Shadow

ஜோதி – குழந்தைக் கடத்தலுக்குத் தீர்வளிக்கும் எமோஷ்னல் த்ரில்லர்

சில ஆண்டுகளுக்கு முன்பாகக் கடலூரில் நடந்த மனதை உலுக்கும் உண்மை சம்பவமாகிய குழந்தை கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘ஜோதி.’

இந்த ‘ஜோதி’ திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘ஆரிராரோ’ என்ற பாடல் வெளியீட்டின் சிறப்பு நிகழ்ச்சி Radio City FM இல் சமீபத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநரான A.V.கிருஷ்ண பரமாத்மா பேசும்போது, “சென்ற வாரம் இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘போவதெங்கே’ என்ற காதல் பாடல் வெளியானது. அதைத் தொடர்ந்து ‘ஆரிராரோ’ என்ற அப்பாவுக்கும் மகளுக்குமான உறவைச் சொல்லும் விதமாக அமைந்துள்ள இரண்டாம் பாடலை இப்போது வெளியிடுகிறோம்.

இப்பாடல், ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையாலும் கார்த்திக் நேத்தா வரிகளாலும், பல்ராம் சாரோட குரலாலும் மிகவும் அழகாக வந்திருக்கிறது. குழந்தைகளைப் பெற்ற அப்பாக்களும், அப்பாக்களைப் போற்றும் குழந்தைகளுக்கும் இப்பாடல் திரும்பத் திரும்பக் கேட்கக் கூடியதாக அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இந்தப் படம் ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் எமோஷனல் த்ரில்லராக வந்திருக்கிறது. படத்தின் ப்ரிவியூ காட்சியில் படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் கண் கலங்கி, ‘இப்படியொரு படம் வருவது பெரிய விசயம்’ என்று பாராட்டினார்கள். இது எனக்கு மிகப் பெரிய நம்பிக்கையைத் தந்துள்ளது. படம் நிச்சயமாக பெரும் வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது” என்று கூறினார்.