32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஒரு குப்பைக் கதை – மைனா போலொரு படம்

Dinesh R சேலம் Published: 17/05/2018 4 நிமிட வாசிப்பு Updated: 05/06/2018 சினிமா
எழுத்து அளவு:

Oru Kuppai kathai audio launch

‘ஆடுகளம்’ படத்திற்குத் தேசிய விருதை வென்ற டான்ஸ் மாஸ்டர் தினேஷ், “ஒரு குப்பைக் கதை” எனும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வழக்கு எண் மனிஷா நடித்துள்ளார். பாகன் படத்தின் இயக்குநரான அஸ்லம், தன்னிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்த காளி ரங்கசாமியை இயக்குநராக அறிமுகம் செய்து, இப்படத்தைத் தயாரித்துள்ளார். ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனத்தின் மூலம், மே 25 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மே 16 அன்று, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குநர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “விஜய் சார் நடித்த குருவி படம் மூலமாகத் தயாரிப்பில் இறங்கி இதோ பத்து வருடம் வெற்றிகரமாக ஓடிவிட்டது. இதில் நல்ல படங்கள், ஆவரேஜ் படங்கள், சில மட்டமான படங்களைக் கூடக் கொடுத்துள்ளோம். ஆனால் இந்தப் படம் மைனா போல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படம்.

நான் நடிக்க ஆரம்பித்த சமயத்தில் எப்படி சந்தானம் தொடர்ந்து எனது படங்களில் இடம்பிடித்தாரோ அதேபோல தினேஷ் மாஸ்டரும் என் படங்களில் தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக்கொண்டேன். என்ன மாதிரி சில பேர்க்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்து, ‘என்னடா இவனுங்க இப்படி ஆடுறாங்க?’ன்னு, அந்தக் கோபத்துலே இதுல நல்லதா நாலு டான்ஸ் ஆடியிருப்பார்னு நினைக்கிறேன்” என்றார்.

நடிகர் ஆர்யா பேசும்போது, “என்னை டான்ஸ் ஆட வைக்க, மாஸ்டர் தினேஷ் ரொம்ப கஷ்டப்படுவார். எப்படின்னா, 3 மணி நேரம் ரிகர்சல் செய்வோம். அப்புறம் அவரோட டான்ஸ் பாய்ஸைக் கூப்பிட்டு, ‘நீங்கலாம் ஆர்யா ஆடுற மாதிரி ஆடுங்க’ என என்னை ஆட வைக்க முடியாமல் அவங்களை மாத்திடுவார்.

இந்தப் படத்தில் ஒரு மெஸ்சேஜ் இருக்கு. அதற்காகத்தான் இந்தப் படத்தை தினேஷ் மாஸ்டர் ஒத்துக்கிட்டிருப்பார். ‘மைனா’ போல படம் ரொம்ப ரியாலஸ்டிக்காக இருக்கு” என்றார்.

இயக்குநர் அமீர் பேசும்போது, “இந்தப் படத்தின் கதைத் தயாரிப்பாளர் அஸ்லம் மூலம் என்னிடம் முதலில் வந்தது. கதை விவாதம் நான்கு நாட்கள் நடந்தது. இயக்குநர் காளி ரங்கசாமியிடம் சில மாற்றங்கள் செய்யச் சொன்னேன். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டதாக அஸ்லம் சொன்னார். ஒரு இயக்குநராக அவரது உறுதியான முடிவைப் பாராட்டுகிறேன், அதற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் அஸ்லமையும் பாராட்டுகிறேன்.

‘இக்கதை எல்லா மனிதர்களும் தங்கள் வாழ்க்கையில் கடந்து போய் இருப்பார்கள்’ எனச் சொன்னார். அப்படி யாரும் இதைக் கடந்து போகக்கூடாது. பத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைக்கிறவர்கள் மனப்பொருத்தம் பார்ப்பதை மட்டும் விட்டுவிடுகிறார்கள். அதேசமயம் பொருத்தம் இல்லாத காரணத்திற்காக வேறு வழியைத் தேடிப் போகவும் கூடாது. ஊரைக்கூட்டி தடபுடலாகச் செலவுசெய்து திருமணம் நடத்துவது தேவையற்றது. அதுவே ஒரு கட்டத்தில் பொருந்தாத வாழ்க்கையையும் கட்டாயத்தில் வாழும்படி ஆகிவிடும்” என்றார்.

படத்தின் நாயகன் தினேஷ் மாஸ்டர் பேசும்போது, “இப்படி ஒரு விஷயம் என் வாழ்க்கையில நடக்கும்னு நினைச்சே பார்க்கலை. இந்தப்படத்தில என்னை ஹீரோன்னு சொல்லாதீங்க. என்னைய ஹீரோவா போட்டா என் உயரத்துக்கு கதாநாயகியே கிடைக்காதுன்னு டைரக்டர்கிட்ட சொன்னேன். என் மனைவியுடன் கலந்து ஆலோசித்த பின்பே இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். மாஸ்டராக வாய்ப்புக் கிடைக்கும் பொழுது அவங்க தான் தைரியம் சொல்லி அனுப்பினாங்க. ‘பாருங்க இல்லைன்னா நான் வேலைக்குப் போறேன்’ என என்னை அனுப்பி வச்சாங்க.

கதை, ஒரு மாதிரியான கதைதான். டான்ஸ் சம்பந்தப்பட்ட கதைன்னா வேண்டாம்னு சொல்லிருப்பேன். என் வாழ்க்கையில் இது மறக்கமுடியாத நாள். எனக்குத் தெரிந்தது டான்ஸ் தான். அது தான் என்னை இந்த இடத்திற்குக் கூட்டி வந்தது. நான் விஜய் சாருக்காக, ‘ஆல்தோட்ட பூபதி’ பாடலுக்கு கோரியோகிராஃபராக அறிமுகம் ஆன பின் தான் என் வாழ்க்கையில் வெளிச்சமே தெரிஞ்சது. டான்ஸ் மாஸ்டராகத் தொடர்ந்து பணி புரிவேன்.

ஆர்யா, சிவகார்த்திகேயன் எல்லாம் கூப்பிட்ட அடுத்த நொடி, ‘எப்போ மாஸ்டர் வரணும்?’னு கேட்டு எனக்கு முன்னாடி வந்து எனது படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உட்கார்ந்திருக்காங்க. யாரும் இல்லை சினிமாவுலன்னு நினைச்சேன். ஆனால் இந்த நிகழ்வு நாங்க இருக்கோம்ணு ஹீரோக்களும் இயக்குநர்களும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். எல்லோருக்கும் என் நன்றிகள்” எனக் கண்கலங்கினார்.

நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, “நான் கூட நடிக்க வந்த புதிதில், ‘நான் ஹீரோ கிடையாது. கதைக்கான கதாபாத்திரம்’ எனச் சொல்லிட்டிருந்தேன். விஜய் டிவி ஷோவுல ஆடும்போது உடம்பு அலுக்காமல், வேர்க்காமல் ஆடணுமா, தினேஷ் மாஸ்டரைத் தொடர்பு கொள்ளுங்கள் எனக் கிண்டலடித்தேன். ஆனால் எதிர்நீச்சல் படத்தில் என்னை ஆடவைத்து பெண்டு நிமிர்த்திவிட்டார். ஒரு துறைல இருந்து இன்னொரு துறைக்குக் கால் வைக்கும்போது, ‘உனக்கு ஏன்யா இந்த வேண்டாத வேலை?’ என கேட்கத்தான் செய்வார்கள். அதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு போகவேண்டும்.

நடனத்துக்காக மட்டும் அல்லாமல், கதைக்காகவும், கதாபாத்திரத்திற்காகவும் இந்தப்படத்தை தினேஷ் மாஸ்டர் ஏற்று நடித்துள்ளது பாராட்டக்கூடிய விஷயம்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தப்படத்தை வாங்கியிருப்பது, மற்றவர்கள் எல்லாம் இந்தப்படத்தில் உங்கள் படத்தைப் பாராட்டுவது என 5௦ சதவீதம் தாண்டி விட்டீர்கள். மக்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் நூறு சதவீதம் வெற்றியை அடைவீர்கள்” என வாழ்த்தினார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.