Shadow

இந்தியா – இங்கிலாந்து போட்டி: ஒரு போஸ்ட் மார்ட்டம்

ind-vs-eng-wc-2019

உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியாவின் முதல் தோல்வி இது. நிச்சயமாக தனி ஒருவர் இந்தத் தோல்விக்கு காரணமில்லை. ஓர் அணியாகத் தோற்றிருக்கிறோம். யாரேனும் ஒருவரைச் சொல்லியே ஆகவேண்டும் என்று சொல்வதானால் அணித்தலைவர் கோலியைச் சொல்லலாம். இன்னமும் கேதார் ஜாதவ் என்ற கூடுதல் சுமையைச் சுமந்து கொண்டு இருப்பது ஒரு முக்கிய காரணம். வெற்றி பெறும் இணையை மாற்றக் கூடாது என்ற பழமையான மனநிலை வேறு! அதே மாதிரி பார்த்தால் ஜடேஜா மாதிரியான ஸ்லோ லெஃப் ஆர்ம் பந்து வீச்சாளர்களை, இடக்கை மட்டையாளார்கள் பிட்சில் இருந்தால் உபயோகிக்கவே மாட்டார்கள். பொறுப்பாகப் புள்ளிகள் வரட்டும் என்று காத்துக் கொண்டே இருப்பார்கள்.

வின்ஸ் என்ற ஒரே ஒரு பிளேயர் இருந்ததாலேயே படு மொக்கை அணியாகக் காணப்பட்ட இங்கிலாந்து அணி, ராய் வந்த பின்பு முரட்டுத்தனமான அணியைப் போல ஒரு தோற்றத்தைத் தருகிறது. உங்களை மாதிரி நான் லூசு இல்லைடா என்று மோர்கன் செய்த மிக முக்கிய விஷயம் மொயின் அலியைத் தூக்கி விட்டு ப்ளன்கெட்டை அணிக்குள் கொண்டு வந்தது. மொயின் அலி மட்டும் இருந்திருந்தால் 350 டார்கெட்டைக் கூட இந்திய அணி எட்டி இருந்திருக்கும். நேற்றைய போட்டியில் சுமாராக 15 லூஸ் ஓவர்கள் இந்தியாவிற்குக் கிடைத்தது. மார்க் வுட், ரஷீத், ஸ்டோக்ஸ் உள்ளிட்ட பவுலர் காம்போவில். மொயின் அலி மட்டும் இருந்திருந்தால் ஆசிக்கு எதிராக விளையாடியதைப் போன்றே, முதல் பத்து ஓவர்களை மட்டும் கடந்த பின்பு எல்லார் பந்துகளையும் விரட்டி அடித்திருக்க முடியும்.

ப்ளங்கெட்டின் சேர்ப்பு அதைத் தகர்த்து விட்டது. அந்த வகையில் பிட்ச்சை சரியாகக் கணித்த வகையில் மார்கன் சிறந்த கேப்டனாக நடந்து கொண்டார். அதே போன்று இந்தியாவிலும் நேற்றைய போட்டியில் ஏதேனும் ஒரு ஸ்பின்னருக்குப் பதில் புவி இருந்திருந்தால் குறைந்தது 25 ரன்களேனும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். குறிப்பாக கடைசி 6 ஓவர்களில் மிகவும் குறைக்கப்பட்டிருக்கும். புவி காய. காரணமாக விளையாடியிருக்க முடியாது என்றால், இந்த பிட்சுக்கு ஜடேஜா இன்னும் சரியான தேர்வு என்றேனும் கணித்திருக்கலாம்.

ஷமி 5 விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும் சிறப்பாக பந்து வீசினாரா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாகக் கடைசி ஓவர்களில் வீசிய ஃபுல் டாஸ்கள் சிக்சரும், ஃபோருமாக விரட்டி அடிக்கப்பட்டன. 20 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்த ஷமியை விட வெறுமனே 5, 6 ரன்கள் கொடுத்து வீசிய பும்ரா சிறந்த பங்களைப்பைச் செய்தார் என்றே சொல்ல வேண்டும்.

மாறாக இங்கிலாந்து பவுலர்கள் கடைசி பத்து ஓவர்களில் அட்டகாசம் செய்தார்கள். ஏறக்குறைய 50% அளவு ஸ்லோ பந்துகளை, குறிப்பாக பாண்டியாவுக்கு “முடிஞ்சா அடிச்சுக்கோ போ” என்று வீசினார்கள். இந்திய பேட்ஸ்மேன்களைப் பெரும்பாலும் அடுத்த பந்து ஸ்லோ பாலா இல்லையா என்ற குழப்பத்துடனேயே கதற விட்டனர் இங்கிலாந்து பவுலர்கள்.

