Shadow

6 அத்தியாயம் விமர்சனம்

6 athiyayam movie review

ஆறு இயக்குநர்களின் குறும்படங்களை தொகுத்து ‘6 அத்தியாயம்’ என்று ஒரே படமாக இணைத்துள்ளனர். அமானுஷ்யம் தான் இந்த ஆறு படங்களையும் இணைக்கும் கண்ணி. பொதுவாக இப்படி இணைக்கப்படும் படங்கள், ஒரு குறும்படம் முடிந்த பின் இன்னொன்று எனத் தொடங்கும். ஆனால், எல்லாப் படத்தின் க்ளைமேக்ஸையும் கடைசி அரை மணி நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாகக் காட்டியுள்ளனர். இந்தப் பரீட்சார்த்த பாணி உலக அளவில் இதுவே முதல் முறை என்பது படத்தின் தலையாய சிறப்பு.

1. சூப்பர் ஹீரோ
இயக்கம் – கேபிள் சங்கர்

தன்னை சூப்பர் ஹீரோவாக ஒருவன் கருதுகிறான். அவனது வீட்டினரோ அவனுக்கு மனநலக் கோளாறு உள்ளதாக நினைக்கின்றனர். அதனால் அவனை மனநல மருத்துவரிடம் அழைத்து வந்து விடுகின்றனர். அவருக்கும் மனநல மருத்துவருக்கும் நடக்கும் உரையாடலே படத்தின் கதை.

2. இது தொடரும்
இயக்கம் – சங்கர் தியாகராஜன்

சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்த ஒருவனைப் பேய்கள் எப்படிப் பழி வாங்குகின்றன என்பது தான் படத்தின் கதை.

3. மிசை
இயக்கம் – அஜயன் பாலா

காதல் தோல்வியில் துடிக்கும் ஒருவன் யதேச்சையாகத் தன் அறை நண்பர்களுன் உண்மைச் சொரூபத்தைத் தெரிந்து கொள்ள நேருவதே படத்தின் கதை.

4. அனாமிகா
இயக்கம் – EVA சுரேஷ்

ஆளரவற்ற ஒரு பகுதியில், நாயகன் தனியாக ஒரு வீட்டினில் தங்க நேர்கிறது. அங்கே திடீரென ஒரு பெண் மெழுகுவர்த்தியோடு பிரசன்னம் ஆகிறாள். நாயகனின் கதியென்னாது என்பதுதான் படத்தின் கதை.

5. சூப் பாய் சுப்பிரமணி
இயக்கம் – லோகேஷ்

நாயகன் எந்தப் பெண்ணிடம் பேசினாலும், கண்ணுக்குத் தெரியாத ஒரு பேய் ஏதாவது வம்பு செய்து நாயகனைப் பெண்களிடம் அடி வாங்க வைக்கிறது. ஏன் அப்படி நிகழ்கிறது என்பதுதான் படத்தின் கதை.

6. சித்திரம் கொல்லுதடி
இயக்கம் – ஸ்ரீதர் வெங்கடேசன்

கோகிலா எனும் நாவலைப் படித்து விட்டு, அந்த நாவலின் நாயகியை ஓவியமாக வரைய முற்படுவர்களுக்கு அமானுஷ்யமான ஆபத்துகள் நேரிடுகிறது. ஏன் எதனால் அப்படி நேருகிறது என்பது தான் படத்தின் கதை.

சூப்பர் ஹீரோ கதையில் இரண்டே கதாபாத்திரங்கள் தான். அவர்களுக்குள் நடக்கும் உரையாடலே படம். ஆனால் கதையின் கருவோ தன்னுள் பிரம்மாண்டத்தை ஒளித்து வைத்திருக்கும் கரு. இயக்குநர் கேபிள் சங்கரின் முதல் படமான ‘தொட்டால் தொடரும்’ நாயகன் தமன் தான் இப்படத்திலும் ஹீரோ. சட்டெனத் தொடங்கி முடியும் படத்தின் ஒரே பலம் அவரது அற்புதமான நடிப்பு மட்டுமே! படத்தின் முடிவைப் பார்வையாளர்களிடமே கேபிள் சங்கர் விட்டுள்ளது சிறப்பு.

