Shadow

இந்த க்ரைம் தப்பில்ல விமர்சனம்

ஒரே நேரத்தில் மூன்று ஆண்களை காதலிக்கும் இளம் பெண்.  அதே நேரம் வரிசையாக ஒரு வழக்கோடு சம்பந்தப்பட்ட சில முக்கியப் புள்ளிகளை கடத்தி கொலை செய்து வரும் ஓர் இளம் படை. இந்த இரண்டுக்குமான தொடர்பே ”இந்தக் க்ரைம் தப்பில்ல” படத்தின் ஒன்லைன்.

தேவகுமார் இயக்கத்தில்  மதுரா புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில், உருவாகி இருக்கும் இப்படத்தில் ஆடுகளம் ‘நரேன்’ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இவரோடு சின்னத்திரை புகழ் பாண்டி கமல்,  மேக்னா ஈழன், முத்துக்காளை மற்றும் புதுமுக நடிகர் நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.

பழிவாங்கும் இளைஞர் படையை முன்னின்று நடத்தும் கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன் நடித்திருக்கிறார்.  படம் முழுவதும் காலில் அடிபட்ட நிலையில் உட்கார்ந்து கொண்டே இளைஞர்களை ஒன்று திரட்டி வழிநடத்தும் கதாபாத்திரம். கொடுத்த கதாபாத்திரத்தை எவ்வளவு சிறப்பகா செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறார்.

திரைப்படம் சொல்ல வந்த கதை சிறப்பானது தான். ஆனால் அதை சொல்லி இருக்கும் விதம் தான்அயர்ச்சியைக் கொடுக்கிறது.  ஒரு பாலியல் வன்புணர்வைத் தொடர்ந்து, ஏன் நடக்கிறது என்றே தெரியாமல் தொடர்ச்சியாக நடக்கும் வன்முறை காட்சிகள் நமக்குள் எந்தவிதமான உணர்வையும் ஏற்படுத்தாமல் கடந்து செல்கிறது. மேலும் நாயகி மூன்று ஆண்களை ஒரே நேரத்தில் காதலிக்கும் சுவாரஸ்மிக்க காட்சிகள் கூட 80, 90களில் வந்த படங்களை நினைவுபடுத்துவது போல் படமாக்கப்பட்டு இருக்கிறது.

காட்சியாகவோ, வசனமாகவோ, நடிப்பாகவோ, ஒளிப்பதிவாகவோ அல்லது இசையாகவோ  எந்த ஒரு துறை சார்ந்தும் ‘இந்த க்ரைம் தப்பில்ல’  திரைப்படம் நம்மை ஈர்க்கவில்லை என்பதே உண்மை.  ஒவ்வொரு காட்சியும் தொடக்கமும் இல்லாமல் முடிவும் இல்லாமல் தொக்கிக் கொண்டு நிற்கும் உணர்வையையே ஏற்படுத்துகின்றது.

ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்தவர்கள், அதற்கு ஏற்றார் போல் திரைக்கதை அமைத்து, அந்த திரைக்கதைக்கு வலு சேர்ப்பது போல் காட்சிகளையும்  அமைத்திருந்தால் படம் சிறப்பாக வந்திருக்கும்.  இருப்பினும் அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கும் கதைக்களனுக்காகவும்,  அந்த முயற்சிக்காகவும் படக்குழுவினருக்கு ஒரு வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாம். அது தவிர்த்து சொல்லிக் கொள்வது போல் படத்தில் எதுவும் இல்லை.