உண்மையில் அவர்களிடமிருந்து இவ்வளவு க்ளியரான ஸ்ட்ராட்டஜி பிளானை எதிர்பார்க்கவே இல்லை. மாங்கு மாங்கெண்று ஓடி வந்து எறிவதுடன் என் வேலை முடிந்தது என்று பவுலர்களும், கோவம் வநதுச்சுன்னா ஹார்ஷா திட்டிட்டு வந்துடுவோம் என்பது மாதிரியான பேட்ஸ்மேன்களையும் வைத்திருந்த மண்ணாந்தை டீமா இது என்று ஆச்சர்யப்படுத்தினார்கள்.

பேட்டிங்கில் எல்லாம் நாம் பெரிய தவறு செய்ததாய்த் தோன்றவில்லை. ஆரம்ப ஓவர்களில் டாட் பால்களைக் குறைத்திருக்கலாம் தான். ஆனால் இந்த டெக்னிக் நாம் ஏற்கனவே பழகிய ஒன்றுதான். ஆசிக்கு எதிராக இதன் மூலம்தான் நாம்தான் ஜெயித்தோம். தவிர கடைசி 11 ஓவர்களில் 112 ரன் என்ற பத்து ரன் ரேட் என்ற கணக்கு ஒரு பேட்டிங் பிட்ச்சில் நமக்குப் புதுசு இல்லை. சொல்லப்போனால் RRR 8 அல்லது 9 இருந்ததை தோனி இறங்கி 11க்குக் கொண்டு வந்து பின்பு அதைத் துரத்திய வரலாறெல்லாம் நமக்குப் புதிதல்லவே!

இது போன்ற பெரிய ஸ்கோர்களைத் துரத்தும் போதுதான் ஷிகார் தவானின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை நம்மால் உணர முடிகிறது. பவுலர்கள் எளிதில் லைன் & லென்த்தை கை கொள்ள வர முடியாத இட, வல மாற்று ஆட்டக்கார்கள் காம்போவும், ‘ரோஹித் ஃபார்முக்கு வர இன்னும் 25 பால் ஆகுமாம், அது வரை என்னை வெளுக்கச் சொன்னான்’ என்ற செய்தியைச் சொல்லும் ஆட்டமும் நேற்று நமக்குக் கிட்டவில்லை. குறைந்த பட்சம் டாட் பால்கள் குறைந்து 20 ரன்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.

மனதளவில் ரோஹித் அவுட் ஆனாலும், பாண்ட்டும், பாண்டியாவும் இருந்த போது, பத்து ரன் ரேட்டுதான, அடிக்கக் கூடிய ஆளுங்க தான். ‘தா இப்போ அடிப்பானுங்க பாரேன்’ என்று காத்திருந்து காத்திருந்து பசலை படர்ந்ததுதான் மிச்சம். ஆனால் விஜய் சங்கர் இருந்திருந்தால் இந்த எண்ணம் கூட வந்திருக்காது. அப்போதே தொலைக்காட்சியை அணைத்து விடலாம் என்பது மட்டும்தான் ரிஷப் பாண்ட்டின் வெற்றி.

ஹர்திக் அவுட் ஆன பின்பு வந்த கேதார் ஜாதவிற்கு யாரோ அவரை மிகச்சிறந்த ஸ்டைலிஷ் பிளேயர் என்று நம்ப வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. ‘இப்போ ஒரு கவர் ஷாட் முயற்சி பண்றேன். எப்படி இருக்குன்னு பார்த்துட்டு சொல்லுறீங்களா?’ என்று நம்மை இம்சித்துக் கொண்டிருந்தார்.

‘இப்போ எல்லாம் செல்லமாய்ச் சிணுங்குற கிறுக்கு ஹீரோயின்களே எங்களை எரிச்சலாக்குறாங்க, நீ இப்போ என்ன டிரை பண்ற ஜெஸ்ஸி?’ என்று கேட்டு அவரை செவுலிலேயே நாலு விடலாமா என்றுதான் அவரது பேட்டிங்கைப் பார்த்த போது தோன்றியது.

இந்திய அணி தடுமாறும் போதெல்லாம், நம்மைக் காக்கும் குலதெய்வமான பும்ரா, இப்போதும் நம்மைக் காத்திருக்கிறார். அவர் வீசிய பந்தில் ஏற்பட்ட காயத்தால் விஜய் சங்கர் இந்தத் தொடரிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். கேதார் ஜாதவிடமிருந்தும் நம்மைக் காக்க நாம் பும்ராவை நாடுவதைத் தவிர வேறு எந்த வழியும் தெரியவில்லை.

