தாங்கள் வாடகைக்குக் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரிடம் உரசல், புது வீடு தேடி அலுக்கும் படலம், சொந்த வீட்டுக்கான விழைவு ஆகிய மூன்றையும் கடக்காதவர்கள், நூற்றுக்கு ஒரு சதவிகிதம் பேரே இருப்பார்கள். மீதி, தொண்ணூத்தொன்பது பேர்க்கு இந்த அனுபவம் வாய்த்திருக்கும். சொந்த ஊரில் பத்து வீட்டை வாடகைக்கு விட்டுச் சொகுசாய்க் காலாட்டிச் சம்பாதிக்கும் பாக்கியசாலிகள் கூட, என்றேனும் எப்போதாவது இன்னொரு ஊரில் இந்த அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள். ஆக, டுலெட் 99 சதவிகிதத்தினருக்கு நிகழ்ந்த, நிகழும் 100 சதவிகிதம் உண்மையான கதை.
100 திரைப்பட விழாக்களில், 84 பரிந்துரைகளில் இந்திய அரசின் தேசிய விருது உட்பட 32 விருதுகளைப் பெற்றுள்ளது. அதிக விருதுகளை வாங்கிய தமிழ் சினிமா என்ற பெருமையைப் பெற்றுள்ளது டுலெட் திரைப்படம்.
கோலிவுட்டை நம்பியிருக்கும் எண்ணற்றவர்களில் ஒருவனான இளங்கோவின் காதல் மனைவி அமுதாவிடம், ஒரு மாதத்திற்குள் வீட்டைக் காலி செய்யச் சொல்கிறார் அவர்களது வீட்டு உரிமையாளர். ழ சினிமாஸின் டுலெட் இப்படி இனிதே தொடங்குகிறது.
இளங்கோவாக சந்தோஷ் ஸ்ரீராம் நடித்துள்ளார். இவர் கவிஞர் விக்ரமாதித்யனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மிக அற்புதமாக நடித்துள்ளார். படத்தின் பலமே கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்புதான். அமுதாவாக நடித்திருக்கும் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஷீலா ராஜ்குமாரின் நடிப்பும் அலாதியாக உள்ளது. குட்டிப் பையன் சித்தார்த்தாக நடித்திருக்கும் தருணும் (Dharun) ஈர்க்கிறான். நடிகர்கள் திரையில் கொண்டு வந்திருக்கும் உணர்வுகள் தான் இப்படத்தின் அச்சாணி.
பார்வையாளனைக் கதைக்குள் தருவிக்காமல், கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளூம் சம்பவங்களை அருகிலிருந்து பார்க்கவேண்டுமென்ற நோக்கத்துட்டன் கேமிரா ஃபிக்ஸ்டாக வைக்கப்பட்டுள்ளது. ஒரு நகர்வில்லாக் கேமிரா கோணம் கொஞ்சம் நாடகத்தன்மையைப் படத்திற்கு அளிக்கிறது. தபஸ் நாயக்கின் நேர்த்தியான ஒலி வடிவமைப்புப் படத்திற்கு ஒரு ‘லைவ்’லி ஃபீலைத் தந்தாலும், பின்னணி இசையில்லாதது படம் பார்க்கும் உணர்வை அந்நியமாக்குகிறது.
படம் முடியும் பொழுது, பிரதான கதாபாத்திரங்களின் கையறு நிலை நம் மனதுள் எந்த அதிர்வினையும் ஏற்படுத்தவில்லை. ‘எனக்கும் அப்படித்தான் ஆச்சு’ என்று நினைப்பதற்கும், ‘ஐய்யோ, அவன் அடுத்த என்ன செய்வான்?’ என்று நம்மை மறந்து கலங்குவதும்தான் கதைக்கும், கலைக்குமான வித்தியாசம்.
இங்கு, கருவே அனைவருக்குமானது என திருப்தியாகிவிட்டதால், கலையாய் அது மேம்பட அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை இயக்குநர் செழியன். வீட்டு உரிமையாளர்களை ஆண்டான் போலவும், வாடகைக்குக் குடியிருப்போர்களை அடிமைகள் போலவும் சித்தரித்திருக்கிறார். வீட்டு உரிமையாளர்களும் மனிதர்கள்தான். எந்தக் காரணமும் இல்லாமலேயே, ஷீலா ராஜ்குமார் வீட்டு உரிமையாளரான ஆதிரா முன் பதற்றத்துடனேயே இருக்கிறார். மனிதர்கள் எப்பவும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிநேகமான பாவங்களை வெளிப்படுத்தத் அவர்கள் தவறுவதே இல்லை. ஆனால் ஏதோ ஒரு புள்ளியில், அது உப்பு சப்பில்லாத காரணமாகக் கூட இருக்கும், வார்த்தை முன் பின் வந்து விழுந்துவிடுவதால் மட்டுமே உரிமையாளருக்கும் வாடகைதாரருக்கும், அல்லது சக மனிதர்களுக்குள் ஒருவரை ஒருவர் ஆகாமல் போய்விடுகிறது. ஆனால், படம் அந்தப் புள்ளியை எல்லாம் சட்டை செய்யவில்லை. வீட்டு ஓனர் வில்லன்; வாடகைக்கு இருக்கும் சந்தோஷ் ஸ்ரீராமும் ஷீலாவும், படத்தோடு பொருத்திக் கொள்ளும் பார்வையாளர்களும் பாவப்பட்ட நல்லவர்கள் என்ற தொனியிலேயே தொடங்கி முடிகிறது.
படத்தில் வரும் சின்னஞ்சிறு சுவாரசியங்கள் க்யூட்டாய் உள்ளன. சிவாஜி படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு டப்பிங் செய்துவிட்டு, அப்பணத்தை மனைவியிடம் கொடுக்கும்போது, சந்தோஷ் ஸ்ரீராமும் ஷீலா ராஜ்குமாரும் தரும் ரியாக்ஷன் ஒரு சான்று. இத்தம்பதிக்குள் நடக்கும் ரொமான்ஸ், மனக்கசப்புகள், அந்நியோன்னியம் தான் படத்தைச் செலுத்துகிறது. தேர்ந்த நடிகர்கள் தன் நடிப்புத் திறனால் எப்படிப் பார்வையாளனை, படத்தில் இடைவேளை இல்லாவிட்டாலும், உட்கார வைக்கமுடியும் என்பதற்கு இப்படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.