Search

டாய் ஸ்டோரி 4 விமர்சனம்

toy-story-4-movie-review

“நட்புன்னா என்ன?” – ஃபோர்க்கி

“நானும், நீயும்தான்” – வுட்டி

“குப்பையா?” – ஃபோர்க்கி

மேலே உள்ள அந்த இமேஜும், இந்த வசனங்களும் தான் ஒட்டுமொத்த படத்தின் சாராம்சமே!

போனி எனும் சிறுமி, குப்பைத் தொட்டியில் வீசப்படும் ஃபோர்க் வகை ஸ்பூனில் இருந்து ஒரு பொம்மையைச் செய்கிறாள். அந்த பொம்மைக்கு உயிர் வந்துவிடுகிறது, ஆனாலும் அது தன்னை ஒரு பொம்மையாக ஏற்றுக் கொள்ள முடியாமல், தானொரு குப்பைதானே என மனமுடைந்து, குப்பைத் தொட்டியைத் தேடி அதில் சென்று விழ சதா முயன்று கொண்டே இருக்கிறது. ஃபோர்க்கி விழும் ஒவ்வொரு முறையும், டாய் ஸ்டோரி 1,2,3 பாகங்களின் நாயகன் ஷெரிஃப் வுட்டி, ஃபோர்கியை சிறுமி போனியிடம் கொண்டு போய்ச் சேர்க்கிறான்.

ஒருமுறை ஓடிக் கொண்டிருக்கும் வேனில் இருந்து ஃபோர்க்கி வெளியில் குதித்துவிடுகிறது. போனிக்கு ஃபோர்கியைப் பிடிக்கும் என்பதால், ஃபோர்கியை மீட்க வுட்டியும் வேனில் இருந்து குதிக்கிறான். வுட்டி, ஃபோர்கியை மீட்டு சிறுமி போனியிடம் கொண்டு போய்ச் சேர்க்கிறானா என்பதுதான் படத்தின் கதை. முதல் மூன்று பாகங்களை விட, லைட்டர் வெர்ஷனில் கதை சென்றாலும், சுவாரசியத்துக்கும் விறுவிறுப்புக்கும் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லாத படம்.

இந்தப் படம், தனது முந்தைய படங்களை விடவும் ஒரு படி மேல் என்றே சொல்லவேண்டும். முழுமையான, அழகான பொம்மைகள், கார்ட்டூனில் அதிகம் சாகசம் செய்த பொம்மைகளையே, குழந்தைகள் தங்களது விருப்பத்திற்குரிய பொம்மையாக வைத்திருப்பர் முந்தைய பாகங்களில். இம்முறையோ, குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ஒரு ஸ்பூனை பொம்மையாக்கி மகிழ்வாள் போனி. குழந்தைகள் அப்படித்தானே? அவர்கள் கண்ணில் படும் எது ஒன்றும் அவர்களுக்கு விளையாட்டுப் பொருள்தானே!

1995 இல் வெளிவந்த டாய் ஸ்டோரி ஒரு வரலாறு. முதல் முழு கணினி அனிமேஷன் படம் என்ற பெருமை அதற்கு என்றுமுண்டு. பிக்ஸார் அனிமேஷன் ஸ்டுடியோஸின் ஜான் லசேட்டர், சினிமாவின் தவிர்க்க முடியாத பெயரானது இப்படத்தின் மூலமாகத்தான். 1999 இல் வந்த டாய் ஸ்டோரியின் இரண்டாம் பாகம், 2010 இல் வந்த டாய் ஸ்டோரியின் மூன்றாம் பாகம் எல்லாம் சேர்ந்து, கணினி அனிமேஷன் படம் தொடர்களின் அதிகம் வசூலித்த வரிசையில் நான்காம் இடத்தைப் பெற்றது. டாய் ஸ்டோரியின் நான்காம் பாகத்து வரவால், வரிசையில் மேலேற வாய்ப்புள்ளது. மினியன்ஸின் அதகளத்தால், முதல் இடத்தில் டெஸ்பிக்கபிள் மீ, வசூல் சாதனையில் முதலிடத்தில் உள்ளது.

