Shadow

இலவச ஊட்டச்சத்து மருந்துகள் – திவ்யா சத்யராஜ் அதிரடி

Divya Sathyaraj

இலவச மருத்துவம், இலவச கல்வி இதை தரும் அரசுதான் நல்ல அரசு. சத்யராஜ் அவர்களின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராகப் பணியாற்றி வருகிறார்.

சில நாட்களுக்கு முன் சென்னையில் ஈழத்துத் தமிழர்களுக்கும், தமிழகத்தில் வசிக்கும் வசதியில்லாத மக்களுக்கும் இலவச ஊட்டச்சத்து முகாம் ஒன்றை நடத்தினார். இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த முகாமில் ஊட்டச்சத்து சம்பந்தமான ஆலோசனையும், இலவச விட்டமின் மாத்திரைகளையும் வழங்கினார்.

இது பற்றி திவ்யா சத்யராஜ், “சிறுவயது முதலே ஊட்டச்சத்து நிபுணராக வேண்டும் என்பது என் ஆசை. என் படிப்பு தமிழ்நாட்டில் வாழும் ஏழை மக்களுக்கும், ஈழத்துத் தமிழர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பது என் பெருங்கனவாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளைப் பற்றியும், ஊட்டச்சத்துக் குறைபாடு பற்றியும் ஆராய்ச்சி செய்து வந்தேன். மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து கொண்டேன்.

இனி ஏழை மக்கள் பயன் பெறும் வகையில் ஊட்டச்சத்து ஆலோசனை மையம் சென்னையில் தொடங்க உள்ளேன். ஊட்டச்சத்து மாத்திரைகள் தொடர்ச்சியாக இலவசமாகக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். ஆரோக்கியமான வாழ்க்கை வசதி படைத்தவர்களுக்கு மட்டும் தான் என்கிற நிலைமை மாற இது முதல் படியாக இருக்கும்” என்று கூறினார்.

தமிழர்களுக்கு எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் ஓங்கி ஒலிக்கும் முதல் குரல் சத்யராஜ் அவர்களுடையது. அதைப்போல மருத்துவ உலகில் புதியதோர் விதி செய்யத் தொடங்கியிருக்கிறார் திவ்யா சத்யராஜ். வாழ்த்துகள்.