
ப்ரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்தப் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அறிமுக இயக்குனர் ஹேமந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார்.
வில்லனாக பாலிவுட் நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடிக்க, மேலும் முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் நவம்பர் 25ஆம் தேதி காரி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.
தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார், “ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கிடைக்காதிருந்த சமயத்தில் தான் இந்தக் கதையை இயக்குநர் ஹேமந்த் என்னிடம் கூறினார். இந்தக் கதையைக் கேட்டதும் எப்படியாவது இதைப் படமாக எடுத்துவிட வேண்டும் என முடிவு செய்தோம். அதன்பிறகு தமிழக இளைஞர்களின் புரட்சி மூலம் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது. சசிகுமாருக்கு என்றே அளவெடுத்து தைக்கப்பட்ட ஒரு சட்டை போல இந்தக் கதையும் கதாபாத்திரமும் அமைந்துவிட்டது.
காளைகள், குதிரைகளை வைத்து மிகுந்த சிரமத்திற்கு இடையே தான் இந்தப் படத்தை எடுத்துள்ளோம். அதிலும் மைசூரில் எடுக்கப்பட்ட காட்சிகளில் பெரும்பாலும் ரேஸ் குதிரைகளை வைத்தே காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. சமீப காலமாக நம் நம்பிக்கைகளைத் தகர்க்கும் விதமாக சில விஷயங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, ஆனால் அதைத் தடுத்து, நம்பிக்கை கொடுக்கும் விதமாக இந்தப் படம் இருக்கும்” என்று கூறினார்.
நடிகர் பிரேம், “என்னுடைய கதாபாத்திரம் குறித்து சொன்னதுமே இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டுமா என முதலில் தயங்கினேன். ஆனாலும் இந்தத் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்து தான் பார்ப்போமே என முடிவெடுத்து ஒப்புக்கொண்டேன். ரேஸ் குதிரை ஓட்டுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. மைசூரில் இந்தக் காட்சிகளில் நடித்தபோது ரொம்பவே சிரமப்பட்டுத்தான் படமாக்கினோம்” என்று கூறினார்.
ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா, “தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் முழுமையாக இந்தப் படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் கேட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். இயக்குனர் வசந்தபாலனுக்கு அடுத்து விஷுவலாகக் கதை சொல்லும் இயக்குநராக ஹேமந்தைத்தான் பார்க்கிறேன். இமான் தனது பின்னணி இசையால் உயிர் கொடுத்துள்ளார். நடிகை பார்வதி அருண் இன்டர்வெல் பிளாக் காட்சியில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். நிஜமாகவே உயிரைக் கொடுத்து நடித்துள்ள ஜல்லிக்கட்டு வீரர்கள் காட்சிகளை எதார்த்தமாகப் படமாக்க உதவினார்கள்” என்றார்.
படத்தொகுப்பாளர் சிவநந்தீஸ்வரன், “தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்குப் பிறகு என்னை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணிய படம் காரி. இந்தப் படத்திற்கு கச்சிதமான இடைவேளை மற்றும் க்ளைமேக்ஸ் அமைந்துவிட்டது. சில உண்மைகளை சிலர் பேசினால்தான் சரியாக இருக்கும். இந்தப் படத்தில் பேசப்படும் விஷயங்களை சசிகுமாரால் தான் பேச முடியும். இந்தப் படம் ரசிகர்களை ஏமாற்றாது” என்று கூறினார்.