Search

ஜுங்கா விமர்சனம்

Junga-movie-review

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா…’ படத்திற்குப் பிறகு இயக்குநர் கோகுலும், விஜய் சேதுபதியும் இணையும் படம். இதுவரை வெளிவந்த விஜய் சேதுபதி படங்களை விட அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள படம். படத்தில் வரும் டான் ஜுங்கா தான் கஞ்சமே தவிர, படத்தின் பிரம்மாண்டத்திற்காக விஜய் சேதுபதி தாராளமாகவே செலவு செய்துள்ளார்.

ஜுங்காவிற்கு, விற்கப்பட்ட ‘சினிமா பாரடைஸ்’ எனும் தனது தாய் வழி பூர்வீக சொத்தான திரையரங்கினை மீண்டும் வாங்கவேண்டும் என்று ஆசை. ஆனால், திரையரங்கத்தை விற்க மறுத்துவிடுகிறார் கோடீஸ்வரச் செட்டியார். லிங்கா, ரங்கா என்ற பாரம்பரிய டான் ஃபேமிலியில் வந்த ஜுங்கா, திரையரங்கை எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

டான் படங்களைக் கலாய்க்கும் ஸ்பூஃப் மூவியாகப் படம் தொடங்குகிறது. திடீரெனச் சீரியசாகி, பின் ஸ்பூஃபாக, சீரியஸ், ஸ்பூஃப் எனப் படம் மாறிக் கொண்டே இருக்கிறது. அதனால் 157 நிமிடங்கள் கால அளவு கொண்ட படம், மிக நீண்டதாய்த் தோற்றமளித்து, முக்கால்வாசிப் படத்திற்கு மேல் ஓர் அலுப்பை ஏற்படுத்துகிறது. விஜய் சேதுபதியின் தோற்றமும் வழக்கம் போல் சட்டென ஈர்க்காததும் காரணமாக இருக்கலாம். ஒரு கோடி ரூபாயைக் கையில் வைத்துக் கொண்டு, ‘நானொரு ஏழை டான். ஏழைன்னா உங்களுக்கு இளக்காரமா?’ என வசனம் பேசுவது ‘பிளாக் காமெடி’யில் வருமோ?

டான் அம்மாவாகச் சென்னைத் தமிழ் பேசும் சரண்யா பொன்வண்ணன் பட்டையைக் கிளப்புகிறார். அதுவும் அவர் தன் மகனுக்கு ஃப்ளாஷ்-பேக் சொல்லும் அத்தியாயத்தில் தான் தேமேயெனத் தொடங்கும் படம் சூடு பிடிக்கத் தொடங்குகிறது. ஃப்ரான்ஸில் சயீஷா சைகலுடன் விஜய் சேதுபதி காரில் பயணித்துக் கொடுக்கும் அலுப்பை, இடையிடையே தோன்றிப் போக்குவது சரண்யா பொன்வண்ணனும், டானின் பாட்டியாக நடித்த விஜயாவும்தான். அம்மாவும் பாட்டியும், செம காம்போ!

இந்தியாவில் கதை நடக்கும் வரை படத்தின் கலகலப்புக்கு உதவிய யோகி பாபுவும் ஃப்ரான்ஸில் கதை நடக்கும் பொழுது கொஞ்சம் சுணங்கித்தான் போகிறார். இத்தாலியன் மாஃபியா குழு இருக்கும் இடத்திற்கு, மைனஸ் 5 டிகிரி குளிரில், பணத்தை மிச்சப்படுத்துவதற்காக நீந்தியே போகிறாராம் விஜய் சேதுபதி. இது காமெடியா, ஸ்பூஃபா, எவ்வளவு தூரம் நீந்திச் சென்றார் என்றெல்லாம் குழப்பம் தீரும் முன், இத்தாலியன் மாஃபியாக்களைப் புரட்டி எடுக்கிறார்.

கடத்தியவன் மீதே மையல் கொள்ளும் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் உடைய யாழினியாக சயீஷா சைகல். அவரை விடவும் படத்தில் பரிதாபமான பாத்திரங்கள் ஃப்ரெஞ்ச் போலீஸ்காரர்கள் (BRI). அவர்களையும் விட பாவப்பட்டவர்கள் இத்தாலியன் மாஃபியா குழுவினர்.

‘இனி பாரீஸ் டர்ராகும்’ என இடைவேளையின் பொழுது போடுகிறார்கள். உண்மையில் அப்படியாவது பார்வையாளர்கள் என்றே தோன்றுகிறது. டான் ஜுங்காவின் கஞ்சத்தனம், சரண்யா பொன்வண்ணன் சொல்லும் செம்மையான ஃப்ளாஷ்-பேக், யோகி பாபுவின் ஒன் லைனர்கள் எனப் படத்தின் முதற்பாதியளவு கூட இரண்டாம் பாதி சுவாரசியமாக இல்லை.

ஆனால், விஜய் சேதுபதியும் முடிந்தளவுக்குத் தொணத்தொணவெனப் பேசி கடைசி வரையிலும் பார்வையாளர்களை உட்கார வைத்துவிடுகிறார். க்ளைமேக்ஸில், துப்பாக்கி முன் நிற்கும் பொழுது தனது கடைசி ஆசையை ஜுங்கா சொல்லுமிடம் அட்டகாசம். “எங்கம்மாவையும் பாட்டியையும், தியேட்டர்ல டிக்கெட் விலையை விட பாப்கார்ன் விலை அதிகமா வைக்கக் கூடாதுன்னு சொல்லு. அப்படி வச்சா பேயா வந்து பழிவாங்குவேன்” எனச் சொல்லும் பொழுது திரையரங்கம் அதிர்கிறது. இப்படியாகப் படம் நெடுகவே சிரிப்பதற்கான தருணங்கள் இருந்தாலும், ஒட்டுமொத்த படமாக ஒரு நிறைவினைத் தரவில்லை.