Search

மாயன் – ஸ்டைலிஷான சிவன்

Mayan first look launch

ஃபாக்ஸ் க்ரோ ஸ்டுடியோஸ் சார்பில் ஜே. ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் சார்பில் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரிக்கும் படம் ‘மாயன்’.

டத்தோ மோகன சுந்தரம் பேசுகையில், “எங்கள் நிறுவனத்தின் சார்பில் மலேசியாவில் ‘வில்லவன்’ என்ற படத்தைத் தயாரித்திருக்கிறோம். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் ஐயாய் (AIYAI) என்ற ஆங்கிலப்படத்தையும் தயாரித்திருக்கிறோம். என்னுடைய பெற்றோர்கள் பிறந்த மண் தமிழகத்திலுள்ள நாகப்பட்டினம். அதனால் தமிழ்நாட்டில் வந்து ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிக்க ஆசைப்பட்டோம். அந்தத் தருணத்தில் இந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜேஷ் கண்ணன் அவர்களைச் சந்தித்தேன். நான் விநாயகன் பக்தன், அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதைப் போல் அவரைப் பார்த்தவுடன் பிடித்தவிட்டது. அத்துடன் அவருடைய குழுவினரையும் கண்டு வியந்தேன். இந்தப் படத்தை அவருடன் இணைந்து தயாரிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

தமிழில் நாயகனாக அறிமுகமாகும் நாயகன் வினோத் பேசுகையில், “நானும் சிவபக்தன். இயக்குநரும் சிவபக்தர். படமும் சிவனைப் பற்றிப் பேசுகிறது. நான் நடிக்கும் முதல் இந்திய தமிழ்த் திரைப்படம். இந்த டீஸரின் வெற்றிக்கு இயக்குநர் குழுவின் ஒருங்கிணைந்த முயற்சியே காரணம். இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகும் எனக்கு உங்களின் ஆதரவு தேவை” என்றார்.

இந்தப் படத்தின் ஆங்கிலப் பதிப்பில் நாயகியாக நடிக்கும் ப்ரியங்கா பேசுகையில்,“மாயன் படம் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் உருவாகிறது. ஆங்கிலப் பதிப்பில் நான் தான் நாயகியாக நடிக்கிறேன். நான் தமிழ்ப் பொண்ணு தான். இந்தியாவில் தயாராகும் ஆங்கிலப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாவதில் சந்தோஷமடைகிறேன். எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி” என்றார்.

படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ராஜேஷ் கண்ணன் பேசுகையில், “மாயன் என்றால் நாம் அனைவரும் மெக்சிகோவில் உள்ள மாயன் கலாச்சாரத்தையும், மாயன் காலண்டரையும் நினைத்துக் கொள்கிறோம். மாயன் என்று எடுத்துக் கொண்டால் மூவாயிரம் வருட வரலாறு கொண்டது. தமிழ் என்று எடுத்துக்கொண்டால் இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் பழமைக் கொண்டது. ஆனால் சிவன் என்று எடுத்துக் கொண்டால் அதற்கு மேல் செல்கிறது. என்னைப் பொருத்தவரை சிவன் தான் மாயன்.

இந்தப் படம் ஏன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாராகிறது என்றால், இதன் திரைக்கதை உலகின் எந்த நிலவியல் பின்னணியிலும் பொருந்தக்கூடியது. அது சீனாவாக இருக்கட்டும். லாஸ் ஏஞ்சல்ஸாக இருக்கட்டும். மெக்சிகோவாக இருக்கட்டும். எந்தப் புவியியல் பின்னணியிலும் இந்தக் கதையின் தன்மை பார்வையாளர்களுடன் இணைந்துவிடும்.

நம்முடைய பெருமைகளையும் கலாச்சாரத்தையும் நம்முடைய இந்திய மொழிகளை விட ஆங்கில மொழியில் சொன்னால் நன்றாக இருக்கும். அத்துடன் உலகம் முழுவதும் செல்லும் என்ற காரணத்தினால் இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்குகிறோம். இதற்கு இணை தயாரிப்பாளரும் ஒப்புக் கொண்டார்.

சின்ன வயதில் தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும் என்று சொல்லி வளர்த்தார்கள். அது உண்மையா? பொய்யா? என்பதை சுவராசியமாகச் சொல்லியிருக்கிறோம்.

கர்மா என்ற ஒன்றிருக்கிறது. அதனை செயல்வினை என்றும் சொல்லலாம். நாம் நல்லசெயல்களைச் செய்தால் கர்மா, செயல்வினை ஆகிறது. தவறு செய்தால் கர்மா, செய்வினை ஆகிறது.

மனிதர்களில் சமநிலையற்றவர்களின் சாபம் குறித்த வலிமையையும் சொல்லியிருக்கிறோம்.

முதலில் மனிதர்கள் சிங்கம் போல் இருந்தார்கள். சிங்கம் பசிக்கும் போது வேட்டையாடும். பின்னர் புசித்து, பசி அடங்கியவுடன் மீதியை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுவிடும். ஆனால் மனிதர்கள் தற்போது கழுதை புலி போலாகிவிட்டார்கள். கழுதை புலி என்ன செய்யும் என்றால், வேட்டையாடிவிட்டுச் சாப்பிட்டுவிட்டு, மீதமிருப்பதை நாளைக்குப் பசிக்கும் என்று சொல்லி அதை எடுத்துக் கொண்டு செல்லும். அதனால் அதனைச் சுற்றி எப்போதும் மிருகங்களின் பிணம் இருக்கும். அதைப் போல் மனிதர்கள் தற்போது தன்னைச் சுற்றி எப்போதும் பணத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது போன்ற ஒரு தருணத்தில் ஆதி யோகியான சிவனுக்கு, ‘இவனையெல்லாம் ஏன் படைத்தோம்’ என்று ஒரு கணம் சிந்தித்தால் அது என்னவாக இருந்திருக்கும்? எப்படி இருந்திருக்கும்? அதன் பின் விளைவு என்னவாக இருக்கும்? அது தான் இந்த மாயன்.

மாயன் ஒரு ஃபேண்டசி. மாயன் ஒரு ரியாலிட்டி. இதை வேறொரு கோணத்தில் சுவராசியமாகச் சொல்வது தான் மாயன்.

சிவனை இந்தப் படத்தில் ஸ்டைலிஷாகக் காட்ட நினைத்தேன். அதனால் அதற்கு ஏற்ற வகையில் இருந்த வினோத்தை நாயகனாக்கியிருக்கிறேன்” என்றார்.

நிகழ்ச்சியின் முடிவில் மாயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டது.