Shadow

தில்லுக்கு துட்டு 2 விமர்சனம்

Dhillukku-Dhuttu-2-movie-review

மாயாவிடம் யாராவது காதலைச் சொன்னால், அவர்களை அவளது தந்தை துர்மந்திரவாதியான கருடராஜா பட்டதாரி ஏவி விட்ட துஷ்ட சக்தி உண்டு இல்லை எனச் செய்துவிடுகிறது. சந்தானம் மாயாவிடம் காதலைச் சொல்ல, அந்தப் பேய் அவரையும் போட்டுப் புரட்டியெடுக்கிறது. சந்தானம் காதலில் எப்படி வெல்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

ஜில்.. ஜங்.. ஜக் படத்தில் பை எனும் பைந்தமிழாகக் காமெடியில் கலக்கியிருக்கும் பிபின், இப்படத்தில் துர்மந்திரவாதி கருடராஜ பட்டாதரியாக வருகிறார். அவர் முதலில் டெரராக அறிமுகமாகி, சந்தானம் அவரைச் சந்தித்த பின் நகைச்சுவைக்கு  மாறுகிறார். தில்லுக்கு துட்டு படத்தில், இரண்டாம் பாதி நகைச்சுவைக்குப் பொறுப்பேற்றிருந்த நான் கடவுள்’ ராஜேந்திரன், இப்படத்தின் சந்தானத்தின் மாமாவாக படம் முழுவதும் வந்தாலும், முதற்பாகம் அளவிற்கு நகைச்சுவைக்கு உதவவில்லை.

நாயகியாக, மாயா பாத்திரத்தில் ஸ்ரீதா சிவதாஸ் அறிமுகமாகியுள்ளார். அவர் தோன்றும் முதல் இரண்டு காட்சிகளில், இவர் நாயகி தானா அல்லது வேறு ஏதேனும் பாத்திரத்தை ஏற்று நடிப்பவரா என சந்தேகத்தை உண்டு பண்ணுகிறார். ஆனால், பேயின் அறிமுகத்தில் அசத்தியுள்ளனர். பேய் சம்பந்தமான யட்சினுடைய கிளைக்கதையும் நன்றாக உள்ளது.

சக்கரம்மா தேவியாக வரும் ஊர்வசியை இன்னும் நன்றாக நகைச்சுவைக்குப் பயன்படுத்தியிருக்கலாம். குடித்து விட்டு, குரல் கட்டியது போல் பேசும் காட்சிகளில் சந்தானம் மிக அந்நியமாக இருக்கிறார். முன்பு, அவர் மற்றவர்களைக் கலாய்க்கும் காட்சிகளை என்ஜாய் செய்து செய்வார். இப்படத்திலும் அவரது வழக்கமான கவுன்ட்டர்கள் இருந்தாலும், அது பட்டும் படாமலும் இருப்பதாகப் படுகிறது. அவரது தில்லைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். அவருக்குக் காதல் வரும் பொழுது கூட முகத்தில் மகிழ்ச்சியைக் காட்டாமல், கொஞ்சம் உறைந்தாற்போல் முகபாவங்கள் அனைத்தும் பிளாஸ்டிக் ரியாக்ஷனாகளாகவே உள்ளன. ராம்பாலாவின் கதை நன்றாக இருந்தாலும், த்ரிலும் நகைச்சுவையும் திரைக்கதையில் பிரதிபலிக்கவில்லை.