Shadow

கோலி சோடா 2 விமர்சனம்

Goli-Soda-2-movie-review

ஆட்டோ ஓட்டுநனான சிவா, பரோட்டா கடையில் வேலை செய்பவனான ஒலி, தாதாவுக்கு கார் ஓட்டிக் கொண்டிருந்தவனான மாறன் என மூன்று இளைஞர்களின் வாழ்க்கையிலும் நடக்கும் எதிர்பாராச் சம்பவங்கள், ஒரு புள்ளியில் அவர்களை நெருக்குகிறது. அப்புள்ளியில் இணையும் அவர்கள், தங்களை நெருக்கும் நபர்களிடம் இருந்து எப்படித் திரும்பி நின்று எதிர்க்கின்றனர் என்பதே படத்தின் கதை.

மூன்று இளைஞர்களையும் ஒரு ஜாதிக் கட்சி மீட்டிங் இணைக்கிறது. அதற்கு முன்பே, மூவருக்கும் பொதுவான ஒரு நலம்விரும்பியாக ஃபார்மசி வைத்திருக்கும் கணேசன் உள்ளார். கணேசனாக சமுத்திரக்கனி நடித்துள்ளார். வீறு கொண்டு சீறும் நபராக இல்லாமல் பொறுப்புணர்வுள்ள விவேகியாக உள்ளார். ஆனாலும், பேசிக் கொண்டே இருக்கும் பாத்திரத்தில் இருந்து அவரை விலக்கி வைத்துப் பார்க்க விஜய் மில்டனாலும் முடியவில்லை. நடேசன் எனும் சமுத்திரக்கனி ஏற்றிருக்கும் பாத்திரத்திற்குச் சீரியசான ஃப்ளாஷ்-பேக் ஒன்றை வைத்துள்ளார் கதாசிரியர் அருண் பாலாஜி. ஆனால் அது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எதிர்பாராத விதமாய் ஏற்படும் ஒரு தள்ளுமுள்ளுவில் கீழே விழுவது என்பதை வாழ்க்கையையே தீர்மானிக்கும் பெரும் நிகழ்வாகப் பூதாகரப்படுத்தியுள்ளனர். இளைஞர்களுக்கு யோசனை தரும் வழிகாட்டியாகச் சித்தரிக்கப்படும் நடேசன், யோசனைகள் பெரியவர் (மது) உள்ளே போனால்தான் வருமெனத் தவறான ஓர் எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படுத்துகிறார்.

இந்தப் படத்தில் ஒரு ‘காப் (Cop)’ ஆக வருகிறார் கெளதம் வாசுதேவ் மேனன். கதாபாத்திரத்தின் பெயர் ராகவன் ஐபிஎஸ் (IPS). கண்டிப்பாக, கெளதமின் மனதிற்கு மிக நெருக்கமான பாத்திரமாகத்தான் இது அமைந்திருக்கும். அவர் திரையில் காட்டி வரும், காட்ட விழையும் ஒரு கெத்தான நல்ல ‘காப்’பாக அவருக்கு நடிக்கக் கிடைத்துள்ளது. அவர் மிகவும் எஞ்சாய் செய்து நடித்துள்ளதாகவே தெரிகிறது. கதையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனினும், திரையில் தன்னிருப்பைக் கம்பீரமாகப் பதிந்துள்ளார் என்றே சொல்லவேண்டும். இதிலுள்ள அழகான முரண் என்னவெனில், கெளதமின் படங்களில் விக்டர் ரெளடியாக வருவார், இப்படத்தில் மேல்மருவத்தூருக்குச் செவ்வாடை உடுத்திய தில்லை ரெளடியாக வருகிறார்.

மாறன் எனும் பாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளரான பாரத் சீனி நடித்துள்ளார். சில ஃப்ரேம்களில், ‘அட்டக்கத்தி’ தினேஷை ஞாபகப்படுத்தும் முகச் சாயலைப் பெற்றுள்ளார். எனினும், தனது பாத்திரத்தை உள்ளுணர்ந்து அழகாகப் பதற்றமில்லாமல் செய்துள்ளார் பாரத் சீனி. ஒலியாக எசக்கி பரத்தும், சிவாவாக வினோத்தும் நடித்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநன் சிவா, சமுத்திரக்கனியையும் மிஞ்சிய அக்மார்க் நல்லவன். அப்படியாகச் சித்தரிக்கப்பட்டு, அதனக்கு நிகழ்ந்த அநியாயத்திற்கு அவன் கோபப்படுகிறான், திருப்பி அடிக்க நினைக்கிறான் என்ற மனமாற்றம் கச்சிதமாகக் காட்சிப்படுத்தப்படவில்லை. அது உள்ளூற எழும் கோபமாக இல்லாமல், ‘இந்த சீனுக்கு நாம கோபப்படணும்’ எனப் பொம்மைக் கோபமாக உள்ளது. அதுவே, ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற நினைக்கும் மாறனின் பத்தற்றமும் கோபமும் இயல்பானதாய் உள்ளது. ‘நீ என்ன தப்புப் பண்ண?’ என்ற சமுத்திரக்கனியின் ஆறுதல், ஒலியின் கோபத்தைக் கிளறிவிடுகிறது.

படத்தின் இரண்டாம் பாதியில், பிரதான கதாபாத்திரங்கள் கொதிநிலையிலேயே உள்ளனர். எவர் சொல்லியும் கேட்காமல் கைகளில் ஆயுதம் ஏண்ஹ்துகிறார்கள். பேச முடிந்த ரோகிணி, ஏனோ ஓவியமாகத் தன் கதையைக் கூறி மூவரின் மனதையும் மாற்றுகிறார். ஓவியமாகக் காட்டப்பட்டாலும், பின்னணியில் ரோகிணியின் குரலில் அவரது ஃப்ளாஷ்-பேக்கை சொல்லவும் செய்கிறார் வாயை அசைக்காமலே! வில்லனை அடிக்கும்பொழுது, சொந்த கோபம் போய் மூவருக்குமே சமூகக் கோபம் திடீரெனப் பிறீட்டு எழுகிறது. அந்தச் செயற்கைத்தனமும், சண்டைக் காட்சிகளில் விறுவிறுப்பைக் கூட்ட தீபக் செய்துள்ள ஃபாஸ்ட்-கட் எடிட்டிங்கும் சுப்ரீம் சுந்தரின் சண்டைக் காட்சிகளை ரசிக்க விடாமல் செய்கிறது.

க்ளைமேக்ஸில் நடக்கும் அதிவேக ட்விஸ்ட்கள், படம் ஏற்படுத்தியிருக்க வேண்டிய தாக்கத்திற்குப் பெரும் ஸ்பீட் ப்ரேக்கராக உள்ளது. லாஜிக் எல்லாம் எதற்கு, பையன்களின் ஹீரோயிச உணர்வெழுச்சி மட்டும் போதாதா என்ற மனநிலையில் யதார்த்தமில்லாத் திரைக்கதையை நம்பிக் களமிறங்கியுள்ளார் விஜய் மில்டன். பிரதான வில்லன் துறைமுகம் தில்லையாக மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் நடித்துள்ளார். அவரைக் காணாவிட்டால் அவரது அடியாட்களும், வீர வகையறாவின் ஜாதிச் சங்க தலைவரை அவரது கட்சியினரும், கவுண்சிலரை அவரது அடிபொடிகளும் தேட மாட்டார்களா?