Shadow

எனக்கு End-யே கிடையாது – விமர்சனம்

கால் டாக்ஸி ஓட்டுநரான சேகர், ஒரு அழகான கவர்ச்சியான இளம்பெண் ஊர்வசியை நள்ளிரவு நேரத்தில் அவரது இல்லத்தில் ட்ராப் செய்வதற்காக செல்கிறார்.  அங்கு அந்த இளம்பெண் சேகரை மது விருந்துக்கு அழைக்க, முன்பின் தெரியாத அந்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் சேகர் நுழைகிறார். அதைத் தொடர்ந்து அந்த வீட்டிற்குள் நடக்கும் எதிர்பாராத திருப்பங்களும், இதனால் சேகர் வாழ்க்கை என்னவானது என்பதும் தான் “எனக்கு End-யே கிடையாது திரைப்படத்தின் கதை.

ஊர்வசி வருகையில் இருந்தே சூடு பிடிக்கத் துவங்கும் திரைக்கதையின் டெம்போ அடுத்து எங்குமே குறைவதே இல்லை. சேகர் ஊர்வசியின் வீட்டுக்குள் நுழைகின்ற அந்த தருணத்தில் நாம் எதிர்பார்ப்பது எல்லாம் ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பது தான். நாம் என்ன எதிர்பார்த்தோமோ அது அப்படி அப்படியே நடப்பதால் பார்வையாளனாக நம்மால் திரைப்படத்துடன் ஒன்ற முடிகிறது.

அதிலும் சேகரும் ஊர்வசியும் சேர்ந்து டகீலா அடிக்கும் காட்சியைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு முறையாவது டகீலாவை ருசி பார்த்து விட வேண்டும் என்கின்ற எண்ணம் மேலோங்குவதே அக்காட்சியின் வெற்றி.  சேகர் மற்றும் ஊர்வசியாக நடித்திருக்கும் விக்ரம் ரமேஷ் மற்றும் ஷ்வாயம் சித்தா இருவரும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.  விக்ரம் ரமேஷ் நாயகனாக நடித்திருப்பதோடு இப்படத்தை இயக்கவும் செய்திருக்கிறார்.

டேவிட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் வெங்கட்ராமன் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.   தயாரிப்பாளர் கம் நடிகர் வகையறாவில் மிகச்சிறந்த நல்வரவு இவர்.  ஹங்ரி வூல்ஃப் புரொடெக்‌ஷன்ஸ் சார்பாக இப்படத்தை தயாரித்திருக்கிறார்.  மஸ்தான் பாய் வேடத்தில் நடித்திருக்கும் சிவக்குமார் ராஜுவும் அமர்களப்படுத்தி இருக்கிறார்.

மொத்தக் கதையும் ஒரு வீட்டிற்குள்ளேயே நடந்தாலும், சுவாரஸ்யம் சற்றும் குறையாதபடிக்கு  வித்தியாசமான கோணங்கள் மற்றும் ஒளியமைப்புகள் மூலம் காட்சியை வடிவைமைத்து  படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறார்.  கலாசரணின் இசையும் படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருக்கிறது.

ஒரு கட்டத்தில் ஒட்டு மொத்த கதாபாத்திரங்களும் ஒரே வீட்டிற்குள் அடைபடும் போதும் திரைக்கதையில் ஒரு தொய்வு ஏற்படுகின்றது. மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் சரக்கடிக்க அமரும் போது திரைக்கதை இனி பலவீனப்பட்டுவிடுமோ என்கின்ற ஐயப்பாடு தோன்றுகிறது. ஆனால் அதைத் தொடர்ந்து நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகள் அந்த பலவீனங்களை மறக்கடித்து மீண்டும் திரைக்கதையை வலுவாக்கிவிடுகிறது.  இருப்பினும் க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் ட்விஸ்ட் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. காவல்துறை இந்த அளவிற்கு அஜாக்கிரதையாக அதுவும் பண விசயத்தில் இருந்தார்கள் என்பது காதில் பூ சுற்றுவது போல் இருக்கிறது.

இந்த ஒற்றை குறையை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் “எனக்கு End-யே கிடையாது” கண்டிப்பாக இந்த வாரத்திற்கான ஒரு நல்ல Enternainer திரைப்படம்.