32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

”இயக்குநர் அடுத்தடுத்து அதிர்ச்சிகளைக் கொடுத்தார்” – ஜி.வி.பிரகாஷ்

Inbaaraja சேலம் Published: 22/08/2023 9 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

ஜி.வி பிரகாஷ்குமார், கெளரி கிஷன் இருவரும் நாயகன் நாயகியாக நடித்திருக்கும் திரைப்படம் “அடியே”.  இத்திரைப்படம் வரும் ஆக்ஸ்டு 25ம் தேதி அன்று திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.  இப்படத்தில் மதும்கேஷ் பிரேம், ஆர்.ஜே.விஜய், வெங்கட் பிரபு, பயில்வான் ரங்கநாதன், கூல் சுரேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.  மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கிறார். திட்டம் இரண்டு திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கி இருக்கிறார்.  கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டிஸ் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

பேரலல் யுனிவர்ஸ் மற்றும் அல்டர்நேட் ரியாலிட்டி கதைக்கருவை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருக்கும் நிலையில் இப்படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வு சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாயகன் ஜி.வி.பிரகாஷ், நாயகி கெளரி கிஷன், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்,  இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்,  ஒளிப்பதிவாளர்  கோகுல் பினோய், படத்தொகுப்பாளர் முத்தையன் மற்றும் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசியதோடு பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தனர்.

 

.தயாரிப்பாளர் பிரேம்குமார் பேசுகையில், ” எங்கள் நிறுவனத்தின் முதல் திரைப்படமான ‘அடியே’  திரைப்படம்  மிகப்பெரியளவில்  வெற்றியடையும். ஏனெனில்  இத்திரைப்படத்தை மிகவும் வித்தியாசமான திரைப்படமாக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்  உருவாக்கி இருக்கிறார்.  இந்தப் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள்  அனைவரும்  முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.  குறிப்பாக  ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ஒத்துழைப்பு  மறக்க இயலாது.  கேட்கும்  பொழுதெல்லாம்  எந்த  தடையும்  இல்லாமல்  முழு மனதுடன் வருகை தந்து நடித்துக்  கொடுத்தார்.  தொடர்ந்து  நல்ல படங்களை வழங்கி தமிழ் திரையுலகில் தரமான தயாரிப்பு  நிறுவனமாக எங்கள் நிறுவனம் வளரும் என்கின்ற நம்பிக்கை இருக்கிற்து.  இதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க  வேண்டும்  என கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

நாயகி கௌரி ஜி. கிஷன் பேசுகையில்,  ”நான் 96 படத்தில் நடித்தது என்பது என் வாழ்க்கையில் எதிர்பாராமல் நடந்த நிகழ்வு.  அதுபோல் ‘அடியே’ படத்தில் நடித்ததும் எதிர்பாராமல் நடந்த ஒரு நிகழ்வு தான்.  எனக்கு இப்பொழுது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் நான் அடுத்து எந்த படத்தில் நடிக்கலாம் என்கின்ற குழப்பத்தில்  இருந்தேன். சில கதைகள் வந்தன. ஆனால் அதில் எதை தேர்வு செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நான் எப்பொழுதும் அவசரப்பட்டோ உடனடியாகவோ கதைகளை தேர்வு செய்யமாட்டேன். ‘அடியே’ திரைப்படத்தின் கதையை இயக்குநர் எனக்கு போனில் தான் விவரித்தார்.  முதல் பாதி கதை முழுக்க நான் போனில் தான் கேட்டேன். இரண்டாம் பாதி கதையைத் தான் இயக்குநர் எங்கள் வேளச்சேரி வீட்டிற்கு வந்து சொன்னார்.  கதை எனக்குப் பிடித்திருந்தது. மேலும் இப்படம் 96 படத்திற்குப் பின்னர் எனக்கு ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் என்கின்ற நம்பிக்கை வந்தது.  என் கதாபாத்திரம் கண்டிப்பாக எல்லா ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பிடிக்கும் என்கின்ற நம்பிக்கை உள்ளது.  ஏனென்றால் என் கதாபாத்திரம் சற்று தனித்துவமான கதாபாத்திரம் ஆகும்.

