தாயம் என்ற தமிழ்ப்படம், இந்தியாவின் முதல் சிங்கிள் ரூம் த்ரில்லராக எடுக்கப்பட்டுள்ளது.
“நான் நிறைய ஹாலிவுட் படங்கள் பார்ப்பேன். சிங்கிள் ரூமில் எடுக்கப்பட்ட படங்கள் ஏராளமாய் ஹாலிவுட்டில் வந்திருக்கின்றன. என் படத்தில், எந்தக் காட்சியிலும் அந்தப் படங்களின் சாயல் வந்துவிடக் கூடாதென மிகக் கவனமாக இப்படத்தை எடுத்துள்ளேன்” என்றார் தாயம் படத்தின் இயக்குநர் கண்ணன் ரங்கசாமி.
எட்டுக் கதாபாத்திரங்கள் ஓர் அறையில், நேர்க்காணலுக்காகக் கூடுகின்றனர். எதனை நோக்கி அந்த நேர்க்காணல் நகர்கிறது என்பதுதான் தாயம் படத்தின் கதை. நல்லதொரு ஹாரர் சஸ்பென்ஸ் த்ரில்லராக வந்திருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். டீசரையும் ட்ரெயிலரையும் மட்டுமே பார்த்துக் கவரப்பட்டு, காஸ்மோ வில்லேஜ் சிவக்குமார் படத்தை வெளியிட முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் டீசரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த முகமூடியை (ப்ரோஸ்தெட்டிக் மாஸ்க்), ஸ்கைப் மூலமாகவே வடிவமைப்பினைச் சொல்லி, ஹாலிவுட் ஸ்டுடியோவில் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டு, இங்கே கொண்டு வரப்பட்டுள்ளது. சிறிய பட்ஜெட் படமெனினும், உலகத்தரமான பின்னணி இசையின் பொருட்டு, ஐரோப்பாவின் மேசிடோனியாவிலும் ஃப்ரான்ஸிலும் ஆர்க்கஸ்ட்ரேஷன் செய்துள்ளனர். ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ போன்ற படங்களுக்கு வேலை செய்த இசைக்குழு என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுக இசையமைப்பாளரான சதீஷ் செல்வம், இந்தப் படத்திற்காக சுமார் 60 தீம்கள் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடல்கள் தேவைப்படாத இப்படத்திற்கு, இயக்குநரின் பேச்சையும் மீறி படத்தின் கதைக்கு உதவுமாறு பாடல்களை உருவாக்கியுள்ளார் சதீஷ் செல்வம். “கொலை ஒன்றே” எனும் அப்பாடலை முத்தமிழ் எழுத, சக்தி ஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார். ஐரா அகர்வால் எனும் புதுமுகம் நாயகியாக நடிக்க, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் நாயகன் சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடிக்கிறார். 15 நாட்களில் படப்பிடிப்பினை நிறைவு செய்துள்ளனர்.