வசூலைக் கொண்டு, டாய் ஸ்டோரியின் தரத்தை நிர்ணயம் செய்வது அபத்தமான ஒரு விஷயம். டெஸ்பிக்கபிள் மீ இன் முதல் பாகமே 2010 இல், டாய் ஸ்டோரி வரலாறாகிவிட்ட 15 ஆண்டுகளுக்குப் பின்பு தான் வந்தது. அதே ஆண்டில் வெளிவந்த டாய் ஸ்டோரி 3, டெஸ்பிக்கபிள் மீ-யை வசூலில் இரண்டு மடங்கு சாதனை படைத்தது. மூன்றாம் பாகத்தோடு, டாய் ஸ்டோரிக்கு மிக அற்புதமான முடிவைக் கொடுத்து தொடரை அழகாக முடித்திருந்தனர். அதற்கு அடுத்த பாகத்தைத் துவங்க, ஒரு முரட்டுத் தைரியம் வேண்டும். ஏனெனில், முதல் பாகம் வெளியாகி 24 ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஆனால், பிக்ஸார் படம் அனைத்து வயதினருக்குமானது. அவர்களைப் போல் கதைச் சொல்லலில் ஒரு தரத்தைக் கடைபிடிக்கும் மற்றொரு நிறுவனம் இல்லை என்றே சொல்லுமளவு அசத்தி வருகின்றனர். அதற்குச் சான்றாய் இந்தப் பாகமும் அமைந்துள்ளது. படத்த்தின் ஒரே குறை, டாய் ஸ்டோரியின் மற்ற பாகத்தைப் பார்க்காதவர்கள் கதைக்குள் ஒன்றுவது சற்று சிரமம். போ பீப் எனும் கதாபாத்திரம், மூன்றாம் பாகத்தில் வராது. ஆனால், நான்காம் பாகத்தின் கதாநாயகி அந்தப் பாத்திரம்தான். பார்வையாளர்களுக்குக் கதாபாத்திரங்கள் மட்டும் பரீச்சயமாகியிருந்தால், அவர்களைப் படத்திற்குள் சுலபமாகக் கரைத்துக் குழந்தைகளாக மாற்றிவிடும் ரசவாதத்தை பிக்ஸார் பார்த்துக் கொள்ளும். கதாபாத்திரம் தெரியாவிட்டாலும், அது சற்று தாமதமாய்ப் பாதி படத்திற்கு மேல் அது நிகழ்ந்தே தீரும்.

முந்தைய பாகங்களை விட நகைச்சுவை அம்சமும் இப்படத்தில் கூடுதல். லைட் பஸ் இயரிடம், வுட்டி தனக்கு உள்ளிருந்து குரல் கேட்கும், அதன்படி செயல்படுவேன் எனச் சொல்வான். ‘உள் குரலா?’ என பட்டனைத் தட்டும் லைட் பஸ் இயர், கேட்கும் ஆட்டோமேட்டட் குரலைக் கேட்டு சாகசம் செய்வது அட்டகாசம். டூக் காபூம் எனும் கனடா நாட்டு பைக் ஓட்டும் ஸ்டன்ட் பொம்மை, சின்னஞ்சிறு கிக்கிள் மெக்டிம்பிள்ஸ் பொம்மை, அதீத கற்பனை வளமுடைய டெட்டி கரடி பொம்மைகள் என ஒவ்வொரு பாத்திரமும் அட்டகாசமான நகைச்சுவைக்கு உத்திரவாதமளித்துள்ளனர். முந்தைய பாகங்கள் போல் இதில் வில்லன் பொம்மைகள் என்று கூட யாரும் இல்லாதது, இந்தப் படைப்பை முழுமையாக்குகிறது.

குழந்தைகளின் மீது அதீத பாசமும், விசுவாசமும் கொண்ட வுட்டி ஷெரீஃப் எடுக்கும் முடிவு, இத்தொடர் படங்களுக்கு மீண்டும் நிறைவானதொரு முடிவைத் தந்துள்ளது. அடுத்த பாகம் எடுக்காமல் விட்டால் நன்றாக இருக்கும், அப்படி எடுத்தே தீருவேன் என்றால், குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு வருட இடைவெளிக்குள்ளாவது அடுத்த பாகத்தை எடுத்து விட்டால் நல்லது. ஆன்டி போல் குழந்தைகள் சீக்கிரம் வளர்ந்து விடுவார்கள்.

படத்தை 3டி ஆக எடுக்கவேண்டும் என்ற ஆர்வத்தையும் ஹாலிவுட் இயக்குநர்கள் குறைத்துக் கொள்ளலாம். ஒரு எஃபெக்ட்டும் காணவில்லை. திரையரங்கில் நமக்குத் தரப்படும் கண்ணாடியில் கோளாறோ என வீண் சந்ட்ஹேகம் எழுவதுதான் மிச்சம். இல்லையென்றால் காலகாலத்திற்கும் மனதில் நிற்பது போல் மை டியர் குட்டி சாத்தான் போலவோ, தி வாக் போலவோ 3டி எஃபெக்ட்ஸ் காட்சிகள் இருந்தால் நன்று.