இப்படத்தில் நான் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டதற்கு மற்றொரு காரணம் நாயகன் ஜி.வி.பிரகாஷ். அவரின் இசைக்கு நான் அடிமை.  அவர் இப்பொழுது நாயகனாகவும் மிகச்சிறப்பாக நடித்து வருகிறார். அவரோடு நடித்தது அலாதியான ஒரு அனுபவம்.  மேலும் இப்படத்தில் வி.பி சாரும் இருக்கிறார். அவரோடு எனக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்றாலும் அவரோடு நடித்த அனுபவமும் மறக்க முடியாதது.  நான் அவரின் படங்களுக்கு மிகப்பெரிய ரசிகை.  மதும்கேஷ் இப்படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.  இது அவருக்கு முதல்படம் என்பது தெரியாத அளவிற்கு அவர் நடிப்பு சிறப்பாக இருந்தது. நான்கு வருடங்களுக்கு முன்பு நானும் கிட்டத்தட்ட அவர் இருக்கும் அதே இடத்தில் தான் இருந்தேன்.  அதனால் என்னால் அவரின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த கதை மிகவும் சவாலான ஒரு கதை. எங்கள் அனைவருக்குமே டபுள் ஆக்டிங் கதாபாத்திரங்கள்.  நிஜத்தில் ஒரு கதாபாத்திரம். அல்டர்நேட் ரியாலிட்டியில் இன்னொரு கதாபாத்திரம்.  அதுவே மிகவும் புதுமையாக இருந்தது. ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய் இரண்டு யூனிவர்ஸையும் அழகாக தன் ஒளியமைப்பின் மூலம் வித்தியாசப்படுத்தி காட்டி இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தின் ஆல்பத்தில் என் கதாபாத்திர பெயரைக் கொண்டே “வா செந்தாழினி” என்று ஒரு பாடல் வருகிறது.  அப்பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று எண்ணுகிறேன்.  அடியே  படத்தை  ஆகஸ்டு 25ம் தேதி காண திரையரங்கத்திற்கு வருகை தந்தால், ஒரு புதிய படைப்பை கண்டு ரசிக்கும் அனுபவம் உங்கள் எல்லாருக்கும் கிடைக்கும். ” என்று பேசினார். ‌

 

இசையமைப்பாளர்  ஜஸ்டின்  பிரபாகரன்  பேசுகையில்,  ” இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பது  மிகவும்  நிறைவாக  இருந்தது.  ஜி.வி.பிரகாஷ்குமார், கெளரி கிஷன் ஆகியோர் தங்கள் நடிப்பின் மூலம் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.  இயக்குநர் என் பணியை மிகவும் சுலபமாக்கிவிட்டார். மிகச்சிறந்த காட்சிக் கோர்வைகளை படமாக்கி எடுத்துக் கொண்டு வந்திருந்தார்.  ஒளிப்பதிவாளர் கோகுலுடன் நான் பணியாற்றும் ஐந்தாவது படம் இது. அவரது ஒளிப்பதிவில் இருவேறு உலகங்களும் சிறப்பான வித்தியாசங்களுடன் படமாக்கப்பட்டு இருப்பது தெரிகிறது.  அவருக்கு என் வாழ்த்துக்கள்.  அதுபோல்  எடிட்டர் முத்தையன் நான் பின்னணி இசை  இசைப்பதற்கான இடங்களையும் மவுனங்களை கையாள்வதற்கான இடங்களை சிறப்பாக ஒதுக்கி இருந்தார். அது என் பணியை மேலும் எளிதாக்கியது. அவருக்கும் என் நன்றிகள்.  ஜி.வி.பிரகாஷ்குமார் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.  அவருடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம் என்று பேசினார்.

