32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

2K லவ் ஸ்டோரி – இயக்குநர்கள் புகழாரம்

Dinesh R சேலம் Published: 09/02/2025 4 நிமிட வாசிப்பு Updated: 14/02/2025 சினிமா
எழுத்து அளவு:

சிட்டி லைட் பிக்சர்ஸ், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ‘2K லவ் ஸ்டோரி’ ஆகும். வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இயக்குநர் செல்லா அய்யாவு, “இயக்குநர் சுசீந்திரன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான களத்தில் கதை சொல்லுவார். இந்தப் படத்தில் 2K கிட்ஸ் பசங்களின் கதையைச் சொல்லி இருக்கிறார். இந்தக் கால இளைஞர்களின் வாழ்க்கையை, அவர்கள் ரிலேஷன்ஷிப்பை, அவர்கள் வாழ்க்கையை அணுகும் விதத்தை, அவர்கள் எப்படி சரியாக இருக்கிறார்கள் என்பதை, மிக அழகான கதையாகக் கோர்த்து, இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறார். முந்தைய ஜெனரேஷன் இந்தத் தலைமுறையைப் பார்த்துத் தவறாக நினைப்பார்கள். ஆனால் அதெல்லாம் இல்லை என்று மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். க்ளைமேக்ஸ் மிக அற்புதமாக இருந்தது. ஒளிப்பதிவு, இசை, இரண்டும் அட்டகாசமாக இருந்தது” என்றார்.

இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி, “இரண்டு நாட்களுக்கு முன் சுசீந்திரன் சார் எனக்கு போன் செய்து, ‘இந்த விழாவிற்கு வர முடியுமா?’ என்று கேட்டார். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஸ்கூல் படிக்கும் காலத்தில் அவருடைய படங்கள் பார்த்து நிறைய விவாதித்து இருக்கிறோம். எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர், அவர் நடிகர்களைக் கையாளும் விதம், எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் படத்தில் நடிகர்கள் நடிப்பது மாதிரியே தெரியாது, அவ்வளவு அருமையாக அவர்களைக் கையாளுவார். பல விஷயங்களில் அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். இந்தப் படத்தைக் காலை சில நண்பர்களோடு பார்த்தேன், எப்போதும் அடுத்த தலைமுறை பற்றி நமக்குப் பெரிய அளவில் தெரியாது. ஆனால் இவர் 2K கிட்ஸ் வாழ்க்கையை மிக அற்புதமாகக் கையாண்டிருந்தார்” என்றார்.

இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், “நண்பர் சுசீந்திரன் இந்த படத்தின் டைட்டில் டிசைன் செய்த போது, எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அப்போதே எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. இந்த தலைமுறைக்கு மிகவும் பிடித்த டைட்டில், மிகவும் பிடித்த கதை, இது அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். குடும்பத்தோடு ரசிக்கும் வகையில் ஒரு நல்ல படமாக இருக்கும். நான் இந்தத் திரைப்படத்தைப் பார்த்து விட்டேன். இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் மிக அற்புதமாக இருந்தது. அந்த சோஷியல் மெசேஜ், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். விழாவின் நாயகன் இமான் சார், இந்தப் படத்தில் இசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இமான் சாரும் பிரபு சாலமன் சாரும் சேரும்போது, பாடல்கள் எல்லாமே மிகப்பெரிய ஹிட் அடிக்கும். அதே போல தான் சுசீந்திரன் சார் இமான் சார் கூட்டணி சேரும்போது, பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடிக்கும். இருவரின் காம்போ இன்னும் மிகப்பெரிய வெற்றிகளைத் தரவேண்டும். நடிகர்கள் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர், குட்டு பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் எனச் சொல்வார்கள். சுசீந்திரன் சார் அறிமுகப்படுத்திய விஷ்ணு விஷால், சூரி என இருவரும் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தில் இருக்கிறார்கள், அதே போல இடம் உங்களுக்கும் கிடைக்கும். எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள். சுசீந்திரனால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள், அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், இன்று பெரிய இடத்தில் இருக்கிறார்கள்” என்றார்.

இயக்குநர் பிரபு சாலமன், “என்னுடைய நண்பர் ஜெகவீர் அவருடன் வேறு ஒரு ப்ராஜெக்ட் செய்வதற்காக ஒரு வருடம் டிராவல் செய்து உள்ளேன். அவரின் உழைப்பு, ஆர்வம் பற்றி எனக்குத் தெரியும். இந்தத் திரைப்படம் அவருக்கு ஒரு மிகச் சிறந்த அறிமுகத்தைத் தரும். படம் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, இன்றைய விழாவின் நாயகன் இமான் ஒரு நல்ல இசை இல்லாமல் ஒரு நல்ல கதையை உங்களால் சொல்லவே முடியாது. எவ்வளவுக்கு எவ்வளவு நம் வாழ்க்கையை, மண் சார்ந்து நம் படங்கள் பிரதிபலிக்கிறதோ அந்தளவு நம் படங்கள், உலகத் திரைப்படங்களாக உலகிற்குத் தெரியும். இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது, இன்றைய சினிமா உலகில் முதலில் பாசிட்டிவாக ஒரு படத்தை எடுக்க வேண்டும் என நினைத்த இயக்குநர் தான். நம் மண்ணின் கதையைச் சொல்ல வேண்டும் என நினைத்து, அதை மிக அழகாக இந்த திரைப்படத்தில் சொல்லி இருக்கிறார். அந்த துணிச்சலுக்கு சுசீந்திரனுக்கு வாழ்த்துக்கள். வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல போன்ற படங்களைப் போல எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம், அந்த இடத்தை இந்தத் திரைப்படம் நிறைவு செய்யும். எந்த இடத்திலும் தொய்வில்லாமல் மிக அருமையாகத் திரைக்கதையை எடுத்துச் சென்றுள்ளீர்கள். நடித்த நடிகர்கள் அனைவரும், மிக அற்புதமாக நடித்திருக்கிறார்கள். யாருமே தனியாகத் தெரியவில்லை, அந்தந்த பாத்திரங்களாகத்தான் எனக்குத் தெரிந்தார்கள். இன்றைய தலைமுறையைப் பற்றி மிக அழுத்தமான ஒரு விஷயத்தை, மிகத் தைரியமாகப் பேசியிருக்கிறார். காதல் தாண்டி, நாயகனும் நாயகியும் நண்பர்களாக இருக்க முடியுமா என்ற ஒரு விஷயத்தை இந்தத் திரைப்படம் பேசுகிறது. இதை முன்பே எனது இயக்குநர் அகத்தியன் சார் தன்னுடைய காதல் கோட்டை திரைப்படத்தில் பேசி இருந்தார். கதாநாயகியும் கதாநாயகனும் சந்திக்காமல் ஒரு காதல் கதை எடுத்தார். அது இந்தியாவையே புரட்டிப் போட்டது. அதே போல் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.