Search

லாபம் விமர்சனம்

ஒடுக்கப்படும் பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவுக் குரலாக தமிழ்த்திரையில் எஸ்.பி.ஜனநாதனின் குரல் எப்பொழுதும் ஒலிக்கும்.

தன் படங்களின் வழியே எளிய மக்களுக்கு எதிராக இருக்கும் முதலாளித்துவத்தையும், அதற்கு துணைபோகும் அமைப்புகளையும் அரசையும் அவரது படங்கள் கேள்வி கேட்கும். லாபத்திலும் அந்தக் கேள்வியை எழுப்பி, கேள்விக்கான விடைகளை வசனங்களாக அள்ளித் தெளித்துள்ளார்.

கம்னியூசத்தை அவ்வளவு எளிதில் மக்களுக்குப் புரிய வைக்க முடியாது என்ற பொதுப்புத்தியில் சம்மட்டி வைத்து அடிப்பது எஸ்.பி.ஜனநாதனின் பாணி. எதையுமே மிக எளிதாகப் புரிய வைக்கும் வல்லமை அவரிடம் உண்டு. அதை இப்படத்தில் சற்று அதிகமாகவே முயற்சி செய்து பார்த்துள்ளார். லாபத்தைப் பற்றியும் லாபத்தில் இருந்தே அனைத்து ஊழலும் உருவாகிறது என்பதையும் ஒரு குழந்தைக்கு விஜய் சேதுபதி சொல்லிக் கொடுக்கும் காட்சி வழியாகப் படம் பார்ப்பவர்களுக்கும் புரிய வைத்துள்ளார் ஜனநாதன்.

எட்டாண்டுகள் நாடோடியாகத் திரிந்து, ஒரு ஞானி போன்ற தோற்றத்தில் பெருவயல் எனும் தன் சொந்த ஊருக்கு வருகை தருகிறார் பக்கிரி. ஊருக்கு உபகாரன் செய்யும் பக்கிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். வந்ததும் விவசாயச் சங்கத்தலைவர் பதவியினைப் பொறுப்பேற்றுக் கொள்கிறார். ஏற்கெனவே சங்கத்தலைவராக இருந்த ஜெகபதி பாபு விஜய் சேதுபதியின் காத்திரமான செயல்பாடுகளைக் கண்டு எரிச்சல் அடைகிறார். பெரு முதலாளிகள் வளைத்து வைத்திருக்கும் பஞ்சமி நிலங்களை மீட்கும் விஜய்சேதுபதி விவசாயிகளை ஒன்றிணைத்துக் கூட்டு விவசாயத்தைச் செய்ய முயல்கிறார். அதற்கு முட்டுக்கட்டைப் போடுகிறார் ஜெகபதி பாபு. இறுதியில் நிலத்தை பக்கிரி எப்படி மீட்டார் என்பதுடம் லாபக்கணக்கு முடிகிறது.

விஜய்சேதுபதியை எந்தக் கேரக்டரிலும் பொருத்திப் பார்க்க முடியும் என்பது லாபத்திலும் உறுதியாகி இருக்கிறது. கொஞ்சம் உடலில் அவர் கவனம் செலுத்தினால் இன்னும் கனமான பாத்திரங்கள் அவருக்கு அழகாக அமையும். ஸ்ருதிஹாசன் கதாபாத்திரத்தில் ஒரு நல்ல தெளிவு இருந்தாலும், இன்னும் கொஞ்சம் அந்தக் கதாபாதிரத்த வர்ப்பிற்கு வலு சேர்த்திருக்கலாம். வில்லனாக நடிக்க ஜெகபதிபாபு நல்ல தேர்வு.

ஜனநாதன் படங்களில் தொழில்நுட்ப குழுவும் நன்றாக மெனக்கெட்டிருப்பார்கள். இந்தப் படத்திலும் அதை உணர இயலுகிறது. இமானின் சிறப்பான பின்னணி இசை, கதை நகர்வுக்கேற்ற பாடல்கள் என அருமை. ராம்ஜியின் கேமரா கோணத்தில், ஃப்ரேமில் பதிவாகும் எல்லா இடங்களுமே பிரம்மாண்டமாகத் தெரிகிறது.

இயற்கை, ஈ, பேராண்மை, பொறம்போக்கு என்கிற பொதுவுடமை, லாபம் என ஐந்து படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும், எஸ்.பி.ஜனநாதன், தமிழ்த் திரைச்சூழலின் மறக்கவியலாப் படைப்பாளராகத் தனி முத்திரையைத் தன் அரசியலாலும் திரைமொழியாலும் பதித்துள்ளார். தமது படைப்புகளின் வாயிலாக உயிர் வாழும் அமரத்துவம் பெற்ற கலைஞர்கள் வரிசையில் எஸ்.பி.ஜனநாதனும் ஒருவர். காலத்தை உணர்ந்தே, மக்கள் நலனில் அக்கறை கொண்ட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், விவசாயச் சுரண்டல்கள், சட்டங்கள், வர்க்கப் பாகுபாடுகள், முதலாளித்துவ நரித்தனங்கள் என கோப்பைக்கொணா அளவு தமது செவ்வரசியலை வழிய வழிய லாபத்தில் கலந்துள்ளார். புரட்சிகர சிந்தையுடையவர்களுக்குப் படைப்பு என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சமோ, லாபம் கருதும் தொழிலோ இல்லை; கலை என்பது மக்களை ஒன்றிணைத்து, கண்ணுக்குப் புலப்படா மறை விஷயங்களை எடுத்தியம்பும் கருவி. லாபம் திரைப்படமும், அத்தகைய கருவியால் உருவாக்கப்பட்ட ஒரு படைப்பே!

– ஜெகன் கவிராஜ்