அடையாறு ஆற்றில் வெள்ளம் வந்து, கரையோரம் இருந்த வீட்டிற்குள் எல்லாம் 12 அடி உயரத்துக்கும் மேலாகத் தரைத்தளத்தையே மூழ்கடிக்கும் அளவுக்கு நீர் புகுகிறது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான வெங்கடேசனும், அவர் மனைவி கீதாவும் வீட்டிற்குள் சிக்கிக் கொள்கின்றனர். வீட்டு வாசற்கதவைத் திறக்கும் சாவியோ தண்ணீரில் எங்கோ விழுந்து விடுகிறது. முட்டி, தொடை, இடுப்பு, மார்பு, கழுத்து என நீரின் அளவோ உயர்ந்து கொண்டே இருக்கிறது. கட்டில் மீது, நாற்காலி போட்டு அதன் மேலேறி நின்றாலும், கூரை வரை நிரம்பிவிடும் நீரிலிருந்து அவர்களால் தப்ப இயலவில்லை. 2 டிசம்பர் 2015 அன்று, நிர்வாகச் சீர்கேட்டினால் நேரிட்ட செயற்கை வெள்ளத்தால் ஏற்பட்ட எண்ணற்ற அவலங்களில் ஒன்றான இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் – ஹவுஸ் ஓனர்.
அல்சைமர்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான வாசுதேவனுக்கு, தான் ஆசையாகக் கட்டிய வீட்டின் மீதான பிரேமமும் மயக்கமும் மட்டும் அப்படியே இருக்கிறது. ‘இது என் அகம் ஆக்கும்’ என எரிந்து விழுகிறார். மனைவி, மகளை மறந்து விடும் அவருக்கு, அந்த வீடு தன்னுடையது என்பது மட்டும் மனதின் ஆடி ஆழம் வரை வேர் விட்டிருக்கிறது. கடுப்பாகும் அவர் மனைவி ராதா, கணவனை ‘ஹவுஸ் ஓனர்’ என்றழைக்கிறார். ஆனால், ஆரோகணம் என தனது முதல் படத்திற்கு கவித்துவமாகத் தலைப்பிட்ட லஷ்க்மி ராமகிருஷ்ணன், இப்படத்தின் கதைக்குப் பொருந்தும்படி இன்னும் சிறப்பான தலைப்பைச் சூட்டியிருக்கலாம்.
படத்தின் முதற்பாதி அவ்வளவு ரம்மியமாக உள்ளது. முழுமுதற்காரணம் ஜிப்ரான். இடைவிடாத மழையின் பின்னணி ஓசை, மனதை வருடி மயக்குகிறது. அதுவும் மழை என்பதே பெருங்கனவாகிவிடுமோ என ஏங்கிப் போயிருக்கும் நபர்களுக்கு, குறிப்பாக சென்னைவாசிகளின் காதுகளுக்கு, அமுத கானமாய் இனிக்கும். இரண்டாம் பாதியோ, அந்தக் கொடிய இரவான டிசம்பர் 1, 2015-ஐ நினைவுபடுத்துகிறது. நினைவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், அந்த இரவின் நசநசப்பை, காலின் ஊடாக ஊசி போல் ஏறும் ஈரத்தை, நாலாபுறமும் தண்ணீர் சூழ்வதால் ஏற்படும் திகிலை, வீட்டை அலசி எல்லாப் பொருட்களையும் அடித்துச் செல்லும் வெள்ள நீரைத் தடுக்க இயன்றிடாத இயலாமையை மீண்டும் பட்டவர்த்தனமாய் உணரவும் செய்து விடுகிறது.
முதற்பாதியின் ரம்மியத்திற்கு மற்றொரு காரணம், கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கும் லவ்லின் சந்திரசேகர். இவர், தில்லு முல்லு படத்தில் ரஜினியின் தங்கையாக அறிமுகமான விஜி சந்திரசேகரின் மகள் ஆவார். அவரது பெரிய விழிகளும், வெட்கப் புன்னகையும் ராதா எனும் கதாபாத்திரத்திற்கு அழகு சேர்க்கிறது. ராதாவை, எல்லையில்லாக் காதலுக்கான உருவகமாகவும் கொள்ளலாம். ‘என் ராதா நன்றாகச் சமைப்பாள்; அழகாக இருப்பாள்; ஒல்லியாக இருப்பாள்’ என இள வயது ராதாவைப் பற்றி யாரிடமோ சொல்வது போல் வயது முதிர்ந்த ராதாவிடமே சொல்லிக் கொண்டிருப்பார். சொன்னதையே சொல்லிக் கொண்டு, முரண்டு பிடிக்கும், தனது 72 வயது கணவன் மீது அவ்வப்போது பொங்கியெழும் எரிச்சலைச் சமாதானம் செய்து கொண்டு, ராதா தனது எல்லையில்லா அன்பைப் பொழிந்தபடியே இருக்கிறார். வயது முதிர்ந்த ராதாவாக ஸ்ரீரஞ்சனி நடித்துள்ளார். படத்தைத் தாங்கும் பிரதான கதாபாத்திரம் இவரே! ஆனால், லவ்லின் சந்திரசேகர் பெயர் முதலிலும், ஸ்ரீரஞ்சினி பெயரை இரண்டாவதாகவும், ஆடுகளம் கிஷோர் பெயரை மூன்றாவதாகவும் திரையில் போடுகின்றனர்.
