Shadow

அம்மணி விமர்சனம்

Ammani Tamil Review

சினிமாத்தனங்கள் அற்ற மீண்டும் ஓர் ஆரோகணத்தைத் தந்துள்ளார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன். ‘ஜீ தமிழ்’ சேனலில் தொகுத்தளித்த ‘சொல்வதெல்லாம் உண்மை’ எனும் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட வாலாம்பா பாட்டியின் வாழ்க்கையால் கவரப்பட்டு, இப்படத்தை இயக்கியுள்ளார் லட்சுமி.

கைக்குக் கை மாறும் ‘மணி (money)’ இருக்கே, அம்மணி மீதே படத்தின் கதாபாத்திரங்களுக்கு கண். ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் உடைய ஒவ்வொரு குடும்பமும் காலங்காலமாக எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையைப் பற்றி விரிவாகப் பேசுகிறது அம்மணி படம். அரசு மருத்துவமனையில் துப்புறவுத் தொழிலாளியாக இருக்கும் சாலம்மாவிற்குக் கணவரில்லை. அவரது மூத்த மகனுக்கு 10 வயது இருக்கும் பொழுதே அவரது கணவர் இறந்து விடுகிறார். மகளோ ஒரு ரெளடி எனப் பெயரெடுத்த அடாவடியான ஆளுடன் ஓடி விடுகிறாள்; மூத்த மகனோ குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெயின்ட்டர்; இளைய மகனோ மனைவியின் பேச்சிற்கு ஆடும் ஆட்டோ டிரைவர். சாலம்மா கட்டும் வீடு அடுத்து யாருக்கெனப் பிரச்சனை எழுகிறது. தன் கண் முன்னாலேயே தன் குடும்பத்தின் வீழ்ச்சியையும், வீட்டுற்காக மகன்கள் சண்டை போடுவதையும் காண நேருகிறது. பணியில் இருந்த பொழுது கிடைத்த மரியாதை, ஓய்வு பெற்ற பின் காணாமல் போகிறது. அன்பு, பாசம், குடும்பம் போன்றவற்றிற்கு எந்தப் பொருளும் இல்லையா எனத் துணுக்குறும் சாலம்மா பாத்திரத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் நிறைவாக நடித்துள்ளார்.

ஒவ்வொருவருக்கும் தன் மரணம் எவ்வாறு அமைய வேண்டுமென்ற ஆசையோ, கற்பனையோ உள்ளூற இருக்கும். இரண்டு மகன்களுடைய தனது இறுதி ஊர்வலம் களை கட்டும் என்பது சாலம்மாவின் நம்பிக்கை. ‘அடி போடி, செத்த பிறகு என்ன தெரிய போகுது?’ என சாலம்மாவிடம் கேள்வி எழுப்புகிறார் அவரது பழைய வீட்டில் குடியிருக்கும் அம்மணி எனும் 80 வயது மூதாட்டி. தனிக்கட்டையான அவர், இரவில் குப்பை பொறுக்கிப் பிழைப்பவர். ‘பணத்துக்காக அலையும் மகன்கள் நாய்களை விட மோசம். எவனையும் நம்பி நானில்லை.. போங்கடா போங்க என மகிழ்ச்சியாய் பாட்டுப் பாடிக் கொண்டு வாழ்க்கையைத் தன் போக்கில் ரசிப்பவர். சூழ்நிலையின் தகிப்பைத் தாள முடியாத சாலம்மாவிற்கு ஞானக் குரு ஆகிறார் அம்மணி. சாலம்மாவின் வாழ்க்கை பற்றிய கற்பிதங்கள் எல்லாம் தவிடுபொடியாகி, அவர் எடுக்கும் முடிவு தான் படத்தின் முடிவு.

வாழ்க்கையை வாழ்தல் என்பது ஒரு கலை. ஒருவரை ஒருவர் அண்டி வாழும் நம் சமூகத்தில், யாருக்கும் ‘ப்ரைவசி’யோ, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளோ என்று ஏதுமில்லாமல் போய்விட்டது. மகன், மகளுக்காக என ஓடிக் களைப்புற்று ஓய்வு பெறும் பொழுது, ‘இதுவரை தான் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்துள்ளோமா?’ என்ற கேள்வியும் ஆற்றாமையும் மன உளைச்சலும் எழுவதைத் தடுக்க இயலாது. பெரும்பாலான இந்தியக் குடும்பங்களின் மீது படிந்திருக்கும் சாபம் இது. குடும்பம், பொழுதுபோக்கு, தனிப்பட்ட ரசனை என எதற்கும் நேரம் ஒதுக்காமல், தியாகியாய்த் தன்னைப் பாவித்து உழைத்துக் கொண்டே இருப்பவர்களை என்ன சொல்ல? கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த சமூகமாய் இருந்த பொழுது, இது தியாகமாக இல்லாமல் தன்னிச்சையாகவும் இயல்பாகவும் நிகழும் விஷயமாக இருந்தது. உலகமயமாக்குதல் முதல், பல தரப்பட்ட புறக் காரணிகளால் குடும்ப அமைப்பு பாதிக்கப்படும் காலகட்டத்தில் வாழும் நாம், எவரையும் நொந்து ஒன்றுமாகப் போவதில்லை. அம்மணி சொல்வது போல், வாழும் வரை மகிழ்ச்சியாகவும், எவரையும் நம்பி இல்லாமல் போராடி வாழத் தயாராகிக் கொள்வதே சரி. இல்லையெனில், ‘இனிமே நான் தான் உனக்கு சோறு போடணும்’ என்ற கொடுமையான விஷம் தோய்ந்த வார்த்தைகளால் உடைந்து போக நேரிடும்.

Ammani Subbalakshmi‘கடை மூடிடுவாங்களே!’ எனக் கவலை கொள்ளும் ஜார்ஜ் மரியான், மனைவியின் சிகிச்சைக்காகத் தேயும் மார்ச்சுவரி ஆள் எனக் கதாபாத்திரத் தேர்வுகளும் கன கச்சிதம். அம்மணியாக நடித்திருக்கும் 83 வயதாகும் சுப்புலட்சுமிதான் படத்தின் நாயகி. ‘அன்பே வா, முன்பே வா’ என அம்மணி பாடிக் கொண்டே, தலை வாரும் காட்சி அவ்வளவு அருமை. ‘மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்’ என்பது பழமொழி. அம்மணியின் அனுபவத்தைப் பெறாதவர்களுக்கு, அவர் சொல் இனிக்கா விட்டாலும், யதார்த்தத்தைக் கண்டிப்பாகத் தோலுரித்துக் காட்டும். முகத்தில் அறையும் யதார்த்தம் தான், இந்தப் படத்தினுடைய வெற்றி. லட்சுமி ராமகிருஷ்ணனனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அழகியலுடனும் யதார்த்தத்துடனும் எடுக்கப்பட்டுள்ள மிகப் பொறுப்பானதொரு சினிமா.