Search

சிந்துபாத் விமர்சனம்

sindhubaadh-movie-review

1001 இரவு அரேபியக் கதைகளில், ஏழு கடற்பயணயங்கள் மேற்கொண்ட சிந்துபாத்தின் கதை தனித்துவமானது. அதனால் தான் இதுநாள் வரை தினத்தந்தியின் கன்னித்தீவில் அவர் வாசம் செய்து வருகிறார். மனைவி வெண்பாவைக் காப்பாற்ற, சிந்துபாத் எனப் பெயரிடப்பட்ட போலி பாஸ்போர்ட்டில் தாய்லாந்து பறக்கிறான் திரு. மனைவியை எப்படிக் காப்பாற்றினான் என்பதுதான் படத்தின் கதை.

கேட்கும் திறன் சற்றே குறைந்த பலே திருடன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். பர்ஸ், மோதிரம், பிரேஸ்லட், செயின் என விஜய் சேதுபதி அனைவரிடமும் திருடினாலும், கழுத்தில் காயத்தை ஏற்படுத்துவது மாதிரி செயின் பறிப்பில் எல்லாம்  ஈடுபடாத நல்லவர். சத்தமாய்ப் பேசும் அஞ்சலியின் உரத்த குரலைக் கேட்டதும் காதலில் விழுகிறார். காதல் கனிந்ததும் திருட்டுத் தொழிலை விடுகிறார்.

அஞ்சலி மலேசியா திரும்பும் நாள் அன்று, விமான நிலையத்தில், அஞ்சலியைக் குனியச் சொல்லி, சட்டென அஞ்சலி கழுத்தில் தாலி கட்டிவிடுகிறார் விஜய் சேதுபதி. ஒருத்தியின் சம்மதமில்லாமல், ஒருவன் திருட்டுத்தனமாக தாலியைக் கட்டுகிறான். உடனே சுற்றியிருக்கும் மக்கள் பரவசமாகி, மகிழ்ந்து, நாயகனுக்குத் தங்கள் வாழ்த்துகளைச் சொல்கின்றனர். ‘சரி பரவாயில்லை’ என அஞ்சலியும் விஜய் சேதுபதியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கிறார். நாயகி, சுற்றியுள்ள மக்கள் என இது ஒரு சுரணையற்ற சமூகமாக மாறிவிட்டதென இயக்குநர் S.U.அருண்குமார் அழுத்தமாகப் பதிந்துள்ளது சிறப்பு. எந்த வேலையும் இல்லாத ஒருவன், ஒரு பெண்ணின் சம்மதத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் தாலி கட்டுபவன், ‘ஏதோ சாதித்தது போல் ஒரு ஃபீல் வருது’ என சிறுவனிடம் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்கிறான். இந்த கேடுகெட்ட ஈனத்தனத்தைத்தான் சாதனை என அந்தச் சிறுவனுக்கும், இந்தப் படத்தைப் பார்க்கும் ஏனைய விடலைகளுக்கும் கடத்துகிறார் இயக்குநர்.

படத்தின் முதற்பாதியில் வரும் ஜார்ஜ் மரியானுடனான விஜய் சேதுபதியின் காட்சிகளும், விஜய் சேதுபதியின் ரொமான்ட்டிக் லுக்கும் ரசிக்க வைக்கிறன. சூப்பர் எனும் பாத்திரத்தில், விஜய் சேதுபதின் மகன் சூர்யா விஜய்சேதுபதி நடித்துள்ளார். நடிப்பைப் பற்றி தந்தைக்குப் பாடம் சொல்லித் தரும் லட்சணங்கள் தெரிகிறது அவர் நடிப்பில். சத்தமாகப் பேசும் இயல்புடைய வெண்பாவாக அஞ்சலி நடித்துள்ளார். நிறைய படங்களில் அவர் நடிக்கலாமே என்ற எண்ணத்தைத் தருமளவிற்குச் சிறப்பாக நடித்துள்ளார்.

லிங் எனும் தாய்லாந்தின் நிழலுலக மன்னனாக லிங்கா நடித்துள்ளார். கொல்வது மட்டுமே இவரது பொழுதுபோக்காம். அதற்கேற்றாற்போல் உடலை 10 கிலோ ஏற்றி, அந்தப் பாத்திரத்தின் உருவம் மேல் நம்பிக்கை ஏற்படுத்த உழைத்துள்ளார் லிங்கா. வழக்கம் போல் விஜய் சேதுபதி, அதையெல்லாம் அலட்டிக் கொள்ளாமல், ‘அர்னால்ட்டே அப்போஸிட்ல வந்தாலும், யுவனின் பின்னணி இசை பில்டப்பில் முகத்திற்கு ஒரு கிளோஸ்-அப் ஷாட், கையை மடக்கித் தூக்குவேன், அங்க ஒரு கட் ஷாட், அர்னால்ட் சுவத்தை உடைச்சுட்டுப் போய் விழுவார். என்ன ஓகேவா? நான் அப்படித் திரும்பி, 96 – இல் வர மாதிரி நடந்து வருவேன். செமயா இருக்கும். அப்படியே போயிடலாம். சரியா? அவ்ளோ தான். சப்ப மேட்டர். அசால்ட் பண்ணிட்டுப் போயிட்டே இருக்கலாம். இதுக்குப் போய் நான் ஏன் உடம்பை ஃபிட்டா வச்சுக்கணும்?’ என இயக்குநரையும், ஸ்டன்ட் மாஸ்டரையும் பேசியே கவிழ்த்திருப்பார் போல. இரண்டாம் பாதியில் விஜய் சேதுபதி ஓடுவதற்கு படும் சிரமம், கல் மனங்களையும் கரைத்துவிடும்.

ஜுங்காவில் ஃப்ரான்ஸ் போகும் விஜய் சேதுபதி, -5 டிகிரி தண்ணியில் நீந்தியே போய் இத்தாலியன் மாஃபியாவை நையபுடைப்பார். இந்தப் படத்திலும், மலை மீதிருந்து ஒரு நதியில் விழும் விஜய் சேதுபதி, ஓய்வு ஒழிச்சல் இன்றி தாய்லாந்தில் இருந்து கம்போடியா போய், அங்கிருந்து தாய்லாந்துக்கு வந்து, ஓவர் டைம் உழைத்து யார் உதவியும் இல்லாமல் அத்தனை பேரையும் வெளுத்து வாங்குகிறார். சிந்துபாத்தின் லாஜிக்கில்லாப் பயணம் சுபமாய் முடிகிறது.