Shadow

டிக்கிலோனா விமர்சனம்

ஓர் அம்பாஸிடர் கார் டிக்கியில் இருந்து படம் தொடங்குகிறது. ஷங்கரின் ‘ஜென்டில் மேன்’ உலகத்திற்கு அளித்த indoor game களில் ஒன்று ‘டிக்கிலோனா’. இந்தப் படமும், சில விளையாட்டுகளை (!?) அடிப்படையாகக் கொண்டதே என்பதால் இப்பெயர் பொருத்தமாக இருக்கும் என படக்குழு தீர்மானித்திருக்கலாம்.

‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா; நயன்தாராக்கு த்ரிஷாவே மேல்’ என்பது தான் படத்தின் ஒன்லைன்.

எதிர்பார்ப்புகள் பொய்த்து விரக்தியான வாழ்க்கை வாழும் ஒருவனுக்கு கால இயந்திரம் (Time machine) கிடைத்து, தனது கடந்த காலத்தை சரி செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால்? டிக்கிலோனா படத்தின் கதை அது தான். தன் மணவாழ்க்கையை மாற்றிக் கொண்டால் தன் ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாறும் என காலப்பயணம் மேற்கொள்கின்றான் மணி.

காலப்பயணக் (Time travel) கதையை நகைச்சுவையுடன் சொல்ல முற்பட்டுள்ளார் இயக்குநர் கார்த்திக் யோகி.

சந்தானம் மிக ஸ்லிமாக ஸ்மார்ட்டாக உள்ளார். க்ளைமேக்ஸில், வெவ்வேறு டைம்லைனைச் சேர்ந்த மூன்று சந்தானங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். ஒருவர் மன வாழ்க்கையைத் தொடங்கப் போகும் மாப்பிள்ளை மணி; இன்னொருவர், அம்மனவாழ்க்கையை ஏழு வருடம் வாழ்ந்து நொந்து போன ஈபி (EB) மணி; டைம்லைனை மாற்றிப் புதிய வாழ்க்கை தொடங்கும் ஹாக்கி ஆட்டக்காரர் மணி. 2020 க்கும் 2027 க்கும் மாறி மாறி கதை பயணித்தாலும் எந்தக் குழப்பமும் இல்லாமல் உள்ளது திரைக்கதை.

யோகி பாபுவிற்கும், சந்தானத்திற்கும் குறைவான காம்பினேஷனிலேயே காட்சிகள் உள்ளன. உச்ச நட்சத்திரங்களையே தன் டைமிங்கால் போட்டு வாங்கும் யோகி பாபு, ஏனோ சந்தானத்தைக் கலாய்க்காமல்.ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டெயின் செய்துள்ளார். ஆனால் சந்தானம் அனைவரையும் போலவே யோகி பாபுவைக் கலாய்க்கிறார். அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி பெரிய அளவில் இல்லாவிட்டாலும், காட்சிக்குத் தேவையான அளவு ஒத்துழைப்பை இருவருமே நல்கியுள்ளனர். ஆல்பர்ட் எனும் பாத்திரத்தில் வரும் யோகி பாபு, ஆல்பர்ட் எயின்ஸ்டீனாக மாறும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

அனகா, ஷெரின் காஞ்ச்வாலா என இரண்டு கதாநாயகிகள். கதையின் காரண கர்த்தாவாக இருக்க வேண்டியவர்கள் கவர்ச்சிக்காக மட்டும் எனச் சுருக்கப்பட்டு உள்ளனர். ‘ஓ.. மை கடவுளே’ என நினைவு சென்று திரும்புகிறது. நகைச்சுவைப் படம் என்பதாலோ என்னவோ, கல்யாணத்திற்கான பின்னான சண்டையில் எவ்வித அழுத்தத்தையும் அளிக்காமல் கடக்கிறது திரைக்கதை. மனைவி என்றாலே பிரச்சனை தானே என்பது போல், விக்டிம் பிளேமிங்கை நகைச்சுவையாகக்(!?) கடந்து விடுகின்றனர். அத்தகைய காலப்பயணம் ஏன் மணிக்கு அவசியமாகிறது என்ற சீரியஸ்னஸ் மிஸ் ஆவது பெரும் குறை. கதை, ஒற்றைப் பரிமாணத்தில் சந்தானத்தின் நிம்மதி, சந்தானத்தின் வாழ்க்கை, சந்தானத்தின் கனவு என ஆண்வயமாக சந்தானத்தைத் தாண்டி விலகாமல் பயணிக்கிறது. 

மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே ஒப்புக்குச் சப்பாணியாகவே உள்ளனர். மூன்று சந்தானங்களையும், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை எப்படி மாற்றியுள்ளது என்ற வேறுபாடில்லாமல், ஒரே போலவே பேசி, ஒரே போலவே யோசித்து, ஒரே போலவே ரியாக்‌ஷனும் தருகின்றனர். சந்தானம் ஸ்கோர் செய்திருக்க வேண்டிய இடம் இது. நகைச்சுவைப் படம்தானே என்ற எண்ணம், அலட்சியத்திற்குக் காரணமாக இருக்கலாம். அட்வைஸ் செய்வதற்காக வரும் மழலைத்தமிழ் பேசும் ஹர்பஜன் சிங் கதாபாத்திரத்தையாவது கதையின் திருப்புமுனைக்குப் பயன்படுத்தியிருக்கலாம்.

நிழல்கள் ரவியைக் கதை சொல்ல வைத்து, கே.ஜி.எஃப். படத்தின் ஸ்ஃபூப் போல் கதையை நகர்த்தியுள்ளது சுவாரசியம். லொள்ளு சபா மாறன், முனீஷ்காந்த், ஆனந்த் ராஜ், ஷா ரா, விஞ்ஞானி ஸ்டான்ஃபோர்ட் ஆக வரும் வரும் அருண் அலெக்ஸாண்டர் ஆகியோர் கலகலப்பிற்கு உதவியுள்ளனர். A1, தில்லுக்கு துட்டு போல் முழு நீள நகைச்சுவைப் படமாக இல்லாவிட்டாலும் கூட, ரசிக்கும்படியாக ஃப்ரெஷாக உள்ளது டிக்கிலோனா.