Shadow

“With Love: அனஸ்வராவின் நடிப்பிற்கு விசில் அடித்தேன்” – ஷான் ரோல்டன்

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் (With Love)” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

நடிகர் மணிகண்டன், “நான் இரண்டு நாள் முன்னால் இந்தப் படத்தை பார்த்தேன். உண்மையிலேயே படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம், இதோட சிம்பிளிஸிட்டி. சின்னச் சின்ன எமோஷன்ஸை எவ்வளவு அழகா, பிரமாண்டமா படமாக்கியிருக்காங்கன்னு பார்க்கும்போது ஆச்சர்யமா இருந்தது. பெர்ஃபார்மன்ஸ், ரைட்டிங், சினிமேட்டோகிராஃபி, எடிட்டிங் என எல்லாமே ஸ்கிரிப்ட்டுக்காக வேலை செய்திருக்கிறார்கள். எதுவுமே ஸ்கிரிப்ட்டைக் கெடுக்காமல் மிக அழகாக இணைந்திருந்தது இந்தப் படத்தோட பெரிய பலம். அபிஷந்த் நடிப்பு, அனஸ்வராவின் நடிப்பு, ஜாஃபர் பண்ணிய கேரக்டர், அனிஷா ரோல், எல்லாமே ரொம்ப பிரமாதம். குறிப்பா ஒரு சீன், இரண்டு நாள் கழிச்சும் மனசை விட்டு போகவில்லை. இயக்குநர் மதன், மோகன் ராஜ் ஐயா, ஷான் ஐயா, புரொட்யூசர்ஸ்,எல்லாருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றிகள் தொடர்ந்து வரட்டும் வரணும். இந்தப் படம் ஒரு பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், “இந்தப் படத்தில் பணியாற்றிய ஒருவராகச் சொல்கிறேன், இந்த படம் பல காரணங்களுக்காக எனக்கு மிகவும் நெருக்கமானது. டூரிஸ்ட்ஃபேமிலி படத்தின் கதையை முதலில் அபிஷன் சொல்ல வந்த போது, கொஞ்சம் தயக்கமாக இருந்தார். ஆனால் கதை சொல்ல ஆரம்பித்ததும், அவர் ஒரு புதிய ஆளாக மாறிவிட்டார். ஒவ்வொரு காட்சியையும் நடித்துக் காட்டுவார். கண்டிப்பாக ஒரு நடிகராக அவர் மிகப் பெரிய உயரத்திற்குச் செல்வார். ஒரு பெண் கதாபாத்திரத்திற்காக நான் விசில் அடிப்பேன் என்று நான் நினைத்ததே இல்லை. ஆனால் இந்தப் படத்தில் அனஸ்வராவின் நடிப்பு என்னை அவரின் ரசிகனாக மாற்றிவிட்டது. எனக்கு ரொம்-காம் படங்கள் மிகவும் பிடிக்கும். ஆனால் இவ்வளவு ஆழமான விஷயத்தைப் பேசிக்கொண்டே, அதே நேரத்தில் லேசான, ரசிக்கத்தக்க எண்டர்டெய்னராக உருவான ஒரு ரோம்-காம் படமாக இப்படம் இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. படம் மிக அருமையாக வந்துள்ளது. சௌந்தர்யா ரஜினிகாந்த் மேம், ரஜினி சார்க்கு மகளாக இருப்பது அத்தனை எளிதல்ல. அவருக்கு எந்தவிதமான ஆடம்பரமும் இல்லை. சினிமா துறையில் எனக்குக் கிடைத்த ஒரு உண்மையான நண்பர் அவர். அவருக்கு என் நன்றி. இப்படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி” என்றார்.

இயக்குநர் மதன், “இந்தப் படத்திற்கு உறுதுணையாக நின்ற உதவி இயக்குநர்கள் குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் அபிஷந்தின் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் பணியாற்றினேன். அப்போது அவர் அந்தப் படத்தில் வேலை செய்து கொண்டிருந்த சமயத்தில், என்னுடைய இந்தக் கதையை வாசித்தார். கதையைப் படித்த பிறகு, ‘ரொம்ப நல்ல ஸ்கிரிப்ட்’ என்று சொன்னார். நான் அவரிடம், ‘இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பீர்களா?’ என்று கேட்டபோது, அதை லைட்டாக எடுத்துக்கொண்டு, ‘கதை நல்லா இருக்கு. ஒரு நல்ல நடிகரை நடிக்க வை’ என்று சொன்னார். அந்த நேரத்தில் அவர் தனது முதல் படத்தின் ரிலீஸுக்காக ஒரு இயக்குநராகவே பெரிய மன அழுத்தத்தில் இருந்தார். அதற்குப் பிறகு, நாயகனைத் தேட ஆரம்பித்தேன். பலரைப் பார்த்தோம். ஆனால் எதுவுமே சரியாக அமையவில்லை. இதற்கிடையில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் வெளியானது, அதன் பிறகு அபிஷந்த் ஒரு பெரிய இயக்குநராக உருவெடுத்தார். அதனால் அவரை மீண்டும் அந்தக் கதாபாத்திரத்திற்காக அணுக கூட எனக்குத் தயக்கமாக இருந்தது.