ஒளிப்பதிவாளர்  கோகுல் பினோய்  பேசுகையில், ” படத்தின் கதையை இயக்குநர்  சொன்னவுடன் மிகவும்  சிக்கலான  இந்த  கதையை எல்லோருக்கும் புரியும் படியாக எப்படி  காட்சிப்படுத்தப் போகிறோம் என்பதில் தான் சவால் இருந்தது.  படத்  தயாரிப்பு நிறுவனம், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும்  ஒன்றிணைந்து உழைத்ததால் இது சாத்தியமானது.  அனைவரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி  திரையரங்குகளுக்கு வருகை  தந்து இப்படத்தை பார்த்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

படத் தொகுப்பாளர் முத்தையன் பேசுகையில், ” இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் படத்தொகுப்பை  மேற்கொள்ளும்  போது  இயக்குநரும், நடிகர் ஜீவி பிரகாஷ் குமாரும்  ஏராளமான ஆலோசனைகளை வழங்குவர். ஜீ. வி. பிரகாஷின் சமூகம்  குறித்த  பார்வையும்,  எண்ணங்களும்  எனக்கு  மிகவும்  பிடிக்கும். இந்தப்  படம்  மிகச்  சிறப்பாக  உருவாகி  இருக்கிறது.  அனைவரும்  கண்டு ரசிக்க  வேண்டும்.” என்றார்.

நடிகர்  மதும்கேஷ் பிரேம்  பேசுகையில், ”  இந்த திரைப்படத்தில் முக்கியமான  வேடத்தில்  நடித்திருக்கிறேன்.  இதற்கு  வாய்ப்பளித்த இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு நன்றி.  என்னுடைய கதாபாத்திரம் குறித்து பொதுவெளியில் விவரிக்க கூடாது  என இயக்குநர் நிபந்தனை விதித்திருக்கிறார்.  படப்பிடிப்பு தளத்தில்  புதுமுக  நடிகரான  எனக்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் உள்ளிட்ட  படக் குழுவினர்  சௌகரியமான சூழலை ஏற்படுத்தி பணியாற்ற வைத்தனர். என்றார்.

 

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசுகையில், ” மாலி & மான்வி படத் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிய  பிறகு வேறு தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றுவது சற்று கடினமாகவே  இருக்கும். ஏனெனில் இங்கு அனைவரையும்  சௌகரியமான சூழலில் பணியாற்ற அனுமதிப்பார்கள். படத்தின் தயாரிப்பாளரை முதன்முதலாக சந்தித்தபோது.. வெள்ளை வேட்டி, தாடி.. ஆகியவற்றுடன் ஒரு டான் ஃபீலில் இருந்தார்.  அதன் பிறகு அவருடன் பழகப்  பழக..  அவர்  வில்லன்  இல்லை  ஒரு ஹீரோ என்று தெரிந்து கொண்டேன்.  அவருடன் கிட்டத்தட்ட  ஓராண்டுக்கும்  மேலாக  பழகி வருகிறோம்.  ஒரு  முறை  கூட  அவர்  முகம்  சுழித்தோ… கோபப்பட்டோ.. பார்த்ததில்லை.  எப்போதும்  அவருடைய  முகத்தில்  ஒரு  புன்சிரிப்பு  இருந்து கொண்டே  இருக்கும்.  எங்களை  நம்பி  முதலீடு செய்திருக்கிறார். நாங்கள் கடினமாக  உழைத்து  சிறந்த  படைப்பை  வழங்கி  இருக்கிறோம்  என நம்புகிறோம்.

