Shadow

ஹவுஸ்மேட்ஸ் விமர்சனம் | Housemates review

காதலிக்கும் பெண்ணைக் கல்யாணம் செய்வதற்காகத் தர்ஷன் வேளச்சேரியில் ஒரு வீட்டை வாங்குகிறார். கணவன் மனைவியாகக் குடியேறியது முதலே அமானுஷ்யமான சம்பவங்கள் அவ்வீட்டில் நிகழ்கின்றன. 2022 ஆம் ஆண்டில் மனைவியுடன் வசிக்கும் தர்ஷன் அவர் வீட்டில் சுவிட்ச் போட்டால், 2012 இல் அதே வீட்டில் வாழும் காளி வெங்கட்டின் வீட்டில் லைட் எரியும். காளி வெங்கட் வீட்டில் ஃபேன் போட்டால், தர்ஷன் வீட்டில் ஃபேன் சுற்றும். இந்த இடியாப்பக் குழப்பம் ஏன் ஏற்பட்டது, எப்படி இக்குழப்பத்தால் இரு குடும்பமும் பாதிக்கப்படுகின்றனர், அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்பதுதான் படத்தின் கலகலப்பான எமோஷ்னலான கதை.

காளி வெங்கட்டின் மகனாக நடித்துள்ள மாஸ்டர் ஹென்ரிக், ஒரு க்யூட்னெஸைப் படத்திற்குக் கொண்டு வந்துள்ளான். தங்கள் வீட்டில் பேய் உள்ளதென நிரூபிக்க அவன் மேற்கொள்ளும் ஒரு சிறிய சோதனையில் வெற்றி பெற்றதும், அவன் அடையும் மகிழ்ச்சி ரசிக்க வைக்கிறது. படம் முழுவதும் அட்டகாசமான ரியாக்‌ஷன்களால் வசீகரிக்கிறான். தர்ஷனின் மனைவியாக அர்ஷா சாந்தினி பைஜூ நடித்துள்ளார். வீட்டிலுள்ள பேய் தொந்தரவை எடுத்துச் சொல்லியும், அதை நம்ப மறுக்கும் கணவனால் மன உளைச்சலுக்கு உள்ளாகும் காட்சியில் நன்றாக நடித்துள்ளார். பிரதான கதாபாத்திரங்கள் அனைவருக்குமே முக்கியத்துவம் உள்ளவாறு திரைக்கதை அமைத்துள்ளார் T.ராஜவேல். நாயகனின் நண்பர்களாக வரும் விஜய் டிவி தீனா, அப்துல் லீ ஆகியோர் பாத்திரங்கள் கூட ரசிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளன.

கனா படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷை ஒரு தலையாகக் காதலிக்கும் பாத்திரத்தில் அறிமுகமாகியிருப்பார் தர்ஷன். அப்படமும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படத்தில், முகம், குரல், நடிப்பு, மேனரிஸம் என எல்லா விதத்திலும் உதயநிதி ஸ்டாலினின் மினி வெர்ஷனை நினைவுப்படுத்தும்படி இருப்பார். ஆனால் கலகலக்க வைக்குமளவு தன் முத்திரையைப் பதிந்திருப்பார். இப்படத்தில், படத்தின் நாயகனாக எல்லா உணர்ச்சிகளையும் பழுதில்லாமல் வெளிப்படுத்தி, படத்தோடு பார்வையாளர்களை ஒன்றச் செய்துவிடுகிறார். பெரும்பாலான கதை, வீட்டுக்குள்ளே நடக்கும்போது, அதிலுள்ள சவாலை ஒளிப்பதிவாளர் M.S.சதீஷும், கலை இயக்குநர் N.K.ராகுலும் சாமர்த்தியமாகக் கலையாக்கியுள்ளனர். இரண்டு டைம்லைனில் நடக்கும் கதையை எந்தக் குழப்பமும் இல்லாமல் சுவாரசியமாக அளித்ததில் படத்தொகுப்பாளர் A.நிஷார் ஷரேஃபின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

இது, காளி வெங்கட்டிற்கான ஆண்டு. படத்தின் நாயகன் என்றே சொல்லுமளவிற்கு மிக அற்புதமாக நடித்துள்ளார். கண்ணுக்குப் புலப்படாத குடும்பத்திற்காக ஏங்குவதாகட்டும், கண்ணுக்கு முன் உதவி எனக் கேட்டு இறைஞ்சுபவனுக்கு இரக்கப்படுவதாகட்டும், பேயை விரட்ட முயற்சிப்பதாகட்டும், காளி வெங்கட் கலக்கியுள்ளார். அவருக்கும், அவர் மனைவியாக நடித்துள்ள வினோதினியுடனான கெமிஸ்ட்ரி இயல்பாய்ப் பொருந்திப் போகிறது. படத்தின் எமோஷ்னல் கன்டென்ட்டை அழகாக நகர்த்திச் செல்ல இருவரும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். காளி வெங்கட் தானொரு அபாரமான கலைஞன் எனக் கிடைக்கும் வாய்ப்புகளிலும் எல்லாம் அழுத்தமாகப் பதிந்து வருகிறார்.

தி லேக் ஹவுஸ் எனும் ஆங்கிலப் படத்தின் கருவை எடுத்தாண்டிருந்தாலும், அதை மூன்று குடும்பங்களுக்கு இடையேயான உணர்ச்சிப்பூர்வமான இணைப்பாகக் கொண்டு வந்து முடித்து, T.ராஜவேல் முழு நிறைவை அளித்துள்ளார் கதைக்கும் பார்வையாளர்களுக்கும்.