Shadow

Shot Boot Three விமர்சனம்

நான்கு நண்பர்கள் தொலைந்து போன தங்கள் நாயைத் தேடிச் செல்லும் சாகசங்கள் நிறைந்த பயணம் தான் shot Boot Three திரைப்படத்தின் கதை.

பணக்கார அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி மூவரும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள்.  தங்கள் சுக துக்கங்களோடு தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களையும் கூட பங்கு பிரித்துக் கொள்ளும் பாசக்காரப் புள்ளைகளாக இருக்கும் அவர்களுக்கு, அந்த அப்பார்ட்மெண்டின் எடுபிடி வேலைகளை செய்து கொண்டு இருக்கும் பூவையாரும் நல்ல நண்பன்.  தனக்கு விளையாட்டுத் துணையாக ஒரு தம்பி கூட வேண்டாம், ஒரு நாய்குட்டி போதும் என்று கோரும் தங்கள் நண்பனின் கோரிக்கையை அவன் பெற்றோர் உதாசீனப்படுத்த, நண்பர்கள் சேர்ந்து ஒரு குட்டி நாய்க்குட்டியை தங்கள் நண்பனின் பிறந்தநாள் பரிசாக கொடுக்கிறார்கள். அப்படி கிடைத்த அவர்களின் நட்பு வட்டத்திற்குள் வந்த நாய்க்குட்டி ஒரு நாள், இவர்களின் அஜாக்கிரதையால் காணாமல் போகிறது.  அந்த நாய்க்குட்டியைத் தேடி வீட்டிற்கு தெரியாமல் செல்லும் இந்த நண்பர்களின் வீரதீர சாகசங்கள் நிறைந்த பயணம் வெற்றியில் முடிந்ததா இல்லை தோல்வியில் முடிந்ததா..? என்பதை விளக்கிறது திரைக்கதை.

நாய் கேட்டு அடம் பிடிக்கும் சிறுவனாக கைலாஷ் கீத்-தும் அவனின்  பெற்றோராக ஸ்நேகா மற்றும் வெங்கட் பிரபு இருவரும் நடித்திருக்கிறார்கள்.  மற்ற குழந்தை நட்சத்திரங்களாக சூப்பர் சிங்கர் புகழ் ப்ரிணிதி, பூவையார் மற்றும் வேதாந்த் ஆகியோரோடு குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி பெட் ரேவதி என்கின்ற பெயரில் நடித்திருக்கிறார்.  ஆட்டோ டிரைவர் வேடத்தில் யோகி பாபு வருகிறார். வழக்கம் போல் அவர் ஆங்காங்கே உதிர்க்கும் அவரின் ஒன்லைனர்கள் ஊசிப் பட்டாசாக நம் மனங்களை குதூகலிக்கச் செய்கின்றன. அருணாச்சலம் வைத்தியநாதன் எழுதி இயக்கி இருக்கிறார். வீணை மேதை ராஜேஷ் வைத்யா இசையமைத்திருக்கிறார்.

சிறுவர்கள் குடும்பத்தோடு கண்டு களிக்கும் ஒரு பொழுதுபோக்கு சித்திரமாக இயக்குநர் இதை உருவாக்கி இருக்கிறார்.  இன்றைய குழந்தைகள் கேட்ஜெட்களை உபயோகப்படுத்துவதிலும் மற்றைய பொது அறிவு விசயங்களிலும் எவ்வளவு முதிர்ச்சி அடைந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை சில காட்சிகள் மூலம் உணர்த்தி இருக்கிறார். குழந்தைகளுக்கு இடையே இருக்கும் பாசமும் அன்னோன்யமும் நெக்குருக செய்கின்றது.

நாய் தொலைந்த புள்ளியிலிருந்து தொடங்கும் அவர்களின் பயணங்கள், செல்போன் திருட்டு, சைல்ட் டிராபிக்கிங், அனிமல் அப்யூஸ் என்று பல அடுக்குகளின் வழியாக தொடர்ச்சியாக பயணிப்பதன் மூலம்,  இளம் சிறார்களுக்கு இந்த அடுக்குகள் குறித்தான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி செல்கிறது.

தங்கள் செல்போனை திருடிச் சென்றவனை ஒரு சிறுவன் தாக்குவது,  பூவையார் தலைமையில் சிறுவர்கள் பாடி கட்டாத ஆட்டோவில் பயணம் செல்வது,  அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் தங்கள் நாய் மேக்ஸை மாநகராட்சி அதிகாரிகளை மீறி தூக்கிக் கொண்டு வருவது என குழந்தைகளை மகிழ்விக்கும் படியான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைவாக காணப்படுகிறது.

தங்கள் நாய் மேக்ஸை காணவில்லை என்று தெரியும் இடத்திலும், அதை நண்பர்களோடு சேர்ந்து கண்டறியும் இடத்திலும் எமோஷ்னல் கொஞ்சம் குறைவாக இருந்தது போல் தோன்றுகிறது. அந்த இரண்டு இடத்திலும் இன்னும் கொஞ்சம் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கலாம்.  ராஜேஷ் வைத்யாவின் இசையும் பிண்ணனி இசையும் லயிக்க வைக்கிறது.

மொத்தத்தில் குழந்தைகளோடு சென்று ஒரு முறையாவது கண்டு களிக்கலாம் இந்த Shot Boot Three. –யை. இது அவர்களுக்கான சிறிய விருந்து.