Shadow

கனா விமர்சனம்

Kanaa-movie-review

மகளிர் மட்டைப்பந்து (கிரிக்கெட்) பற்றிய முதற்படம். பாடலாசிரியராகவும் பாடகராகவும் பேர் பெற்ற அருண்ராஜா காமராஜா இயக்கிய முதற்படம். சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதற்படம். இப்படி பல முதல் ‘கனா’க்கள் திரை கண்டுள்ளது.

“விளையாட்டைச் சீரியஸா பார்க்கிற நம்ம ஊர்ல, விவாசயத்தை விளையாட்டா கூடப் பார்க்க மாட்டேங்கிறாங்க” என்றொரு வசனம் உண்டு படத்தில். அதுதான் படத்தின் கதை.

விவாசயமும், கிரிக்கெட்டும் முருகேசனின் இரு கண்கள். தன் தந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட முருகேசனின் மகள் கெளசல்யா, தந்தையை மகிழ்விக்கும் பொருட்டு இந்திய அணிக்காக விளையாடி உலகக் கோப்பையை வெல்லவேண்டும் என கனவு காண்கிறாள். அந்தக் கனா எத்தனை சவால்களுக்கும், சோதனைகளுக்கும் பின் நிறைவேறியது என்பதே படத்தின் கதை.

கெளசல்யாவாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு இது நிச்சயம் ஒரு வாழ்நாள் கதாபாத்திரம். ஒரு பெண் கிரிக்கெட் விளையாடுவதா, அதுவும் ஆண்களுடன் விளையாடுவதா, விளையாடி என்ன பயன் என ஆயிரம் கேள்விகள், பின்னுக்கு இழுக்கும் அலட்சியங்கள், அவமானங்கள் என்ற பல சோதனைகளைக் கெளசல்யா கடக்க வேண்டியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் அத்தனை உணர்வுகளையும் அழகாகப் பிரதிபலித்துள்ளார். அவரை ஒரு ஸ்போர்ட்ஸ்-வுமனாக ஏற்க முடிகிறது. அத்தனை உழைப்பினைப் போட்டுள்ளார். சிறு வயது கெளசல்யாவாக, கிரெளண்டே கதியென்றிருக்கும் சிறுமியும் மிக அருமையாக நடித்துள்ளார். படம் வெளியாகும் முன்பே மிகப் பெரிய வெற்றியடைந்த ‘வாயாடி பெத்த புள்ள’ திரையில் காண அற்புதமாய் இருந்தது. திபு நைனன் தாமஸின் பின்னணி இசை இன்னும் கூடச் சிறப்பாக இருந்திருக்கலாம்.

முருகேசனாக சத்யராஜ் நடித்துள்ளார். அவரது வழக்கமான பாணியில், விவசாயத்தைக் காதலிக்கும் வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தின் குவிமையம் கிரிக்கெட்டிலும், விவசாயத்திலும் ஒன்றாக ஒருங்கிணைத்துப் பயணிக்கிறது. நெல்சன் திலீப்குமார் என்ற கதாபாத்திரத்தில், முன்னாள் கிரிக்கெட் வீரராகவும், டி20 பெண்கள் டீமின் கோச்சாகவும் வருகிறார் சிவகார்த்திகேயன். படத்தைத் தயயாரித்ததோடு மட்டுமில்லாமல், படத்தின் முடிவிலோர் அழகான கேமியோ ரோலில் கலக்கியுள்ளார். குறிப்பாக, அவரது வசனங்கள் எல்லாம் படத்திற்கு வலு சேர்க்கிறது. மொழியை லாகவமாகக் கையாண்டு எதிரணி வீரர்களைக் குழப்புவது ரசிக்க வைத்தாலும், சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில், அவர் சொல்லித் தரும் வியூகங்கள் எல்லாம் கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாய் உள்ளது. க்ளைமேக்ஸில், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவர் இறக்கும் பிரம்மாஸ்திரம் அட்டகாசம். அஞ்சலி, ரம்யா, பிரதீபா என இந்திய அணி பிளேயர்களாக வரும் பெண்கள் அனைவருமே உண்மையான மேட்சினைக் காணும் அனுபவத்தைத் தந்துள்ளது சிறப்பு.

சத்யராஜின் நண்பர் தங்கராசாக நடித்திருக்கும் இளவரசுவும், தன் இயல்பான நடிப்பால் மிகவும் கவர்கிறார். படத்தின் மிகவும் அற்புதமான தருணத்தை, கெளசல்யாவின் அம்மா சாவித்திரியாக நடித்திருக்கும் ரமா வழங்கியுள்ளார். ஒடுங்கி இருக்கும் தன் மகளுக்கு ஊக்கமளிக்கும் அந்தக் காட்சியில் திரையரங்கில் கைதட்டல் எழுகிறது. இப்படியான ஓர் உணர்வெழுச்சியைப் படத்தின் முடிவு தராதது இந்த ஜானர் படத்தின் குறை. படம் சுபமாகவும் நிறைவாகவும் முடிகிறது. எப்படியும் நாயகி தன் லட்சியத்தை அடைவாள் என்பது உள்ளங்கனி நெல்லிக்காயாகத் தெரியும். அதையும் மீறி, அந்த வெற்றித் தருணத்தை ரசிகர்களுக்கும் கடத்த வேண்டிய சவாலிற்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு நியாயம் கற்பித்திருக்கலாம்.

முதல் படத்திலேயே, உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என நாயகியை மையப்படுத்திய “கனா” எனும் திரைப்படத்தை இயக்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ். அதை ரசிக்கும்படியும், விவசாயத்தை மையப்படுத்தியும், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பேசியும், மிக அழகானதொரு படமாகவும் கொடுத்து தன் திறமைக்குக் கட்டியம் கூறிக் கொண்டுள்ளார். இயக்குநராக வேண்டும் என்ற அவரது நீண்ட நாள் கனா மிகச் சிறந்த படைப்பாக நனவாகியுள்ளது.