

மனோ க்ரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா தயாரிப்பில், இயக்குநர் L.R. சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான த்ரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “4த் ஃப்ளோர்” ஆகும். இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில் பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், “இன்றைக்குத் தமிழ் சினிமாவில் நிறைய புதுப் புதுத் திறமையாளர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து வருகிறார்கள். எல்லாருமே சரியான வழிகாட்டுதலோடு, குறைந்த பட்ஜெட்டிலேயே அவங்க படங்களை எடுக்க உதவி செய்தால், இன்னும் நிறைய நல்ல படைப்பாளிகள், தமிழ் சினிமாவுக்குள் வர முடியும். இந்தப் படத்தின் ட்ரெய்லரிலேயே நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்கள். அனிமேஷன், திரில்லர், கனவுகள்,ஒரு மனிதனுடைய கனவிலிருந்து வர்ற விஷயங்கள் எப்படி நிஜமாக மாறுது, அதிலிருந்து என்னென்ன சம்பவங்கள் நடக்குது, அந்தச் சம்பவங்கள் உண்மையாகும்போது, ஹீரோ சந்திக்கிற பிரச்சனைகள் என்ன, இதை எல்லாம் ட்ரெய்லரிலேயே அழகாகச்சொல்லியிருக்கிறார்கள். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்” என்றார்.
நடிகர் பரத், “ஆரியும் நானும் பல வருடங்களாக இந்த இன்டஸ்ட்ரியில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு வருடம் முன்னாடி தான் நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்தோம். எனக்குத் தனிப்பட்ட முறையில், க்ரைம் த்ரில்லர் என்ற ஜானர் எப்போதுமே பிடிக்கும். என்னுடைய திரைப்பயணத்தில் தெரியாமலேயே, கடைசி ஏழு படங்களும் த்ரில்லர் படங்களாகவே அமைந்திருக்கிறது. அந்த ஜானருக்கு ஓர் உத்தரவாதம் எப்போதும் இருக்கும். அதாவது, சரியான திரைக்கதையும், நல்ல விளம்பரமும் இருந்தால் அந்தப் படம் நிச்சயமாக ஓடும். அந்த எல்லா அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கிறது. குறிப்பாக, டைட்டில் டிசைன் கூட ரொம்ப அழகாகவும் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. இந்தப் படத்திற்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள்” என்றார்.
இயக்குநர் LR சுந்தரபாண்டி, “கதை ரீதியாக இது ஒரு ஜானர் மிஸ்டேக் உள்ள படம். ஒரே ஜானருக்குள் அடக்க முடியாத கதை இது. முதலில் கேட்கும்போது இது ஹாரர் படம் மாதிரி தோன்றலாம்; அடுத்த நிமிஷம் திரில்லராக மாறும். அதற்குள் காமெடியும் கலந்து வரும். “இது என்ன ஜானர்?” என்று கேட்டால்,
ஒரே வார்த்தையில் சொல்ல முடியாத படம்.
கதையை முதலில் கேட்டவுடனே ஆரி சார் இந்தப் படத்தில் இணைந்தார். இந்தக் கதையின் மேல் நம்பிக்கை வைத்து உள்ளே வந்த முதல் நபர் அவர்தான். அதுமட்டுமல்ல, சின்னதாக ஆரம்பித்த இந்தப் படத்தைப் பெரிய அளவுக்குக் கொண்டு போக வேண்டும் என்ற எண்ணத்தையும் அவர்தான் கொடுத்தார். இது தயாரிப்பாளர்–டெக்னீஷியன் உறவாக இல்லாமல், நண்பர்கள் சேர்ந்து செய்த ஒரு படமாக வந்துள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க திரில்லர், பாடல்கள், எமோஷன் எல்லாம் கலந்து வந்த ஒரு முயற்சி. அது உங்களுக்கெல்லாம் ஒரு திருப்தியான அனுபவத்தைத் தரும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
நடிகர் ஆரி, “பிக்பாஸுக்குப் பிறகு என் படங்கள் பெரிதாக வரவில்லை. ஆனால் கலைஞர் டிவியில் நான் செய்த ஷோ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆரி படம் செய்வதில்லை அவருக்கு என்ன பிஸினஸ் இருக்கிறது என பலர் சொன்ன போதும், அதைக் கண்டுகொள்ளாமல், படத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் ராஜா அவர்களுக்கு நன்றி. இதில் எனது நண்பர்கள் பலரும் பணிபுரிந்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் இப்படத்திற்காக உண்மையாக உழைத்திருக்கிறார்கள். இப்படத்தில் நாங்கள் எல்லோரும் சண்டை போட்டுள்ளோம், ஆனால் அது எல்லாம் படத்திற்காக தான். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. இங்கு வெற்றி தான் எல்லாரையும் முன்னிறுத்துகிறது. வெற்றி பெற்றால் எல்லோரும் ஸ்டார் தான். எனக்கு பிக்பாஸுக்குப் பிறகு பெரிய வரவேற்பு இருப்பதாகப் பலர் சொன்னார்கள். எனக்கு என்ன வரவேற்பு இருக்கிறது என எனக்கு உண்மையிலேயே தெரியாது. நான் அதை எதையும் கண்டுகொள்வதில்லை. உண்மையான உழைப்பைத் தருவோம் என உழைத்துள்ளேன்” என்றார்.
செவன்த் ஸ்டுடியோ சார்பாக K.கண்ணன் இப்படத்தைத் தமிழ்நாடு தியேட்டர் வெளியீடு செய்கிறார். இப்படம் வரும் 27ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தொழில்நுட்பக் குழு:-
இயக்கம் – L R சுந்தரபாண்டி
தயாரிப்பு – A.ராஜா
நிர்வாக தயாரிப்பாளர் – சூரிய பிரகாஷ் P
ஒளிப்பதிவு – J லக்ஷ்மன்
இசை – தரண் குமார்
பாடலாசிரியர் – கு கார்த்திக்
படத்தொகுப்பு – ராம் சுதர்ஷன்
கலை – சுரேஷ் கல்லேரி
நடனம் – அபு சால்ஸ்
சண்டை – டேஞ்சர் மணி
மக்கள் தொடர்பு – A ராஜா


