மிலிட்டரி ஆஃபீஸரான விஷாலுக்கு வங்கியில் பெர்ஸனல் லோன் தர மறுக்க, ஒரு ஏஜென்ட் போலி ஆவணங்கள் மூலம் பிசினஸ் லோன் வாங்கித் தருகிறான். தங்கையின் கல்யாணத்திற்காக வாங்கின அப்பணம், நூதன முறையில் திருடப்படுகிறது. போலி ஆவணங்கள் காட்டி வாங்கப்பட்டதால் போலிஸிலும் புகார் அளிக்க முடியாத பட்சத்தில், சோல்ஜரான விஷால் எப்படித் தான் இழந்த பணத்தை மீட்கிறார் என்பதே படத்தின் கதை.
டிஜிட்டல் இந்தியா என ஆசை காட்டுகிறது மோடி அரசாங்கம். அது நிராசையில் தான் முடியுமென மரண பயத்தைக் காட்டியுள்ளார் அறிமுக இயக்குநர் மித்ரன்.
மிலிட்டரி ஆஃபீசர் பாத்திரத்திற்கு அழகாய்ப் பொருந்துகிறார் விஷால். ஆனாலும், மறைந்திருந்து செயல்படும் ஒரு மிகப் பெரிய நெட்வொர்க்கைப் பின் தொடர, சைக்காட்ரிஸ்டான சமந்தாவை அனுப்புவது எல்லாம் ரொம்பவே தமாஷாக உள்ளது. சாமானிய மக்களின் ஆசையைத் தூண்டி, போலி ஆவணங்களை வங்கிக்குக் கொடுக்க வைத்தே அப்பணத்தை அபகரிக்கின்றனர். அப்படியிருக்க ஒரு போலீஸ் உயரதிகாரியின் சம்பளப் பணத்தை எடுத்து விட்டு சவால் விடுகிறார் அர்ஜுன். ஜாலியாகத் தொடங்கும் படத்தில், அர்ஜுன் வந்த பின் தான் விறுவிறுப்புத் தொடங்குகிறது. ‘உங்களிடம் ஒரு ஸ்மார்ட் ஃபோன் இருந்தால் உங்களுக்கு அந்தரங்கம் என்ற ஒன்றே கிடையாது’ என்கிற பயத்தை ஆழ விதைக்கிறார் அர்ஜுன்.
விஷாலின் தந்தையாக வரும் டெல்லி கணேஷ் மிகச் சிறந்த குணசித்திர நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். ஒரு தந்தையாக அவர் தன் மனதில் பொதித்து வைத்திருக்கும் ரகசியமும், அளவிலாப் பாசமும் பார்வையாளர்களைக் கண்டிப்பாக நெகிழச் செய்யும். அன்பு சூழ் உலகு இது என்று உறவுகளின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறார் டெல்லி கணேஷ். மிகக் கொஞ்சலாகப் பேசி, நாயகனின் பயத்தைக் கலைய உதவுகிறார் அழகு நாயகியான சமந்தா.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் மனதில் நிற்காவிட்டாலும் பின்னணி இசையால் திரைக்கதைக்கு உயிரூட்டியுள்ளார். ஜார்ஜ் C.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு படத்திற்குப் பலம் சேர்த்துள்ளது. இரும்புத்திரை எனும் தனது அறிமுக படத்தின் மூலம் இயக்குநர் P.S. மித்ரன் தன் மீது அனைவரது கவனத்தையும் திருப்பியுள்ளார்.