Shadow

தர்மதுரை விமர்சனம்

Dharmadurai thirai vimarsanam

பெரும் பலம் பொருந்திய அமைப்புகளான குடும்பமும் சமூகமும் தனக்கெனப் பிரத்தியேகமான சில விதிமுறைகளை வைத்துள்ளன. அது, தனி நபர்களால் மீறப்படும் பொழுது, அமைப்பின் கண்ணுக்குத் தெரியா அதிகாரம் தனி நபர் விருப்பத்தை நசுக்க முயற்சி செய்யும். தனி நபரான தர்மதுரை, அவ்வமைப்புகளிடம் சிக்கி எப்படி மீள்கிறான் என்பதே படத்தின் கதை.

காமராஜ் எனும் மருத்துவப் பேராசிரியராக ராஜேஷ் நடித்துள்ளார். முனியாண்டி என்ற இயற்பெயர் கொண்டவர், காமராஜரின் சத்துணவுத் திட்டத்தால் பயன்பெற்றவர் என்ற நன்றிக்காகத் தன் பெயரையே மாற்றிக் கொள்கிறார். ராஜேஷின் முதுகுக்குப் பின், ‘முனியாண்டி’ என சில மாணவர்கள் கத்துகின்றனர். அதனால் சுர்ரெனக் கோபம் வந்து விடுகிறது அமைதியை விரும்பும் சக மாணவரான தர்மதுரைக்கு. கத்திய ஹஸனின் மண்டையை உடைத்து விடுகிறார். முனியாண்டி என்ற பெயரோ, கபாலி என்ற பெயரோ உச்சரிக்கப்படக் கூடாத கேலிக்குரிய பெயரா என்ன!? ‘ஹஸன் தான் சார் முதலில் உங்க பெயரை டீஸ் செய்தான்’ என தர்மதுரைக்குத் தமன்னாவும், சிருஷ்டி டாங்கோவும் வக்காலத்து வாங்குகின்றனர். தமன்னாவைக் கவர்சிக்காக என்றில்லாமல் நடிக்க வைத்ததற்கு இயக்குநரைப் பாராட்ட வேண்டும்.

தமன்னா, சிருஷ்டி இருவருமே தனது கதாபாத்திரங்களில் சோபித்துள்ளனர். ஆனால், சிருஷ்டிக்குக் காதல் வரும் காரணமும் வேகமும், ஒரு கணம் இது ‘ஸ்ஃபூப் மூவி’யோ எனத் தோன்ற வைக்கிறது. ஒட்டுமொத்த கல்லூரி அத்தியாயமுமே ஒரு வித செயற்கைத்தனத்துடன் பயணிக்கிறது. உதாரணம், ‘பைக் சாவி கொடுடா’ என விஜய் சேதுபதி கேட்டதும், சாவியைக் கொடுத்தவாறு, ‘இனிமே இது உன் பைக்டா’ எனக் கிலோ கணக்கில் ஃபீலிங்ஸைப் பொழிகிறார் சக மாணவர். ‘நாங்க 6 பேர் கொண்ட ஃப்ரூட் (பழம்) கேங்’ என்கிறார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி ஒரு பழம், ஹீரோயின்கள் இரண்டு பழங்கள், மீதி 3 பழம் யாரென்று தெரியவில்லை. சதா இரட்டையர் போல் ஒட்டிக் கொண்டிருக்கும் நாயகிகள், கடைசி நாளில் மட்டும் நாயகன் முன் தனித் தனியாக வந்து பேசுகின்றனர். ஏன் அனைத்து மாணவர்களுமே சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு வரிசையில் வந்து விடைபெறுகிறார்கள். கடைசி நாளில் கூட ஒன்றாகக் கூடி விடை பெறாதவர்கள் கண்டிப்பாகப் பழங்களாக அன்றி வேறெவராக இருப்பார்கள் என்ற குறியீடோ என்னவோ!? கல்லூரிக்குப் பின், யாரும் ஒருவரோடு ஒருவர் தொடர்பில் கூட இல்லாதளவு முற்றிய பழங்கள். படத்தின் ஆகப் பெரிய கடுப்பு என்னவெனில், நல்லவர், வல்லவர், ஏழைப்பங்காளராக வரும் விஜய் சேதுபதி, கல்லூரிகளில் மூன்று வருடங்கள் ஸ்டெல்லாவிற்குப் பொய்யான காதல் நம்பிக்கையைத் தருவதோடு, பிரியும் நாளிலும் அந்த நம்பிக்கையை வலுவாக்கி அனுப்புகிறார். நாயகனுக்கு வருவது மட்டும் காதல்? அவருக்குச் செய்யப்படும் நம்பிக்கைத் துரோகம் மட்டும் காட்டுமிராண்டித்தனமாம்! மண் மனம் சார்ந்த காட்சிகளில் முத்திரை பதிக்கும் இயக்குநர், மற்ற காட்சிகளில் இப்படி நிறைய முரண்களைத் தெரிந்தோ தெரியாமலோ வைத்துள்ளார். 