செயற்கை வெள்ளத்துக்கு முந்தைய நாள், பாதி இரவில், ‘நீ யார் என் படுக்கையில் வந்து படுத்திருக்கிறாய்?’ எனப் பதறிப் போய், தன் மனைவியை எட்டி உதைத்து கட்டிலில் இருந்து கீழே தள்ளுவார் வாசுதேவன். ஸ்ரீரஞ்சனி, தனது கையறு நிலையையும் ஏமாற்றத்தையும் சிறு முணுமுணுப்போடு கடந்துவிடுவார். பெருமைக்குத் தன் வீடு என கிஷோர் நினைத்துக் கொண்டாலும், வீட்டையும் கிஷோரையும் கட்டி ஆள்வது ஸ்ரீரஞ்சனிதான். அதற்கான காட்சிகள் நிறைய வைத்துள்ளார் இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். வீட்டில் பம்பரமாகச் சுழன்று, ஸ்ரீரஞ்சனி செய்யும் எல்லா வேலைக்கான டீட்டெயிலிங்கிலும் அதிக கவனம் செலுத்தியுள்ளார். பாலக்காட்டு பிராமண பாஷை ஸ்ரீரஞ்சனிக்கு வரவில்லை என்பதால், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் டப்பிங் கொடுத்துள்ளார். அது, ஸ்ரீரஞ்சனி கதாபாத்திரத்தை உள்வாங்க சிரமமாக இருப்பதோடு, பாலக்காட்டு பாஷைக் கொஞ்சம் அந்நியத்தன்மையை ஏற்படுத்துகிறது. அப்பொழுதெல்லாம் ஜிப்ரானின் மழையிசை தான் படத்தோடு நம்மைக் கட்டிப் போடுகிறது. மெல்ல லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் குரல் பின்னுக்குப் போய், ஸ்ரீரஞ்சனியின் பாத்திரம் மனதை ஆக்கிரமிக்கத் தொடங்குகிறது. அவர் வாழ்நாள் எல்லாம் பொக்கிஷமாக நினைத்து மகிழக்கூடிய ஒரு படமாக இது அவருக்கு அமையும்.
வயது முதிர்ந்த வாசுதேவனாக ஆடுகளம் கிஷோர் நடித்துள்ளார். இள வயது வாசுதேவனாக நடித்துள்ள பசங்க கிஷோரை விட, இராணுவ அதிகாரிக்கான மிடுக்குடனும் கம்பீரத்துடனும் அசத்துகிறார் ஆடுகளம் கிஷோர். ஏற்கும் பாத்திரமாக மாறிவிடும் அற்புதமான குணசித்திர நடிகரென்ற புகழை இப்படத்தில் இன்னும் அதிகபடுத்திக் கொண்டுள்ளார். மறதி மேலோங்கி, அவரது இயலாமை வெளிப்படும் இடத்திலெல்லாம் குரலை உயர்த்தி, தன் இருப்பை ஆதிக்கமாக வெளிகாட்டுகிறார் வாசுதேவன். தொலைகாட்சியில் நடக்கும் நிகழ்ச்சியைப் பார்த்து, ‘இப்ப நீ ஏன் வந்தாய்? அவளையே பாடச் சொல்லு’ என கட்டளையிடுவார். பழைய ஞாபகங்கள் மேலோங்க, இள வயது ராதாவுடன் நடனமாடுவதாக எண்ணி, 60 வயது மிகுந்த மனைவியுடன் நடனமாடிக் கொண்டிருப்பார். திடீரென உணர்வு வந்து அவரைத் தள்ளிவிட்டு, ஸ்ரீரஞ்சினி மீது மாவை தட்டி வீசுவார். பார்வையாளர்களுக்கு கிஷோரின் மீது கோபம் வராது. அதுதான் படத்தின் வெற்றி. அல்சைமர்ஸ் பற்றிய புரிதலை அதிகமாக்கவே செய்கிறது. ஏனோ, தனியராய் மருத்துவமனையில் வாடும் தெப்ராஜ் சஹாய் (அமிதாப் பச்சன், Black(2005)) ஞாபகம் வந்துபோனது. வாசுதேவனுக்கு அத்தகைய துர்பாக்கிய நிலைமை ஏற்படாமல், ராதா குழந்தையைப் பார்த்துக் கொள்வது போல் கவனித்துக் கொள்கிறார்.
