6 அத்தியாயம் படத்தில், “சித்திரம் கொல்லுதடி” எனும் அத்தியாயத்தை இயக்கிய ஸ்ரீதர் வெங்கடேசனின் தனி முதல் படம். அந்தப் படத்தின் சொல்லிக் கொள்ளும்படியான தனித்துவ முயற்சியாக, அவரது குறும்படம் மட்டும் தனித்துக் கவர்ந்தது.
‘அடிமை சுதந்திரம்’ எனும் குறும்படத்திற்காக சர்வதேச விருதுகள் பெறும் இயக்குநர் சத்யாவிற்கு, திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. முதல் நாள் படப்பிடிப்பின் பொழுது, அவரை முகமூடி அணிந்த நபரொருவர் கடத்தி விடுகிறார். யாரால் ஏன் கடத்தப்பட்டார் என்பதுதான் படத்தின் கதை. தெருக்கூத்துக் கலைஞராக அருணும், நாடகக் கலைஞராக அரவிந்த் ராஜகோபாலும் நிறைவாக தன் பங்கினைச் செய்துள்ளனர். ஜோஸ் ஃப்ராங்கிளினின் இசையில், கலைஞர்கள் தங்கள் வயிற்றுப்பாடினைப் பாடும் பாடல் மனதை ஊடுருவித் துளைக்குமளவு அட்டகாசமாக உள்ளது. புருஷோத்தமன் வீரையனின் பாடல்வரிகள் அவ் உணர்வெழுச்சியைத் தான் படம் தந்திருக்கவேண்டும். ஆனால், அது அந்தப் பாடலோடு சுருங்கிவிடுவது துரதிர்ஷ்டம்.
நாயகியான அதுல்யா ரவியைக் கெளரவ வேடத்தில் கூடப் பயன்படுத்தவில்லை இயக்குநர். கடப்படும் இயக்குநராக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப், இன்னும் கொஞ்சம் பதற்றத்தை தன் நடிப்பில் கொண்டு வந்திருக்கலாம். எம்.ஜி.ஆர்., சிவாஜி, சார்லி சாப்ளின் என பல வேஷங்களில் வரும் அருணைக் கொண்டு பிளாக் ஹ்யூமர்க்கு முயன்று, பரிதாபமாகத் தோற்றுள்ளார் இயக்குநர். ஆனால், கடத்தல் படலத்தில் ‘ரத்தக் கண்ணீர்’ படத்தை உபயோகித்திருப்பது சுவாரசியத்தைக் கூட்டியுள்ளது. கலையின் மீதான தாகத்தைக் கடத்த வேண்டிய நடிகர்கள், தங்கள் நடிப்பால் அதைச் சாத்தியப்படுத்தாமல் சோடை போகின்றனர். விஜய் ஆண்ட்ரூஸின் நான்-லீனியர் எடிட்டிங் துளியும் உதவவில்லை. பல இடங்களில், லயம் தப்பி, காட்சிகள் பரிதாபமாய் துண்டுதுண்டாய் வந்து போகின்றன.
அடிமை சுதந்திரம் எனும் அர்த்தமுள்ள அழகான குறும்படத்தில் படம் தொடங்குகிறது. நிறைவான குறும்படமாய் அது அமைந்துள்ளது. ‘சித்திரம் கொல்லுதடி’ படத்தில் வருவதைப் போலவே 2டி அனிமேஷன் மூலமாக ஒரு கதையைச் சொல்லியுள்ளார் இயக்குநர். அதுவும் சிறப்பாக உள்ளது. ஆனால், ஒட்டு மொத்த படைப்பாக, இப்படம் இலக்கை அடையாமல் அலைக்கழிகிறது.