நானும் ரெளடிதான் படத்திற்குப் பின், மீண்டும் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் ராதிகா. கிராமத்து அம்மாவாக அவர் காட்டியிருக்கும் நடிப்பு அபாரம். ஆனால், கிராமத்தில் இருந்து மருத்துவம் படிக்கச் சென்ற முதல் தலைமுறையைத் தன் உடல்மொழியில் காட்ட விஜய் சேதுபதி தவற விட்டதோடு, ஒரே விதமான நடிப்பை எல்லாப் படத்திலும் பிரதிபலிப்பதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம். ஆனால், முழுப் படத்தையும் சுமப்பது அவர்தான்.

அவரிடமிருந்து கொஞ்ச நேரம், படத்தைத் தன் வசமாக்கும் ஒரே நபர் காமாக்கப்பட்டி அன்புச்செல்வியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டுமே! அவர் சேலை கட்டிய பாங்கு, பார்க்கும் பார்வை, ‘அவரு கெளரவத்தைக் காப்பாத்த செலவு செஞ்சுதான் ஆகணும்’ என்று அங்கலாய்க்கும் விதமென ஒவ்வொரு அசைவிலும் கலக்கியுள்ளார் ஐஸ்வர்யா. வலுவான குடும்பப் பின்னணியுடன் தோன்றும் காமாக்கப்பட்டி தமிழ்ச்செல்வி போல், மொட்டையாய்த் திணித்து விடப்பட்டுள்ள சுபாஷினி பாத்திரம் மனதில் அவ்வளவாகப் பதியவில்லை. மனம் முழுவதும் வெறுப்புடன் விவாகரத்துக்கு ‘அப்ளை’ செய்த பின்னும் கணவரின் புகைப்படத்தைத் தூக்கி எறியாத தமன்னாவின் பாதுகாப்பற்ற மனோபாவமும், விஜய்சேதுபதி தன் ‘கிளினிக்’கிற்கு அன்புச்செல்வி எனப் பெயர் வைப்பதன் மூலமும், காலங்காலமாய் தமிழ் சினிமா காட்டும் ஆண், பெண் பற்றிய மரபான பழமைவாத நம்பிக்கைகளை ஆழமாகக் கொண்ட சாமானியர்கள் என்றறிய முடிகிறது. சுதந்திர மனோபாவம் இல்லாத அவர்கள் ‘லிவிங் டுகெதர்’ உறவுக்குள் நுழைந்தனர் என்பது நகைமுரண் என்றால், பேராசிரியர் முனியாண்டியின் மூலம், ‘அந்தப் பழக்கம் இங்க ஒத்து வராது’ என்றும் மெஸ்சேஜ் சொல்லி விடுகிறார் இயக்குநர். மேலும், நிலவேம்புக் கஷாயம், ஜெலூசில் எனப் பரிந்துரைக்கும் எளிய மருந்துகளும், பரோட்டோ சாப்பிடாதீங்க என்ற அக்கறையும், மருந்தைப் புரியும்படி தமிழில் எழுத வேண்டுமென்ற கோரிக்கையும் இயக்குநரின் மனவோட்டத்தைப் பிரதிபலிக்கின்றன.

சுகுமாரின் ஒளிப்பதிவு மிக அற்புதம். அதுவும் மலை சார்ந்த இடங்களைப் ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்றால், பிரித்தியேக குதூகலம் வந்துவிடும் போல் அவருக்கு. யுவனின் ஒலிப்பதிவோ, ஒரு கலைப்படம் பார்ப்பதற்கான பொறுமையைக் கோரும் வண்னமுள்ளன. ஆங்காங்கே எழும் செயற்கைத்தன்மையை மீறி, பல உணர்ச்சிபூர்வமான காட்சிகளில் தன் முக்கியத்துவத்தைத் தக்க வைக்கிறது. மகன் மீது தாய் வைத்திருக்கும் பாசமும் நம்பிக்கையும், கல்யாணங்களில் நடக்கும் பேரம், அதனால் பாதிக்கப்படும் குடும்பம் என்பவை அதில் மிக முக்கியமானவை.

தர்மதுரையின் வாழ்வைச் சூது கவ்வினாலும் அவருக்கு முடிவில் சுபம் கிட்டுகிறது என்பதே படத்தின் ஒரு வரிக்கதை.