Search

காவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம்

kaval-thurai-ungal-nanban-review

இந்தப் படத்திற்குள் தன்னை இணைத்துக் கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், அதற்கான காரணமாக, ‘இது ஒரு மரியாதையான முயற்சி’ என்றார்.

சாத்தாங்குளம் இரட்டைக் கொலை சம்பவம் ஏற்படுத்திய அதிர்வை நினைவுறுத்துகிறது படம். மேலே உள்ள அந்தப் போஸ்டரே அதற்கு சாட்சி. லாக்கப் மரணம், கஸ்டடியல் வயலன்ஸ் என போலீஸின் அராஜகப் பக்கங்களில் ஒன்றை அழுத்தமாகப் பதிந்துள்ளது படம்.

இரு உருளை வண்டியில் மனைவியுடன் வரும் பிரபுவைக் காவல்துறை மறித்து விசாரிக்கின்றனர். ஆவணங்களை சரியாக வைத்திருந்தும், ‘குடித்துள்ளார்; RC புக் இல்லை’ என எனச் சொல்லி பிரபுவை கைது செய்கிறது போலீஸ். அதன் பின், பிரபுவை அடிபணிய வைத்து, அலைகழித்து, அவனது வாழ்வைக் கேள்விக்குறியாக்கி, சீர்குலைத்து சொல்லொண்ணாத் துன்பத்திற்கு ஆட்படுத்துகிறது, பொதுமக்களின் ஊழியரும் நண்பரும் பாதுகாவலருமான போலீஸ்.

இன்ஸ்பெக்டர் கண்ணபிரானாக மைம் கோபி வெறுப்பைச் சம்பாதித்துள்ளார். படத்தின் அச்சாணி என்றே அவரைச் சொல்லலாம். அவரது சைக்கோத்தனமான பார்வைகள், கோபமுறும் வண்ணம் கேள்விகள் போன்றவை போலீஸ் வெளிப்படுத்தும் அதிகார வேட்கையை எண்ணிக் கலக்கமுற வைக்கின்றன. 

ஒரு கிடாயின் கருணை மனு படத்தில் நடித்துள்ள ரவீணா ரவி, இந்து எனும் பாத்திரத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். காவல்துறையினரின் தலையீட்டில் கதை தொடங்கும் முன் வரும் காதல் அத்தியாயம் சுமாராகவே உள்ளன. தம்பதிக்குள்ளான அந்நியோன்யம், பரஸ்பர காதல் முதலியவை யாவும் இயல்பாக இல்லை. போலீஸ் தலையீட்டால் தங்கள் வாழ்க்கை பாழாகிறதே என்ற ரவீணா ரவியின் பதற்றத்தைக் கூட உணரமுடிகிறது. ஆனால், சுரேஷ் ரவியின் நடிப்பு அவரது கையறு நிலையைப் பார்வையாளர்களுக்குக் கடத்த உதவவில்லை. படம் பார்க்கும் பொழுது நமக்குள் எழும் பதற்றம் நாயகனின் பால் நம்மைப் பொருத்திக் கொண்டு எழுவதற்குப் பதில், மைம் கோபி போன்ற அதிகாரியுடன் சிக்கிக் கொண்டால் நம் நிலையென்னாகும் என்ற பரிதவிப்பு வில்லன் பாத்திரத்தினின்றே நேரடியாக எழுகிறது. மைம் கோபிக்கு ஒத்தோதும் சத்தியன் எனும் பாத்திரத்தில் நடித்துள்ள RJ முன்னா, அந்தப் பாத்திரத்திற்கு நல்ல சாய்ஸ். காவல்துறையின் மேல் பயத்தை விளைவிக்கப் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர் மைம் கோபியும், RJ முன்னாவும்.

காவல் நிலையம் சாமானியருக்கான இடமில்லை என்ற பொதுவான பயப்போக்கை ஆழமாக்கியுள்ளது படம். இந்த மாதிரியான படங்களின் தேவையும், அது உருவாக்கும் உரையாடலும் மிக முக்கியமானது என்பதாலே இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.