இது ஓர் ஓராள் படை (ஒன்-மேன் ஆர்மி). இப்படைக்கு வீரமோ, பலமோ குறிப்பிடும்படி இல்லை. ஆனால், சாதுரியமாகவும் துரிதமாகவும் செயல்படக் கூடிய அறிவே படையின் ஒரே ஆயுதம். அதைக் கொண்டு, ‘சோட்டா ராஜ்’ எனும் பயங்கரவாதியின் சதித் திட்டத்தை நாயகன் எப்படி முறியடிக்கிறான் என்பதே படத்தின் கதை.
மூன்று வருடங்களுக்கு ஒரு படமென்ற ரீதியில் வந்துள்ள இயக்குநர் கெளரவ் நாராயணனின் மூன்றாவது படம். நேர்த்தியான திரைக்கதையால் படத்தைச் சுவாரசியப்படுத்துள்ளார். அதையும் மீறி, படத்தில் இவரது வெற்றி என்பது, பரோட்டா சூரியின் ஒரே மாதிரியான, பார்ப்பவர்களை இம்சிக்கும் நடிப்பை முடிந்த அளவு மாற்றி, சூரியையும் ரசிக்கும்படி திரையில் காட்டியிருப்பதைத்தான் சொல்ல வேண்டும். காமெடியனாக அவரது பாத்திரத்தை மட்டுபடுத்தி இருந்தாலும், நல்லதொரு துணை நடிகராக அவரை உபயோகப்படுத்தி இருப்பது சிறப்பு. இப்படத்தில் எந்த வேடத்தை யார் ஏற்றிருந்தாலும், முடிவில் இது கெளரவின் படமாகவே தனித்துத் தெரியும்.
பார்கவியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். காதலிக்கவும் காதலிக்கப்படவும் என்று ஏனோ தானோ என்றில்லாமல், படத்தில் தனது இருப்பை அழுத்தமாகப் பதிந்துள்ளார். ரிச்சார்ட் M.நாதனின் வைத்திருக்கும் க்ளோச்-அப் ஷாட்ஸ்களும், கேமிரா கோணங்களுமே அதற்குக் காரணம். அறிவே துணை என நம்பும் மதுசூதனன் பாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். வேலை போய் இரண்டு மாதங்களாகி விட்டது என்ற சோகத்தையோ, அதற்குரிய உடல்மொழியையோ உதயநிதி தன் நடிப்பில் கொண்டு வராதது மிகப் பெரும் குறை.
நாயகனின் அண்ணன், அசிஸ்டென்ட் கமிஷ்ணர் தீனா செபஸ்டியனாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷின் பாத்திரத்தை, கெளரவ் இன்னும் கொஞ்சம் நேர்த்தியாக உருவாக்கி இருந்திருக்கலாம். ஒன்றிரண்டு காட்சிகள் மட்டுமே வருவதால், நாயகனின் அம்மாவாக வரும் ராதிகாவின் பாத்திரம் மனதில் பதிய மறுக்கிறது.
K.L.பிரவீனின் படத்தொகுப்பு, படத்தின் விறுவிறுப்புக் குறையாமல் பார்த்துக் கொள்கிறது. விபத்துக்கு உள்ளான டேனியல் பாலாஜியின் முகத்தில் வடுக்கள் இயல்பாய்த் தெரியுமளவு நேர்த்தியாக ஒப்பனை செய்துள்ள ஹரிநாத்தின் பணி குறிப்பிடத்தக்கது.
யாகவராயினும் அறிவைப் பயன்படுத்தினால், எத்தகைய பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்கிறார் கெளரவ் நாராயணன். அதையும் சுவாரசியமாகக் காட்டியிருப்பதால், இப்படம் நிச்சயமாய் வெல்லும்.