Shadow

சித்திரம் பேசுதடி 2 விமர்சனம்

Chithiram-Pesuthadi-2-movie-review

2006 ஆம் ஆண்டு, மிஷ்கின் இயக்குநராக அறிமுகமான ‘சித்திரம் பேசுதடி’ படத்தினைத் தயாரித்தவர்கள் “உலா” எனும் படத்தை ஆறு வருடங்களுக்கு முன் தொடங்கினார்கள். 2013 இல், படத்தின் தயாரிப்பாளரான ஸ்ரீகாந்த் லக்ஷ்மன், ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’க்காக விளையாடிய ட்வெயின் பிராவோவை, ஒரு பாடல் காட்சிக்காக ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது. சாஜன் மாதவின் இசையில் ‘டல்மேனி டல்மேனி டகுல் காட்டுது’ என்ற பாடலிற்கு, வேட்டி கட்டிக் கொண்டு ட்வெயின் பிராவோ ஆடும் நடனம் நன்றாக இருக்கிறது. திரையில் உலா வர வாய்ப்புக் கிடைக்காமல் இத்தனை காலம் கிடப்பில் இருந்த படம், ‘சித்திரம் பேசுதடி 2’ ஆகப் பெயர் மாற்றம் பெற்றுத் திரையேறுகிறது.

விதார்த், அஜ்மல், அஷோக், நந்தன் லோகநாதன், நிவாஸ் ஆதித்தன் என ஐந்து பிரதான பாத்திரங்கள். 48 மணி நேரத்தில், இந்த ஐந்து பேருக்கும் நடக்கும் நிகழ்வுகள் தான் படத்தின் மையக்கரு. பிரதான பாத்திரங்கள் மட்டுமல்ல, படத்தில் வரும் அனைத்துப் பாத்திரங்களுமே மனதில் நிற்கும் அளவு மிக நேர்த்தியாக அமைந்துள்ளது திரைக்கதை.

சலீம் எனும் நெகடிவ் பாத்திரத்தில் வருகிறார் அஷோக். சூழ்நிலைக்குத் தகுந்தவாறு மாறுவது, நடப்பதைத் தனது இச்சைக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்வது போன்ற கதாபாத்திரத்தில் மிக நன்றாக நடித்துள்ளார். படத்தின் பலமே அதன் நடிகர்கள்தான். நடிகர்களின் தேர்வினிலேயே படத்தின் வெற்றியைப் பாதி உறுதி செய்துவிடுகிறார் இயக்குநர் ராஜன் மாதவ். இவர் முன்னதாக, சேரனையும் பிரசன்னாவையும் கொண்டு ‘முரண் (2011)’ எனும் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கியாக அஜ்மல். தனது பிரச்சனையில் இருந்து மீள, அமைச்சரை பிளாக்-மெயில் செய்து பெருஞ்சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் அஜ்மல். அவருக்கு ஜோடியாக பிரியா பேனர்ஜி நடித்துள்ளார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் நாயகி காயத்ரியைக் காதலிக்கிறார் நந்தன் லோகநாதன். இருவரும் வீட்டை விட்டு ஓடிப் போக திட்டம் தீட்டியிருக்க, ராதிகா ஆப்தேவின் கணவர் ஷம்மி திலகனை வெட்டிவிட்டு விதார்த் ஓடுவதைப் பார்த்து விடுவதால் இரட்டைப் பிரச்சனையில் சிக்குகிறார் நந்தன் லோகநாதன். அதே சமயம், காயத்ரியிடம் நகையைக் கொள்ளையடித்துத் தன் காதலியான விபச்சாரி தனலக்ஷ்மியிடம் கொடுத்துவிடுகிறார் நிவாஸ் ஆதித்தன். அஜ்மல் எப்படி தன் பிரச்சனையில் இருந்து மீள்கிறார்? காயத்ரியின் சென்ட்டிமென்ட்டான நகை கிடைத்ததா? சரியான நேரத்திற்குக் காயத்ரியைச் சந்திக்காத நந்தன் லோகநாதனின் காதல் என்னானது? ராதிகா ஆப்தேவின் கணவர் பிழைத்தாரா? விதார்த் தன் குற்றவுணர்வை எப்படி இறக்கிவைக்கிறார்? நிவாஸ் ஆதித்டனின் காதல் என்னானது என படத்தில் கதாபாத்திரங்கள் போலவே பின்னிப் பிணைந்திருக்கும் கதைகளும் அதிகம். மிக நேர்த்தியான திரைக்கதையால் சுபமாக முடித்து வைக்கிறார் இயக்குநர் ராஜன் மாதவ். ஒரு போலீஸ்காரரின் குயுக்தி, அது புரியாமல் அவரை நம்பி ஏமாறும் ஒரு பேராசிரியர், மகனின் சிகிச்சைக்குப் பணம் கிடைக்காமல் அல்லாடும் ஒரு தந்தை என இன்னமும் கூடக் கிளைக்கதைகள் உண்டு படத்தில்.

நிவாஸ் ஆதித்தன், பிளேட் ஷங்கர் இணை நன்றாக நடித்துள்ளனர். காயத்ரியிடம் நகையைத் திருடிவிட்டுச் சொதப்பும் இடம் ஓர் உதாரணம், திருவாக நடித்திருக்கும் விதார்த்திற்கு, ரெளடி வேடமும் கச்சிதமாகப் பொருந்துகிறது. க்ளைமேக்ஸில், சிறுமியை அடைத்து வைத்திருக்கும் மார்க்கெட் ரவியாக நடித்திருக்கும் வெற்றியிடம், ‘நீ வெட்டுறியா? இல்ல நான் வெட்டட்டுமா?’ எனக் கேட்குமிடம் அட்டகாசம். ‘மற்றவரைக் கஷ்டப்படுத்திச் சம்பாதிக்கிறவன் நீ; மற்றவரைச் சந்தோஷப்படுத்திச் சம்பாதிக்கிறவ நான். எப்படிப் பார்த்தாலும் உன்னை விட நான் தான் ஒசத்தி’ என்று நிவேதிதா, விதார்த்தின் மனதில் சிலுவையை ஏற்றுகிறார். அதைச் சுமக்கும் விதார்த், ஒரு சிறுமியின் கணிவான பார்வையிலும் கண்ணீரிலும், சிலுவையை இறக்கி வைப்பதோடு தனது எல்லாப் பாவத்தையும் தொலைக்கிறார்.