Search

காரி – தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த இடைவேளைக் காட்சி

ப்ரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்தப் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அறிமுக இயக்குனர் ஹேமந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார்.

வில்லனாக பாலிவுட் நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடிக்க, மேலும் முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் நவம்பர் 25ஆம் தேதி காரி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

நடிகர் நாகிநீடு, “இந்தப் படத்தின் படப்பிடிப்பு இரவு பகலாக மாறிமாறி நடைபெற்றது. எனக்கு சரியான நேரத்திற்கு சாப்பிடும் பழக்கம் இருந்தது. அதைப் புரிந்து கொண்ட சசிகுமார் எனக்குப் படம் முழுவதும் தனது ஆதரவைக் கொடுத்தார். என்னுடன் நடித்துள்ள ரெடின் கிங்ஸ்லியை வெடிகுண்டு என்று தான் சொல்வேன். காரணம் நான் சீரியசாக பேசிக் கொண்டிருக்கும்போது ரெடின் கிங்ஸ்லி வெடிகுண்டு வீசுவது போல ஏதாவது ஒன்றைப் பேசிவிடுவார். அதன் பிறகு அவரைப் பற்றி விசாரித்த பின்னர் தான் அவர் எல்லாப் படங்களிலும் இதே மாதிரிதான் செய்து வருகிறார் என்பது தெரிந்தது” என்று கூறினார்.

ஆடுகளம் நரேன், “சுந்தரபாண்டியன் படத்திற்கு பிறகு சசிகுமாருடன் மீண்டும் இணைந்து நடித்திருக்கிறேன். நான் பொதுவாக எந்த இயக்குநரிடமும் முழு கதையும் கேட்க மாட்டேன். ஆனால் இயக்குநர் ஹேமந்த் என்னிடம் மூன்று மணி நேரம் இந்தக் கதையைக் கூறினார். அந்த அளவிற்கு படத்தில் நடிக்கும் அனைவருமே படத்தின் முழுக் கதையையும் தெரிந்திருக்க வேண்டும் என அவர் நினைத்தார்” என்று கூறினார்.

நடிகர் ரெடின் கிங்ஸ்லி, “எனக்கு டூவீலரே சரியாக ஓட்டத் தெரியாது. ஆனால் இந்தப் படத்தில் என்னை ஆட்டோ ஓட்ட வைத்து விட்டார்கள். அதிலும் சசிகுமார், நாயகி பார்வதி அருண் இருவரையும் வைத்து நான் ஆட்டோ ஓட்ட வேண்டும். பயந்துகொண்டே தான் ஆட்டோ ஓட்டினேன். லவ்டுடே படம் எப்படி பெரிய வெற்றி பெற்றதோ அதேபோல இந்தப் படமும் வெற்றி பெறும்” என்றார்.

நடிகை பார்வதி அருண், “ஆரம்பத்தில் சசிகுமாரைப் பார்த்துப் பயந்தேன். ஆனால் போகப் போகப் படப்பிடிப்பில் எனக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாமல் வசதி ஏற்படுத்தி தந்தார் சசிகுமார். இயக்குநர் என்னிடம் கேட்கும் போதே மாடு பிடிக்குமா என்று தான் கேட்டார். நானும் பிடிக்கும் என்று தலையாட்டி விட்டேன். எல்லோரும் குறிப்பிட்டுச் சொன்னது போல அந்த இடைவேளை காட்சி மிகச் சிறப்பாக வந்துள்ளது” என்றார்.

இசையமைப்பாளர் இமான், “திரையுலகில் என்னுடைய 20ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளேன். இயக்குநர் ஹேமந்த் என்னிடமும் மூன்று மணி நேரம் கதை சொன்னார். அதே போல எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் என்னிடம் என்ன சொன்னாரோ, அதை அப்படியே திரையில் கொண்டு வந்துள்ளார். அனைத்துக் காட்சிகளையும் நம்பகத்தன்மையுடன் பண்ணியிருக்கிறார். பல விஷயங்களை இந்தப் படம் பேசும். இதில் இடம்பெற்ற ‘சாஞ்சிக்கவா’ என்கிற பாடல் ஏற்கனவே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மறைந்த பாடலாசிரியர் லலித் ஆனந்த் எழுதிய கடைசிப் பாடல் இதுதான். சசிகுமார் நிறைய படங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் ரொம்பவே அழகாக இருக்கிறார்” என்று கூறினார்.

இயக்குநர் ஹேமந்த், “இந்தப் படத்தின் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமாரை ‘மேன் ஆப் தி ஆக்சன்’ என்று கூறினால், ஹீரோ சசிகுமாரை ‘மேன் ஆஃப் ட்ரூ வேர்ட்ஸ்’ என்று சொல்வேன். படத்தின் கதையைக் கேட்ட சசிகுமார் நீங்க கதை சொன்ன மாதிரியே படமும் எடுத்துட்டா வெற்றிதான் என்று உற்சாகப்படுத்தினார்.

லோக்கல் என்ற வார்த்தையை மோசமான வார்த்தையாக நினைக்க வேண்டாம். லோக்கல் என்றால் நேட்டிவிட்டியைக் குறிக்கும். எவ்வளவு நேட்டிவிட்டியாக இருக்கிறோமோ அந்த அளவிற்கு மதிப்பு இருக்கும். ஆனால். இப்போது அந்த நேட்டிவிட்டியைத் தகர்க்கும் விதமாக தான் பல விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் விளையாட்டுக்குத் தடை விதிக்க முயற்சி செய்வது.

ஜல்லிக்கட்டுக்கு மட்டும் ஏன் எதிர்ப்பு என்றால், இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் மட்டும்தான் இளைஞர்கள் இன்னும் கலாச்சாரம் தொடர்பான விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை திசை திருப்புவதற்காகத்தான் ஜல்லிக்கட்டு தடை போன்ற விஷயங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தப் படத்தில் மனிதர்களின் நம்பிக்கை, உறவு சிக்கல்கள் ஆகியவற்றைக் கூறியுள்ளோம். மொத்தத்தில் இந்தப் படம் எமோசனல் ஆக்சன் ட்ராமாவாக இருக்கும்” என்றார்.
சமீபத்திய பதிவுகள்

காணொளிகள்

கேலரி