ஒரு நாள் நான் மனம் தளர்ந்த நிலையில் இருந்தபோது, என் நண்பர் பாலாவைச் சந்தித்தேன். ஸ்கிரிப்ட்டை மதிப்பிடுவதில் அவரை நான் மிகவும் உயர்வாக மதிக்கிறேன். அவர் என் ஸ்கிரிப்ட்டை வாசித்து, மிகவும் பாராட்டினார். அதே நேரத்தில், ‘இந்தக் கதைக்கு அபிஷந்த்தான் சரியான தேர்வு’ என்று சொன்னார். அதற்கு நான், ‘இப்போ அவர் பெரிய இயக்குநர் ஆகிட்டாரே’ என்று கூறினேன். அதற்கு பாலா, ‘நான் உன் சார்பாக அவரிடம் பேசுகிறேன்’ என்றார். பாலா பேசினதும், அபிஷந்த் மிக சந்தோசமாக ஒப்புக் கொண்டார். ஆனால், ‘முதலில் மதனுக்கு ஓகேவா கேளுங்க’ என்று பாலாவிடம் சொன்னார். நான் முழு மனதோடு சம்மதம் தெரிவித்தேன். அபிஷந்தை நாயகனாக முடிவு செய்த பிறகு, தயாரிப்பாளர் மகேஷ் அண்ணாவைச் சந்தித்து இந்தப் படத்தை தயாரிக்கக் கேட்டோம். அவர் ஸ்கிரிப்ட்டை மிகவும் ரசித்தார். ஆனால், ‘இந்தப் படத்தை நான் சௌந்தர்யா ரஜினிகாந்த் மேடம் உடன்தான் செய்யப்போகிறேன். அவருக்கு ஸ்கிரிப்ட் பிடித்தால்தான் நான் தயாரிப்பேன்’ என்று கூறினார்.

அதற்கு பிறகு, சௌந்தர்யா மேடமிடம் கதை சொல்ல ஆரம்பித்தோம். இரண்டாம் பாதியை நான் சொல்ல ஆரம்பிப்பதற்குள், ‘இந்தப் படத்தை நாம பண்ணலாம்’ என்று அவர் சொன்னது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. உடனே பரபரப்பாக ஆரம்பித்தோம், ஒரே வேகத்தில் படம் முடிந்துவிட்டது. எல்லோரது உழைப்பு தான் காரணம். மேனேஜர் பிரசாந்த், சுரேஷ் எனக்கு மிக உதவியாக இருந்தார்கள். எல்லோரும் தங்கள் சொந்தப்படம் போல வேலை பார்த்தார்கள். ஷான் ரோல்டன் மிக அற்புதமான இசையைத் தந்துள்ளார். அபிஷந்திற்கு என்னைப் பிடிக்கும், அவர் என்னை, ‘உடனே படம் செய்யுங்கள்’ என ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் எனக்கு மிக நெருங்கிய நண்பராகிவிட்டார். அனஸ்வரா மிக நன்றாக நடித்துள்ளார். இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை அனஸ்வரா ராஜன், “மதன் என்னிடம் கதை சொல்ல வரும் போது, ஒரு காட்சியைப் படமாக்கிக் காட்டினார் அது எனக்கு மிகவும் பிடித்தது. உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். இப்படத்தில் என்னுடன் நடித்த அனைவரும் மிகச்சிறப்பான ஒத்துழைப்பைத் தந்தனர். காவ்யா உங்களைத் தமிழ் ரசிகர்கள் நிச்சயம் மனதார காதலிப்பார்கள். இந்தக் குழு என்னை நிறைய சிரிக்க வைத்தது. இந்த சினிமா துறையும், இந்த நகரமும் எனக்கு இன்னும் அதிகமாகப் பிடிக்கக் காரணமாக இருந்தது இந்த அனுபவம் தான். சௌந்தர்யா மேடம் எனக்கு ஒரு பெரிய அக்கா போல அன்பும் ஆதரவையும் வழங்கினார்.

மதன் நான் வேலை செய்த இயக்குநர்களில் மிகவும் க்யூட்டானவர். அதே சமயம், அவர் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தவர். எனக்கு அவர் தந்த மோனிஷா பாத்திரம் ரொம்பவே பிடிக்கும். அந்தக் கதாபாத்திரத்தை எனக்குக் கொடுத்ததற்கு நன்றி. மோனிஷா, சத்யா இடையேயான கெமிஸ்ட்ரி திரையில் வேலை செய்ததற்குக் காரணம், திரைக்கு வெளியே நடிகர் அபிஷந்த் உடன் எனக்கு இருந்த நட்பு தான். மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்த அபிஷந்திற்கு நன்றி. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது” என்றார்.

இப்படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.