தோனியைப் பற்றிச் சொன்னால் வேறு அவரது ரசிகர்கள் கோவித்துக் கொள்வார்கள். அல்பி மார்க்கல் என்று ஒரு சவுத் ஆஃப்ரிக்கன் பிளேயர் இருப்பார். சிஎஸ்கே அணிக்காகக் கூட விளையாடியிருக்கார். சிக்ஸ் எல்லாம் விளாசுற ஆளுதான். இனி கண்டிப்பா ஜெயிக்கவே மாட்டோம் என்று நிச்சயமாக உறுதியான பின்பு அவர் பேட்டிங்கில் காட்டும் ஆக்ரோஷம் இருக்கிறதே, அது வேட்டையாடும் வேங்கையின் கண்களில் கூட இருக்காது. அப்பேர்ப்ப்ட்ட பிளேயர் அவர்.

நேற்று தோனி அந்த வேலையைச் செவ்வனே செய்தார். எதிர்பார்த்தது மாதிரியே கடைசி ஓவரில் பந்துகளை பவுண்டரிகளுக்கு பறக்க விட்டு ரன் ரேட்டைப் பராமரித்துக் கொண்டார். என்ன ஒன்று அதை டீவியில் பார்க்க ஒருவரும் இல்லை. அவர்கள் அந்த சிங்கிளை எடுக்கும் போதே, டீவியை அணைத்து விட்டு, ஃபேஸ்புக் பாக்கம் ஸ்டேட்டஸ் போடப் போய் விட்டார்கள்.

எல்லா மேட்சிலும் ரன்கள் அடிக்க தோனி என்ன மெஷினா? முதல் 15 ஓவரில் அத்த்னை டாட் பால்கள் வைத்ததே தோல்விக்குக் காரணம், சும்மா தோனியைக் குறை சொல்லாதீர்கள் என்று தோனி ஃபேன்ஸ் வேறு நேற்றிலிருந்து கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனையும் நோக வைத்தது ஏன் நேற்று ஜெயித்துத் தரவில்லை என்ற கோபம் அல்ல. ஏன் ஜெயிப்பதற்கு முயற்சி கூட செய்யவில்லை என்ற ஆதங்கமே. ஒரு வேளை அடிக்கப் பார்த்து அவுட் ஆகி இருந்தால் கூட, ‘பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்’ எனச் சொல்லிட்டுப் போயிட்டே இருந்திருக்கலாமே! இப்படி விட்டுக் கொடுக்குறதுக்காகவா இவ்வளவு தூரம் வந்தோம் என்ற ஆதங்கத்திற்கு எவரிடமும் பதில் இல்லை.

ஒரு வகையில் லீக் ஆட்டத்திலேயே, இப்படியான ஒரு அடி இந்திய அணிக்குத் தேவைதான்.

இதன் மூலம், நம் அணி பந்து வீச்சாளார்கள் எந்த பிட்சிலும், எதிரணியைச் சுருட்டுவார்கள், இறுதி ஓவர்களில் நாம் ஆட்களின் பந்தை விரட்ட முடியாது என்ற பொய்மைகள் களைந்து நிற்கின்றது.

முதல் பதினைந்து ஓவர்களில் ரன்னே அடிக்காம தேமேன்னு நின்னா ஜெயிச்சுட முடியாது என்று பொட்டில் அடித்தாற் போன்று உணர்த்தப்பட்டிருக்கிறது.

வின்னிங் காம்பினேஷனை மாத்த வேணாம்ப்பா என்று பழைய காலத்திற்கு யோசிக்காமல், பிட்ச்சு என்ன சொல்லுதோ அதற்கு ஏற்றவாறு ஆட்களை மாற்ற யோசிக்க ஆரம்பிப்பார்கள்.

‘தோனியும், பாண்டியாவும் இருந்தா கடைசி பத்து ஓவர்களில் 150 ரன்னு கூட அடிப்பாங்கப்பு, ஆமாப்பு’ என்று காற்றில் கம்பு சுத்தாமல், எவ்வளாவு நம்மால் முடியும் என்ற நியாயமான பரிசீலனையைப் பற்றி யோசிக்க ஆரம்பித்திருப்பார்கள்.

அந்த வகையில் இந்தத் தோல்வியை ஒரு வெற்றிகரமான தோல்வி என்று சொல்லிக் கொண்டு நம் மனசைத் தேற்றிக் கொள்ளலாம்.

ஆனால் சந்திரபாபு நாயுடு, திருப்பதியில் லட்டுக்குப் பதிலாக ஜிலேபி போட ஆரம்பிச்சுட்டார் என்ற டகால்ட்டிக்கு சற்றும் குறையாமல், ‘பாகிஸ்தானைப் பழிவாங்க தோனியின் ராஜ தந்திரம்லே அது’ என்று ஒரு மீம் சுற்றிக் கொண்டிருக்கிறதே, அந்த மிஷ்கின் படப் பிரியர்களிடமிருந்து கிரிக்கெட்டைத் தோனியே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது.

பரம பிதாவே, இவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்படியோ போகட்டும். இவர்களிடமிருந்து எங்களை எப்படியேனும் காத்தருளும்.

நந்தகுமார் நாகராஜன்