ஒரு கொலை, நான்கு பேர் மீது சந்தேகம் என்ற அகதா கிறிஸ்டி பாணி மர்டர் மிஸ்ட்டரி படத்தை நான் லீனியர் திரைக்கதையில் விறுவிறுப்பாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் மாறன்.
நாயகனை அதிமனிதனாகக் காட்டுவது தமிழ் சினிமாவில் தொன்று தொட்டு வரும் பாரம்பரியப் பண்பாடுகளில் ஒன்று. ஆனால் அதற்கான நியாயத்தை 99% படங்கள் தந்ததேயில்லை. இதிலும் பரத்தாக வரும் அருள்நிதி சர்வ சாதாரணமாக அனைவருடனும் சண்டையிடுகிறார். போலீஸை அடித்துத் தப்பிக்கின்றார், கொலையாளியைப் பிடிக்கத் திட்டமிடுகின்றார், வியூகங்கள் வகுக்கின்றார். இதற்கான குறைந்தபட்ச நியாயம் கூட அந்தக் கதாபாத்திரத்திற்கு இயக்குநர் வழங்கவில்லை. ‘எவ்வளவோ பார்க்குறீங்க, இதையும் ஏத்துக்கோங்க’ என வைத்து விட்டார் போல.
வசதியானவர்களின் பலவீனங்களை உபயோகித்து பணம் பறிக்கும் கும்பலால் பாதிக்கப்பட்ட சிலர் அவர்களைப் பழி வாங்க முயற்சி செய்கின்றனர். இந்தச் சிக்கலில் நாயகனும் நாயகியும் மாட்டிக் கொள்கிறார்கள். நாயகன் உண்மையைக் கண்டுபிடிக்கின்றார்.
அருள்நிதி சொந்தமாக கால் டாக்சி வைத்திருக்கும் ட்ரைவராக வருகின்றார். ஆனால் அவர் நடை, உடை, வசிப்பிடம் அனைத்துமே ஏதோ ஐடி கம்பெனி சீனியர் மேனேஜர் லெவலுக்கு உள்ளது. நடிப்பில் குறையில்லை. மகிமா, அஜ்மல், ஆனந்த்ராஜ், வித்யா, லட்சுமி ராமகிருஷ்ணன், நரேன், சுஜா வருணி என அவரவர் பாத்திரத்திற்குப் பங்கமில்லாமல் நடித்துள்ளனர்.
படத்தின் முக்கியமான பிரச்சனை பல கதாபாத்திரங்கள் திடீரென அறிமுகமாகின்றனர். அதேபோல அப்படியே மாயமாகியும் விடுகின்றனர். ஆனந்தராஜ் காமெடி என்ற பெயரில் வடிவேலுவை ஞாபகப்படுத்துகிறார். சீரியஸான படத்தில், இக்கட்டான சூழ்நிலையிலும் கூடக் காமெடி பண்ணுவது படத்தின் தன்மைக்கு எந்த வகையிலும் உதவவில்லை. நாயகன், நாயகி ரொமான்ஸ் பெரிதாக எடுபடவில்லை. பாடல்கள் பிண்ணனி இசை ஓகே ரகம். லட்சுமி ராமகிருஷ்ணனின் அத்தியாயம் சரியாகக் கதையோடு பொருந்தவில்லை.
படத்தொகுப்பாளரின் உழைப்புதான் படத்தைக் காப்பாற்றுகிறது. நான் லீனியராக கதை நகர்ந்தாலும் எந்தக் குழப்பங்களும் இல்லாமல் காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்கள் இயக்குநரும் படத்தொகுப்பாளரும். படத்தில் குறிப்பிடத்தக்க விஷயம் க்ளைமேக்ஸ். ஒன்றல்ல இரண்டு விதமான க்ளைமேக்ஸ்கள் வைத்திருக்கின்றார். இரவுக்கு (இரண்டு) ஆயிரம் கண்கள் என அடுத்த பாகம் எடுக்க வசதியாக ஓப்பன் என்டிங்காகப் படத்தை முடித்துள்ளார். அதனால் படத்தின் முடிவில் ஒரு முழுமையை உணர முடியாமல் போகிறது.
– பாளையத்தான்