

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘தாய் கிழவி’ படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய நடிகை ஸ்ரீபிரியா, “படத்தின் முன்னோட்டம் மட்டும்தான் பார்த்தேன். அதைப் பார்த்துவிட்டு ராதிகாவிடம் படத்தின் நிகழ்வுக்கு நான் வர வேண்டும் என்று கேட்டேன். ஏனெனில், என் ராதிகாவைப் பலரும் புகழ்ந்து பேசுவதை நான் கேட்க வேண்டும். இந்தப் படத்தில் ராதிகாவின் அப்பாவைப் பார்த்தேன். ராதிகாவின் அம்மா இருந்திருந்தால் இந்தப் படம் பார்த்து எவ்வளவு மகிழ்ந்திருப்பாரோ அதே சந்தோஷம் எனக்கும் இருக்கிறது. ராதிகாவின் நடிப்பை பார்த்து கமல் வியந்துபோய் பாராட்டினார். ராதிகாவுக்குத் தேசிய அளவில் நடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு. இந்தப் படம் அந்த குறையை நீக்கும் என நம்புகிறேன்” என்றார்.
நடிகை ராதிகா, “எல்லோருடைய அன்பு, நம்பிக்கை, ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் 48 வருடங்கள் கடந்தும் என்னை சினிமாவில் நிலைக்க வைத்திருக்கிறது. இத்தனை வருடங்களில் நல்ல நடிகராக மட்டுமில்லாமல் நல்ல மனிதனாகவும் சிவகார்த்திகேயன் வளர்ந்திருக்கிறார். சினிமாவிற்குள் வர உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். ஆனால், நீடித்து நிலைக்க உங்கள் உழைப்பு முக்கியம். என் சினிமா கரியரில் இன்னொரு திருப்புமுனை கொடுத்த சிவகார்த்திகேயன், சிவகுமார் இருவருக்கும் நன்றி. உண்மையில் இந்தக் கதை ரஜினிகாந்த் நடிக்க வேண்டியது. அவர் இந்த வேஷம் போட்டு நடிக்க மாட்டார். அதனால், இந்தக் கதாபாத்திரத்தைப் பெண்ணாக மாற்றி என்னை நடிக்க வைத்திருக்கிறார்கள். அப்படித்தான் நான் இதைப் பார்க்கிறேன். 4 மணி நேரம் ஹெவியான மேக்கப் போட்டு நடிக்க எனக்கு இன்ஸ்பிரேஷன் கமல்ஹாசன்தான். ’உன்னைத் தாண்டி அந்தக் கதாபாத்திரம்தான் திரையில் தெரிய வேண்டும்’ என்று கமல் என்றோ சொன்னது என் மனதில் ஒட்டிக்கொண்டது. அதைத்தான் இதில் செய்திருக்கிறேன். அதிகம் பேசாமல் அமைதியாக இருக்கும் சிவகுமார் முருகேசனிடம் ஒரு ஃபயர் இருக்கிறது. அதை சிவகார்த்திகேயன் சரியாகக் கண்டுபிடித்திருக்கிறார். வலியை உணர்ந்த பெண் சொல்கிற கதைதான் ‘தாய் கிழவி’. பெண்களாகிய நம்மைப் பற்றி யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் உங்கள் இலக்கை நோக்கிப் பயணியுங்கள். எல்லாத் துறையில் இருக்கும் பெண்களும் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.
என்னை அறிமுகப்படுத்திய குருநாதர் பாரதிராஜா சார் ‘தாய் கிழவி’யாக நான் நடித்திருப்பதை அவரால் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு நிறைய இருக்கிறது. சீக்கிரம் அவர் உடல்நலன் தேறி வந்து இந்தப் படம் பார்க்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன். என்னை நடிகையாக்கிய என் அம்மா இந்தப் படத்தைப் பார்க்கவில்லையே என்ற வருத்தம் உண்டு. பெண் எம்.ஆர். ராதாவாக தான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். நான் சினிமாவிற்குள் வந்தபோது என்னை அவமானப்படுத்தியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் இன்று பதில் சொல்கிறேன். நான் எம்.ஆர். ராதா மகள் என்று!” என்றார்.
நடிகர் சிவகார்த்திகேயன், “சினிமாவில் சின்ன கதாபாத்திரத்தில் ஆரம்பித்து மக்கள் என்னை ஹீரோவாக ஏற்றுக்கொண்டார்கள். சினிமாவில் வெற்றி பார்த்த பின்பு என் குடும்பம் நன்றாக இருந்தது. இருந்தாலும் என்னுடைய நண்பர்களுக்கும் எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. என்னைவிட சினிமாவில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவன் அருண்ராஜா. அவர் சொன்னதுபோல, அவருக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த எஸ்.கே. புரொடக்ஷன்ஸ். கனவோடு திருச்சியில் இருந்து வந்தவர்கள் சேர்ந்து ‘கனா’ என்ற படத்தை எடுத்தோம். பின்பு ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘டாக்டர்’, ‘டான்’, ‘கொட்டுக்காளி’, ‘குரங்கு பெடல்’ என பல படங்கள் தயாரித்தோம். ’கொட்டுக்காளி’ படத்தின் வெற்றி எனக்கு நிறைவாக இருக்கிறது. ’தாய் கிழவி’ கதை கேட்டதுமே சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்.
’தாய் கிழவி’ பார்த்துவிட்டு இந்தப் படத்தில் நிறைய நட்சத்திரங்களை உருவாக்கி இருக்கிறீர்கள் என கமல் சார் சிவகுமாரிடம் சொன்னார். ’தாய் கிழவி’ கதாபாத்திரத்தில் நடிக்க ராதிகா மேம் தவிர வேறு ஆள் கிடையாது என்பதைப் படம் பார்த்துவிட்டு அனைவரும் சொல்வார்கள். ’சேயோன்’ படத்திற்கு அடுத்தும் மீண்டும் நான் சிவாவுடன் தான் படம் செய்ய இருக்கிறேன். எனக்குப் பேரும் புகழும் கொடுத்த இந்தத் துறைக்கு நான் திரும்ப ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் படங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறேனே தவிர யாருக்கும் போட்டியாகவோ, யாரையும் தாண்டி வர வேண்டும் என்ற எண்ணத்திலோ இல்லை. நான் நடிக்கும் படங்களின் வெற்றி, தோல்விக்கு நானும் பொறுப்பு என்பதை உணர்ந்தே செயல்படுகிறேன். ’தாய் கிழவி’ படத்தை வரும் 27ஆம் தேதி குடும்பத்தோடு சென்று திரையரங்குகளில் பாருங்கள். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்” என்றார்.


