தர்மதுரை வெற்றியைத் தொடர்ந்து, அதே பாணியிலான கதையைக் கையிலெடுத்துள்ளார் சீனு ராமசாமி. இம்முறை இன்னும் மென்மையான கிராமத்து டோனில்.
சோழவந்தான் வள்ளலான கமலக்கண்ணனுக்கு, வங்கி மேலாளரான பாரதி மீது காதல் எழுகிறது. அக்காதலுக்குக் கமலக்கண்ணனின் அப்பத்தா அழகம்மாள் சிவப்புக் கொடி காட்ட, கமலக்கண்ணனுடைய செயற்பாடுகள் என்ன என்பதுதான் படத்தின் கதை.
புது மேலாளரை பூமாலையுடன் வரவேற்கும் வினோத வழக்கம் கொண்ட வங்கியாக உள்ளது மதுரா கிராம வங்கி. அவ்வங்கியின் மேலாளர் பாரதியாக தமன்னா நடித்துள்ளார். இது அவரது 50வது படம். தர்மதுரையிலும் சரி, இப்படத்திலும் சரி, கவர்ச்சிக்காக என நேர்ந்து விடாமல் தமன்னாவைக் கதையின் நாயகியாக சீனு ராமசாமி படைத்துள்ளார். படத்தலைப்பில் வரும் கலைமான் தமன்னாவையே குறிக்கும்.
தமன்னாக்கு இருக்கும் அழுத்தமான பாத்திரம் கூடக் கமலக்கண்ணனாக நடித்திருக்கும் உதயநிதிக்கு இல்லை. அதனாலே என்னவோ, இது போதும் என்றளவுக்குப் பட்டும்படாமல் நடித்துள்ளார். நிமிர் படத்தில் செல்வமாக தன்னை மாற்றிக் கொண்ட உதயநிதி, இப்படத்தில் ஒரு துணை கதாபாத்திரம் என்கிற அளவுக்கே தன் பங்களிப்பினை அளித்துள்ளார். தயாரிப்பு என அவர் வரும்போது, உதயசூரியனைத் திரையில் காட்டுவதென மிக நுணக்கமாகப் படத்துக்கு அரசியல் ஷேடைத் தந்துள்ளார் சீனு ராமசாமி.
‘கண்ணே கலைமானே’ பத்திரிகையாளர் சந்திப்பில், நாளைய முதல்வர் என்று தொகுப்பாளர் குறிப்பிட்ட அழைத்த பொழுது, ‘ஏன் இப்படி?’ எனக் கொஞ்சம் தயக்கத்துடனும் வெட்கத்துடனும் கேள்வியெழுப்பினார். குறைந்தபட்சமாக, அத்தகைய சின்னஞ்சிறு எக்ஸ்பிரஷன்கள் கூட இல்லாமல், நீட் தேர்வைப் பற்றியும், இயற்கை விவசாயம் பற்றியும் வசனம் பேசுகிறார் உதயநிதி. அதே சமயம், மாட்டு அரசியலைப் பற்றிப் பேசும் பொழுது தமன்னாக்கு க்ளோஸ்-அப் எல்லாம் வைத்து அவரது முகபாவனையின் மூலம் அக்காட்சிக்கு ஒரு முக்கியத்துவத்தை ஏற்படுத்தியிருப்பார் சீனு ராமசாமி. அந்தக் காட்சி கூட, மாட்டுத் தீவண ஊழல் வசனத்தைப் பேசிய பின், அடுத்து என்ன என்று யோசனையோடு திரை மெல்ல கருப்பாகி, அடுத்து வேறொரு காட்சியில் திறக்கும். படத்தை இணைக்கும் கண்ணி எதுவும் காட்சிகளுக்கிடையில் இல்லாதது மாபெரும் குறை.
வள்ளலாக கமலக்கண்ணாக உதயநிதியும்; நேர்மையும் வீரமும் ஒளிர்பவராக தமன்னாவும் அறிமுகமாகிறார்கள். ஆனால், கதை அவர்களின் அக்குணத்தைப் பற்றியது இல்லை. அவர்களுக்கிடையேயான காதல் பற்றியும் இல்லை; சிக்கலான குடும்ப அமைப்பின் இகங்குமுறை பற்றியும் இல்லை. எல்லாவற்றையும் தொட்டுச் செல்கிறது. ஏனோ, ‘சின்ன பசங்க வெள்ளாமை வீடு போய்ச் சேராது’ என்பதை நிரூபிக்கும் பாத்திரத்தில் உதயநிதியை நடிக்க வைத்து அழகு பார்த்துள்ளார் சீனு ராமசாமி.
‘கண்ணே கலைமானே’ என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளில் எவ்வளவு வாஞ்சையும் காதலும் வழிந்தோடுகிறது? படத்தில் மருந்துக்கு ஒரு காட்சியில் அது பிரதிபலிக்கப்படவில்லை. அதற்காக யுவன் மட்டும் கொஞ்சம் மெனக்கெட்டுள்ளார். உதாரணம், மனைவியோடு வீட்டு வேலைகள் அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறார் உதயநிதி. ஆனால், இயக்குநர் சொல்லிச் செய்கிறேன் என்பது போலவே ஒட்டுதலே இல்லாமல் உதயநிதி திரையில் தோன்றுகிறார். திரைக்கதையின் ஆழமோ கட்டாந்தரை; காட்சிகளின் அழகியலோ காற்றடங்கிய கடற்கரை போல் ஜீவனற்று உள்ளது.
அப்பத்தாவாக வரும் வடிவுக்கரசி, உதயநிதியின் தோழி முத்துலட்சுமியாக வரும் வசுந்தரா, உதயநிதியின் அப்பாவாக வரும் பூ ராம் என அனைவருக்குமே உப்பு சப்பில்லாக் கதாபாத்திரங்கள். ஆனாலும், பூ ராம் தன் நடிப்பால் அசத்துகிறார். அவரது கண்களும் முகமும், அந்தந்தக் காட்சிக்குரிய மூடை (mood) சரியாகச் செட் செய்கிறது. தமன்னாவின் தலைக்கு எண்ணெய் வைக்கும் காட்சியில், தன் அனுபவம் வாய்ந்த நடிப்பால் அசைத்துப் பார்க்கிறார். அந்தச் சூட்டோடு சூட்டாக, அடுத்த ஷாட்டிலேயே உதயநிதியிடம் ஏன், எதற்கு, எப்படி என அனைத்துக்கும் விளக்கம் கொடுத்து, எல்லாக் கோடுகளையும் வேகமாகக் கலைக்கவும் செய்கிறார். வசனத்தின் மூலம்தான் கதாபாத்திரங்களின் மனநிலையைச் சொல்லும் திறமையின்மையோ, அல்லது ரசிகர்களுக்கு இது போதுமென்ற அலட்சியமான திரைக்கதை ஆக்கமோ, எதுவாகினும் தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய சீனு ராமசாமி, இப்பட ஆக்கத்தில் இன்னும் கொஞ்சம் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கலாம்.