Shadow

கோகோ மாக்கோ விமர்சனம்

Goko-Mako-movie-review

96 நிமிடப் படம். தயாரிப்பாளரான அருண்காந்த் கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதிப் பாடி இயக்கியதோடு இசையமைத்து, ஒலி வடிவமைப்பு, டப்பிங் இன்ஜினியரிங் செய்து, உடை வடிவமைத்து, கிராஃபிக் டிசைன், கோரியோகிராஃபி என 15 பிரிவில் பங்காற்றி நடித்துமுள்ளார்.

அருண்காந்திற்கு தனது இசை ஆல்பத்தை வீடியோ ஆல்பமாக மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ராம்குமாரும் தனுஷாவும் வேலன்டைன்ஸ் டே-க்கு ரோட் ட்ரிப் போக, ப்ளூட்டோவை அனுப்பி தனுஷாக்குத் தெரியாமல் வீடியோ ஆல்பத்திற்காகப் படம்பிடிக்கச் சொல்கின்றார் அருண்காந்த். ரோட் ட்ரிப் என்னானது, மியூசிக்கல் வீடியோ ஆல்பம் என்னானது என்பதுதான் படத்தின் கதை.

மொத்தப் படப்பிடிப்பையும் 12 நாளில், GoPro கேமிராவில் படம்பிடித்து அசத்தியுள்ளனர். வசனங்களை முன்னரே எழுதாமல், காட்சி நடக்கும் இடத்திற்குச் சென்று, கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு வசனம் எழுதியுள்ளார் அருண்காந்த். அந்த அமெச்சூர்னஸ் படத்தில் படு அப்பட்டமாய்த் தெரிகிறது. படத்தின் தலைப்பில் இருந்தே அது தொடங்குவதை உணரலாம். எல்லாப் பாத்திரங்களுமே நகைச்சுவை என்ற பெயரில் வசனத்தைக் கூறு போட்டுள்ளனர். மூத்த கலைஞர்களான ஒய்.ஜி.மகேந்திரனுக்கும் சந்தானபாரதிக்கும் கூட அதே நிலைதான். ‘இளைஞர்களை ஊக்குவிக்கணும் சார்’ என்ற வசனத்தைத் தவிர வேறு எதுவும் பேச மாட்டேன் என டெல்லிகணேஷ் உறுதியாக விலகிக் கொண்டிருப்பார் போல! அதனால் அபூர்வமாய் அவர் மட்டும் வசனரீதியாக டைலூட் ஆகாமல் தனது வழக்கமான நடிப்பிற்கு உத்திரவாதம் அளித்துள்ளார்.

சாம்ஸின் சில ஆங்கிலக் கலப்பு வசனங்கள் ரசிக்க வைத்தாலும், அவரும் சோபிக்கவில்லை. தொழில்நுட்பத்தையும், கதைக்கருவையும் மட்டுமே நம்பி ஸ்கிரிப்டில் கைவைக்காவிட்டால் என்னாகும் என்பதற்கு சாட்சியாக விளங்குகிறது படம். படத்தின் கதாநாயகனான ராம்குமார், சரத்குமாரின் அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. புதுமுகம் தனுஷா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதே போல், ஒரு ப்ராஜெக்ட்டில் வேலை செய்யும் சாராவும், வினோத் வர்மாவும் கூட சீரியஸ்னஸே இல்லாமல் பேசிக் கொள்கிறார்கள். மூன்று பேர் பணிபுரியும் ஒரு கம்பெனியின் எம்.டி.யாக அறிமுகமாகும் அஜய் ரத்னம், திடீரென கார்ப்ரெட் மான்ஸ்ட்ராகச் சித்தரிக்கின்றனர்.

Crazy Musical Romantic Road Trip Comedy என தன் படத்தின் ஜானரைக் குறிப்பிடுகிறார் அருண்காந்த். ஆனால் craziness மட்டுமே படத்தில் மிஞ்சுவது துரதிர்ஷ்டம். ஆனால், படத்திற்கு என்ன தேவையோ (!?) அதை மட்டுமே எடுத்து, படத்தொகுப்பில் அதிகம் கத்தரிக்கப்படாத, zero wastage film என்ற முறையிலும், தயாரிப்புச் செலவைக் கட்டுக்குள் சுருக்கிய பாங்கிலும், இது சினிமா ஆசையுள்ள அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய experimental படமாகிறது. எக்ஸ்பிரிமென்ட் படத்திலும் மெஸ்சேஜ் சொல்லியே தீருவேன் என்ற இயக்குநரின் சினிமா மீதான புரிதலையும் காதலையும் வியக்காமல் இருக்கமுடியவில்லை.