ஆடுகளம் கிஷோருக்குச் சின்னச் சின்ன விஷயங்கள், அதாவது ஒரு துண்டைப் பார்த்தால் கூட, அவருக்கு அவரது இளமைக்காலம் ஞாபகம் வந்துவிடும். மழை நீரில் அடித்து வந்த ஒரு பூவைக் கொண்டு வருவார். இளமையில், ராதாவுக்கு ஒரு பூவை வைத்துவிட்டு, ராதாவின் பாட்டியாக நடித்திருக்கும் அம்மணி படத்து நாயகி சுப்புலட்சுமி பாட்டியிடம் கொடுப்பார். அவர் வாங்க மறுக்கும்பொழுது, ‘அப்ப ஆணாதிக்கத்தோடு ஏதோ சொல்லி வச்சாங்க’ எனச் சொல்லி பூவைப் பாட்டியிடம் தருவார். அதே வாசுதேவன், தன் மனைவி மீது ஆதிக்கம் செலுத்துவதற்குக் காரணம், வயோதிகத்தாலும் மறதியாலும் எழுந்த அவரது பாதுகாப்பின்மை தான் காரணம் என பத்திரைகையாளர் சந்திப்பில் விளக்கமளித்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இப்படி வாழ்க்கையின் சுவாரசியமான முரண்களைச் சுட்டிக் காட்டியுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், படத்தைச் சோகமாக முடிக்காமல், பார்வையாளர்களின் முடிவுக்கே படத்தை விட்டுவிடுவது சிறப்பு. தனது பட்ஜெட்டிற்குள், வீட்டுக்குள் வெள்ளம் புகுவது போல் ‘செட்’ போட முடியாத என கலை இயக்குநர்கள் கைவிட்டுவிட்டதால், ஒரு பள்ளம் வெட்டி அதற்குள் அந்த வீட்டின் செட்டமைத்து நீரை நிரப்பி க்ளைமேக்ஸ் காட்சியை எடுத்துள்ளனர். அதாவது கலை வடிவமைப்பையும், லட்சுமி ராமகிருஷ்ணனே செய்துள்ளார். குறைவான பட்ஜெட்டில் ஒரு படத்தை நிறைவாக முடிக்க, முன் தயாரிப்புத் திட்டம் (paper work) எவ்வளவு முக்கியம் என்பதைத் தனது முதற்படமான ஆரோகணம் முதலே நிரூபித்து வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
ஆரோகணம், ஒரு பெண்ணின் மனப்பிறழ்வைத் துல்லியமாகப் பதிந்திருக்கும்; ‘நெருங்கி வா முத்தமிடாதே’ படத்தில் ஆதிக்க சாதியின் ஆணவப் போக்கை வெளிச்சமிட்டிருப்பார்; அம்மணி, ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்கு வந்த ஒரு தன்னம்பிக்கை பாட்டியால் இன்ஸ்பையராகி எடுத்திருப்பார். இப்படம், வயதான தம்பதியின் சர்வைவல் பற்றிய அழகான படம். தமிழில் தொடர்ந்து இயங்கி வரும் மிக முக்கியமான பெண் இயக்குநர் என்ற அங்கீகாரத்தை அவருக்கு வழங்க இங்கே பலருக்கு எண்ணற்ற மனத்தடை இருக்கலாம். இப்படத்தில், செயற்கை வெள்ளத்தை விமர்சிக்கவில்லை, சென்னையின் மனிதத்தைச் சிலாகிக்கவில்லை என குற்றச்சாட்டுகளைக் கண்டுபிடிப்பார்கள். ஆனால், இறந்த போன வெங்கடேசனுக்கும் கீதாவிற்கும், இந்த வெள்ளம் எதனால் ஏற்பட்டது எனத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுடைய அன்றைய இரவும், தொடர்ந்து வந்த பகலும் எப்படி இருந்திருக்கும் என்ற அழகான புனைவே இப்படம். இப்பொழுது இல்லாவிட்டாலும், அவரது படைப்புகள் அவருக்கான இடத்தையும் அங்கீகாரத்தையும் ஒருநாள் நிச்சயம் பெற்றுத்தரும்.