‘இது தொடரும்’ என்ற அத்தியாயத்தை இயக்கியதோடு அல்லாமல், சங்கர் தியாகராஜன் ஆறு அத்தியாயங்களையும் தயாரித்துமுள்ளார். குழந்தையைப் பாலியல் தொந்தரவு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்ற எண்னத்தைத் தொடக்கத்திலேயே அழுத்தமாக ஏற்படுத்தத் தவறி விடுவதால், படம் தந்திருக்க வேண்டிய தாக்கம் நீர்த்து விடுகிறது.

பசங்க கிஷோர் நடித்திருந்தும், மூன்றாம் அத்தியாயமான ‘மிசை’ மனதிற்குக் கொஞ்சம் அந்நியமாகவே உள்ளது. படத்தின் மையப் புள்ளியில் இருந்து விலகியே கதை நகர்கிறது. நாயகனின் காதலைப் பேசாமல், அவனது அறை நண்பர்களின் மன விகாரங்களைச் சித்தரிக்கும் படம், யூகிக்கக் கூடிய க்ளைமேக்ஸில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் முடிந்து விடுகிறது.

அனாமிகா எனும் அத்தியாயம், சுவாரசியமாக சென்றாலும், முடிவோ பேய் என்பது என்ன, எங்கு வசிக்கிறது எனத் தத்துவமார்த்தமாகச் சப்பென முடிந்துவிடுகிறது.

சூப் பாய் சுப்பிரமணியாக விஷ்ணு கலக்கியுள்ளார். அம்புலி இயக்குநர்களில் ஒருவரான ஹரீஷ் இக்கதையை எழுத, அவரது அசிஸ்டென்ட் லோகேஷ் இயக்கியுள்ளார். செம ஜாலியான அத்தியாயம். க்ளைமேக்ஸ் வரையிலுமே கூடக் கலகலப்பிற்குப் பஞ்சமில்லாத கதை.

6 athiyayam Vinod Kishan

சற்றே நீண்ட அத்தியாயமான ‘சித்திரம் கொல்லுதடி’யை மிக ப்ரொஃபஷ்னலாக எடுத்துள்ளார் இயக்குநர் ஸ்ரீதர் வெங்கடேசன். ஜெய் பிரகாஷின் விஷூவல் எஃபெக்ட்ஸ் படத்தின் அமானுஷ்யத்தன்மைக்குக் கச்சிதமாக உதவியுள்ளது. எளிய செலவில் எடுக்கப்பட்ட குறும்படங்களைப் பார்த்து வருகிறோம் என்ற உணர்வைத் தகர்க்கிறார் ஒளிப்பதிவாளர் மனோ ராஜா. ‘விடியும் முன்’ விநோத் கிஷன் தான் நாயகன் என்றாலும், படத்தின் உண்மையான நாயகன் கலை இயக்குநர் தேவா தான். அமானுஷ்ய படங்களின் வெற்றியைத் தீர்மானிப்பது லோகேஷனும், கலை இயக்குநரின் உழைப்பும்தான். இவ்வத்தியாயம், அனைத்து வகையிலுமே பார்வையாளர்களுக்கு முழுத் திருப்தியை நல்குகிறது.

படத்தின் இறுதியில், கிரெடிட் போகும் பொழுது வரும் ‘ரன் ஃபார் லைஃப்’ அனிமேஷன் சாங் அற்புதமாக உள்ளது. அதைத் தொடக்கத்திலேயே போட்டுப் படத்திற்கான ஒரு மூடைச் செட் செய்திருக்கலாம் படக்குழு. புது திறமையாளர்களுக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் அளிக்கும் ‘6 அத்தியாயம்’ போன்ற முயற்சிகள் தமிழ் சினிமாவில் தொடரவேண்டும்.