Search

ஜீவி விமர்சனம்

Jiivi-movie-review

அறிவுஜீவி, புத்திஜீவி என்பதன் சுருக்கமாகத் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். ஜீவி என்றால் ஜீவிப்பவர், அதாவது உயிர்வாழ்பவர் அல்லது பிழைப்பவர் எனப் பொருள் கொள்ளலாம். படத்தின் தலைப்பை, அறிவால்  ஜீீவிப்பவர் என்பதாகப் புரிந்து கொள்ளலாம்.

சரவண லெனின், தனது வீட்டு ஓனரான லக்ஷ்மி வீட்டில் திருடுகிறான். அப்பொழுது அவன் வீட்டில் தொடர் அசாம்பாவிதங்கள் நிகழ்கிறது. அதே போன்ற நிகழ்வுகள், லக்ஷ்மிக்கும் அவரது இள வயதில் நடந்துள்ளதை அறிகிறான். ஆக, லக்ஷ்மி குடும்பத்தில் நிகழ்வது அனைத்தும் தன் வீட்டிலும், பிரதி எடுத்தது போல் நடக்கும் என சரவண லெனின் நம்புகிறான். அதாவது இரண்டு குடும்பத்தில், வெவ்வேறு சமயங்களில் நடக்கும் நிகழ்வு ஒரே போலே இருக்கிறது. லக்ஷ்மி வீட்டில் நடக்கும் கெட்டவை போல் தன் வீட்டிலும் நிகழாமல் இருக்க நாயகன் எடுக்கும் முயற்சியே படத்தின் கதை.

சரவண லெனின் என்பது நாயகன் வெற்றி ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர். அவரது தந்தை, தனது அப்பாவிடம் தீவிர கம்யூனிசம் பேசி வீட்டை விட்டு வெளியேறும் பிடிவாதமான கொள்கைவாதி. ஆனால் அவர் தன் மகனிடம், உழைப்பது குறித்தும், வேலைக்குப் போகாமல் ஊரில் உள்ளவர்களை அடித்து உதைப்பது பற்றியும் ஒரு வார்த்தை கூடச் சொல்வதில்லை. கேட்கும் நேரத்தில் எல்லாம் பணம் தரும் பாசக்கார சினிமா அப்பாவாகச் சுருங்கிவிடுகிறார். கீழ் சாதிப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர், தன் மகள் யாரையோ காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டாள் எனத் தெரிந்ததும் நெஞ்சு வலியில் அவதிபடுகிறார். அதாவது அவருக்கு அங்கு நெஞ்சு வலி வந்தால்தான் படத்தின் கதை நகரும் என்பதாகச் சூழல்.

சரி தந்தையின் பாத்திரம் தான் அப்படியெனப் பார்த்தால், நாயகனின் கதாபாத்திரம் அதற்கும் மேல். வசதியைக் காரணம் காட்டி நாயகனை அவனது காதலி கழட்டி விட, நாயகன் நேராக டாஸ்மாக் போகிறான், குடித்து விட்டு வீட்டுக்குப் போகும் வழியில் கிடைத்த ஹவுஸ் ஓனரின் பீரோ சாவியைக் கொண்டு, ஒரு கண் தெரியாத பெண்ணின் திருமணத்திற்குச் சேர்த்து வைத்திருக்கும் நகையைத் திருடுகிறான். அவன் அதற்கு முன்னும் திருடனில்லை, பின்னும் திருடனில்லை. ஆனால், ஒரு தேர்ந்த கிரிமினலைப் போல் திட்டமிடுகிறான், ஏனென்றால் அவன் நூலகத்திலேயே பழியாகக் கிடந்து நிறைய புத்தகங்கள் படிக்கிறவனாம். என்ன கொடுமை பாபுதமிழ் சார் இது? நாயகி, நாயகனுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய, நாயகன் அதைத் தான் குடியிருக்கும் வீட்டு உரிமையாளருக்குச் செய்கிறான். எல்லாம் பணம் படுத்தும் பாடு என்றாலும், குற்றவுணர்வில்லாமல் அதையெல்லாம் பிரதான கதாபாத்திரங்கள் சுலபமாகக் கடந்து விடுகிறார்கள்.