நானும்,  படத்தொகுப்பாளர்  முத்தையனும்  அலுவலகத்திலேயே  இருப்போம். கிட்டத் தட்ட  பத்து  மாதத்திற்கும்  மேலாக  அலுவலகத்திலேயே  தங்கி படத்தொகுப்புப்  பணிகளை  கவனித்தோம்.  இரவு 12 மணி  அளவில்  கூட ஏதேனும் சிறிய மாற்றம் செய்ய வேண்டும் என விரும்பினால், அவரிடம் சொல்வேன். அவரும் சிரமம் பார்க்காமல் அந்தப் பணிகளை செய்து கொடுப்பார். தொடர்ந்து பத்து  மாதத்திற்கு மேலாக பணியாற்றியதால் அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு சென்று விட்டது. அதன் பிறகு மருத்துவமனையில் இருந்து கொண்டே இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நிறைவு செய்தார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய்யுடன் இணைந்து ஏற்கனவே ‘திட்டம் இரண்டு’  படத்தில்  பணியாற்றியிருக்கிறேன். அவர் ஒரு சிறந்த தொழில் முறை ஒளிப்பதிவாளர். படப்பிடிப்பு தளத்தில் நான் அடுத்த காட்சியும் கோணமும் இப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதற்கான பணிகளை அவர் அங்கு நிறைவேற்றுவார்.

 

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் இசைகூடம்  ஒரு நேர்மறையான அதிர்வலைகளை வெளிப்படுத்தும் இடம் என்பதை உணரலாம். அது ஒருவித போதை போல் இருக்கும். போதை என்றவுடன் தவறாக நினைத்து விட வேண்டாம். இசை மற்றும் நல்ல நட்புறவினால் மதி மயங்கும் சூழலாக  நீங்கள் அதை கருதிக் கொள்ளுங்கள்.

ஏராளமான நண்பர்கள் அங்கு தான் எனக்கு  கிடைத்தார்கள்.  ஜஸ்டின் பிரபாகரனை  எனக்கு  ஏற்கனவே  பிடிக்கும் .  இந்த  படத்தில் பணியாற்றும் போது அவரை நிறைய  பிடித்து விட்டது. எப்போதும்  அமைதியாகவே இருப்பார்.  தொடக்கத்தில்  அவர்  ஒரு  இன்ட்ரோவர்ட்  போலத்தான் இருப்பார்.  ஆனால்  அவருக்குள்  ஒரு  சிறந்த நகைச்சுவை உணர்வாளர் இருக்கிறார்.  அவருடைய இசையமைப்பு இந்த படத்திற்கு மிகப்பெரிய  பலம்.

 

இந்தப்  படத்திற்கு  முதலில்  வேறு  ஒரு  நாயகியை தான் ஒப்பந்தம் செய்திருந்தோம். படப்பிடிப்பிற்கு பத்து நாள் முன்னதாக இந்த நாயகிக்கு பதிலாக வேறு ஒரு நாயகியை தேர்வு செய்யலாம் என நான்தான் தயாரிப்பாளிடம் சொன்னேன். தயாரிப்பாளர் எதுவும் பேசாமல் உங்களின் முடிவு எதுவோ  அதையே  பின்  தொடருங்கள்  என்றார்.

 

இந்த கதைக்கு  பொருத்தமான  ஒரு  நடிகை  தேவைப்பட்டது.  அதனால் கௌரி  கிஷனை  போனில்  தொடர்பு  கொண்டு  படத்தின் முதல் பாதி கதையை  சொன்னேன்.  சொல்லும்  போதே  இவர்கள்  என்  கதையை  கேட்டு நடிக்க  சம்மதிக்க  வேண்டும்  என்று  மனதுக்குள்  பிரார்த்தித்துக் கொண்டேன்.  இரண்டாம்  பாதியை  அவரது  வீட்டிற்கு  சென்று  சொன்னேன். பிறகு  நடிக்க  சம்மதம்  தெரிவித்தார்கள்.  இதற்காக   அவருக்கு   இந்த  தருணத்தில்   நன்றியை  தெரிவித்துக்  கொள்கிறேன்.

 

ஜீ. வி. பிரகாஷ் குமார் எப்போதுமே சந்தோஷமாக இருப்பவர். அவரை பார்த்தவுடன் அவருடன் நட்பு  கொள்ள  வேண்டும்  என்று  எனக்கு தோன்றியது.  அவருக்கு  எப்படியோ  தெரியவில்லை.  அவரிடமும்  ஒரு நகைச்சுவை உணர்வு  பொதிந்திருக்கிறது.  அவர் மனதில் பட்டதை உடனே தெரிவித்துவிடுவார்.  நன்றாக  இருப்பதை  நன்றாக  இருக்கிறது  என்று பாராட்டுவார்.  நன்றாக  இல்லை  என்பதையும்  நன்றாக  இல்லை  என்று சுட்டிக்காட்டுவார். அவருடன் இணைந்து பணியாற்றியதும்  மறக்க  இயலாத அனுபவம்.

 

‘அடியே’  அடிப்படையில்  ஒரு  அழகான  காதல்  கதை.  குறும்பும், வேடிக்கைகளும்  நிறைந்த  கதை.  பேரலல்  யுனிவர்ஸ்  ஆல்டர்நேட் ரியாலிட்டி ஆகியவற்றுடன் கலந்த ஒரு கதை.  ஒரு  வித்தியாசமான திரைப்படம்.  நம்பிக்கையுடன்  கடினமாக  உழைத்திருக்கிறோம்.  ரசித்து ஆதரவளிக்க  வேண்டும்  என கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

 

ஜீ. வி. பிரகாஷ் குமார் பேசுகையில், ” இந்த திரைப்படம் வழக்கமான திரைப்படம் அல்ல. வித்தியாசமான படைப்பு. புது  அனுபவம்  வேண்டும் என்று  விரும்புபவர்கள்.  இந்த  படத்தை  தாராளமாக  திரையரங்கிற்கு சென்று கண்டு ரசிக்கலாம்.

பயில்வான்  இரண்டு  ஆஸ்கார்  விருது  வாங்கியிருப்பார்..  சென்னையில் பனி மழை, கார்கள் பறக்கும்,   நடிகர்  கூல்  சுரேஷ்  ஊமை, பயில்வான் ரங்கநாதன் இரண்டு ஆஸ்கார் வென்றவர் என இயக்குநர் ஒவ்வொரு நாளும் எனக்கு  அதிர்ச்சிகளை  கொடுத்துக்  கொண்டே  இருப்பார்.  வித்தியாசமான படைப்பாளியாக  இருக்கிறாரே..!  என நினைக்க  வைத்தார்.

 

தயாரிப்பாளர்  பிரேம்குமாருக்கு  நன்றி.  படத்தை  தெளிவாக  திட்டமிட்டு நிறைவு  செய்திருக்கிறார்.  இந்தத்  திரைப்படத்திற்கு  பிறகு  தமிழ் திரையுலகில்  வலிமையான  படத்  தயாரிப்பு  நிறுவனமாக  மாலி & மாவி மூவி மேக்கர்ஸ் உயர்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

படத்தில்  பணியாற்றிய  நடிகர்,  நடிகைகள்,  தொழில்நுட்பக்  கலைஞர்கள் அனைவரும்  தங்களது  முழுமையான  ஒத்துழைப்பை  வழங்கினர்.

 

இயக்குநர்  விக்னேஷ்  கார்த்திக்  இயக்கத்தில்  வெளியான  முதல் படம் டிஜிட்டல்  தளத்தில்  வெளியானது.  அவரது  இயக்கத்தில்  உருவாகி  இருக்கும் இந்த  ‘அடியே’  திரைப்படம்  திரையரங்குகளில்  வெளியாகிறது.  இப்படத்தின்  முன்னோட்டம்  வெளியான  பிறகு  அவருக்கு திரையுலகிலிருந்து  பாராட்டுகள்  குவிந்து  வருகிறது.  விரைவில் அவரும் முன்னணி இயக்குநராக உயர்வார். ” என்றார்.

Inbaaraja
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.