
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் விமர்சனம்
தனுஷின் இயக்கத்தில் வந்திருக்கும் மூன்றாவது படம்.
நிலாவைக் காதலிக்கிறான் பிரபு. நிலாவின் தந்தை கருணாகரனது கடைசி நாட்கள், அவர் ஆசைப்பட்டப்படி அமையவேண்டுமென நிலாவை விட்டுப் பிரிகிறான் பிரபு. பிரபு ஏன் பிரிந்தான் எனத் தெரியாமல் கோபம் கொள்ளும் நிலா, அவனுக்குத் தன் கல்யாண அழைப்பிதழை அனுப்பி வைக்கிறாள். கோவாவில் நடக்கும் அத்திருமணத்திற்குச் செல்கிறான் பிரபு. அங்கே என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
வழக்கமான காதல் கதை என தலைப்பிற்குக் கீழாகவே உபதலைப்பு போட்டுவிடுகின்றனர். முதற்பாதியும் அப்படியே பயணிக்கிறது. இரண்டாம் பாதியில், கோவா சென்றடைந்த பின், படத்தின் கலகலப்பு அதிகமாகிறது. படத்தின் தொடக்கம் முதலே மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் படத்தின் கலகலப்பிற்கு உதவியிருந்தாலும், இரண்டாம் பாதியில் அதகளம் புரிகிறார்.
குடி, பார்ட்டி, காதல் என்பதைத் தாண்டி படத்தின் கதாபாத்திரங்கள் எதையுமே யோசிப்பதில்லை. ...