நாயகனுக்கோ, நாயகனின் நண்பன் மணியாக வரும் கருணாகரனுக்கோ, பணத்திற்கான நெருக்கடி எதுவும் இல்லை. நெருக்கடியில் திருடினாலுமே தவறுதான்; ஆனால் அதை நியாயப்படுத்த கூட எந்த முனைப்பையும் இயக்குநர் காட்டவில்லை. தான் வாழப் பிறரைக் கெடுக்கும் நம்பிக்கை துரோகம் போன்ற அறப்பிறழ்வுகளைக் கூட வசனங்கள் மூலம் இலகுவாகக் கடந்துவிடுகின்றனர் கதாபாத்திரங்கள். சும்மா ஜாலியாய் ஒரு திருட்டு; அதை அப்படியே அடுத்தவன் மேல் போட்டுத் தப்பித்துக் கொள்ளலாம் என கூரையில் சுழலும் மின்விசிறியியைப் பார்த்துப் பேசியவாறு முடிவெடுக்கின்றனர். ‘ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. பயன்படுத்தலாம்’ என கருணாகரனைச் சமாதானம் செய்கிறார் வெற்றி. திருட எடுக்கும் முடிவை எல்லாம் ஒரு வாய்ப்பாகச் சித்தரித்து, படத்தில் ஏதோ சொல்ல வர்றாங்க என கடைசி வரை நம்ப வைக்கிறார் கதை வசனம் எழுதியுள்ள பாபுதமிழ். படத்தின் முடிவில் அவரே ஒரு பாத்திரத்தில் வந்து, தனக்குக் கிடைக்கும் பையைப் பார்த்து, ‘கடவுள் நமக்குத் தர்றதுன்னா இப்படித்தான் தருவார்’ என அவரும் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்.

நாயகன் மையப்புள்ளியைக் கடைசி வரை கண்டடைவதே இல்லை. மையப்புள்ளி என்பது செய்யாத குற்றத்திற்காக சிறை செல்லும் இப்ராஹிமும், நாயகனின் தாத்தா வீட்டு வேலைக்காரருமே! அறிவியல், முக்கோண விதி, தொடர்பியல், மையப்புள்ளி என நான்கே வார்த்தைகள் கொண்டு ஓர் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ள பாபுதமிழ்தான் உண்மையான அறிவுஜீவி. கதையாக ஒரு முழுமையில் முடிந்து அழகான நிறைவைத் தந்தாலும், இந்த ‘இயல்’கள் எல்லாம் சும்மா வசனத்தில் வைத்து மேம்போக்காக அடித்து விட்டிருக்கவேண்டியதில்லை அவர்.

8 தோட்டாக்கள் படத்தில் பெற்ற பொம்மை நாயகன் என்ற பெயரை எரித்துவிட்டு, தன்னால் நடிக்க முடியும் என நிரூபித்துள்ளார் வெற்றி. கருணாகரனின் இயல்பான நடிப்பு படத்திற்கு மிகப் பெரிய பிளஸ். ஆனால், அவரது கதாபாத்திரமும் முழுமை பெற்றதாகத் தெரியவில்லை. பேருந்தில் செல்லும் அவர், தன் பையைப் பக்கத்தில் வைத்துள்ளார். யாரோ ஒருவர் வந்து அந்தப் பையை எடுத்து மேலே லக்கேஜ் வைக்குமிடத்தில் வைத்துவிடுகிறார். தூங்கித் திடுக்கிட்டு எழும் அவர், அந்தப் பையை மேலிருந்து எடுத்து தன் மடி மீது வைத்துக் கொள்கிறார். அதிர்ஷ்டத்தைத் தரும் அந்தப் பை அவ்வளவு முக்கியமென்றால் அதைத் தொடக்கத்திலேயே தன் மடி மீதல்லவா கருணாகரன் வைத்திருக்கவேண்டும்? இயல்பாகக் கதை நகராமல், ஒவ்வொரு கதாபாத்திரமும் இப்படி வலிந்து கதையை நகர்த்துகின்றனர். ஆனால் இப்படி எல்லாம் எதையும் யோசிக்கவிடாமல், இயக்குநர் V.J.கோபிநாத் கடைசி வரை சுவாரசியத்தை  தக்கவைப்பதில்தான் படத்தின் சூட்சமப்புள்ளி இயங்குகிறது. படத்தின் கதை வித்தியாசமாக, அடப் போட வைக்கும்படி இருந்தாலும், திரைக்கதை அதற்கான நியாயத்தைச் செய்யவில்லை. ஏனெனில், கதாபாத்திரங்களை மேலோட்டமாக உருவாக்கி, வசனங்கள் மூலமே படத்தைச் சாமர்த்தியமாக நகர்த்தியுள்ளதே காரணம். எனினும் படம் தரும் நிறைவு, க்ளைமேக்ஸில் கைத்தட்டல்களாக எழுகின்றன.