஷால் சந்திரசேகரின் இசையும் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக இருந்து பாசத்தையும் பயத்தையும் ஒரு சேர விருந்து வைக்கின்றன.

இடாக்கி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக சித்தார்த் இப்படத்தை தயாரித்து நடித்திருக்கிறார்.  ‘பண்ணையாரும் பத்மினியும்’ ‘சேதுபதி’ படங்களை இயக்கிய அருண்குமார் இப்படத்தினை இயக்கி இருக்கிறார்.  இந்த வருடத்தின் முக்கியமான படங்களில் கண்டிப்பாக சித்தாவும் இருக்கும் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது.