Shadow

கன்னிமாடம் விமர்சனம்

Kanni-Maadam-review

கன்னிப் பெண்கள், கர்ப்பினிப் பெண்கள், பெண் துறவிகள் என பெண்கள் தனியே தங்கும் இடத்திற்குப் பெயர் கன்னிமாடம் ஆகும். இந்தப் படத்தின் நாயகியான மலர்க்கோ தங்க ஓரிடம் இல்லா
மல் தவிக்கிறார். படத்தின் தகிப்பிற்குக் காரணமோ, படம் தொட்டுள்ள ஆணவக்கொலை எனும் விஷயமாகும்.

நாயகன் அன்புவின் தங்கையை, அவனது தந்தையே சாதி ஆணவத்தில் படுகொலை செய்து விடுகிறார். தன் குடும்பமே சிதைந்துவிட்டது என வருத்தத்தில் இருக்கும் அன்பு, சென்னைக்கு ஓடி வரும் மலர் – கதிர் ஜோடியை அரவணைக்கிறான். கதிர் விபத்தில் இறந்து விட, நிராதரவாய் இருக்கும் கர்ப்பிணியான மலரைப் பாதுகாக்கும் பொறுப்பு அன்புவிற்கு ஏற்படுகிறது. இந்தச் சமூகக் கட்டமைப்பில் அது அத்தனை எளிதான காரியமா என்ன? அன்புக்கு நேரும் சோதனையும் சவால்களும் தான் படத்தின் கதை.

‘இன்னுமா சாதி பார்க்கிறாங்க?’ என அப்பாவித்தனமாய்க் கேட்கும் கவுன்சிலர் அழகுராணியாக ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா நடித்துள்ளார். அவரது அறிமுகத்தின் போது, அவரது உருவத்தினைக் கேலி செய்வது போன்ற கேமிரா கோணத்தினை இயக்குநர் போஸ் வெங்கட் தவிர்த்திருக்கலாம். ஏனெனில், படம் முழுவதும் பெரியாரிசத்தையும் ஒரு கதாபாத்திரமாகக் கொண்டு வந்துள்ளார் எனும்போது உருவு கண்டு நகையாடுவதான விஷயத்தைத் தவிர்த்திருக்கலாம். ‘வாயும் வயிறுமாக என்ன 40 வருஷமா இருப்பீங்களா?’ என்ற முருகதாஸின் வசனமும் ‘பாடி ஷேமிங்’ வகையைச் சார்ந்தது. அழகுராணி பாத்திரத்திற்கு பிரியங்கா கச்சிதமாகப் பொருந்தியுள்ளார்.

‘ஸ்கொயர் ஸ்டார்’ ஆகும் நடிப்புக் கனவில் வருடங்களைத் தொலைத்த பாத்திரத்தில் சூப்பர் குட் சுப்பிரமனியன் ரசிக்கும்படி நடித்துள்ளார். ஸ்டெல்லாவாக நடித்துள்ள வலீனா பிரின்ஸின் கதாபாத்திரத்தை இன்னும் வலுவாக உருவாக்கியிருக்கலாம்.

வாகனங்கள் மீது பிரியமுள்ள கதிராக விஷ்ணு ராமசாமி நடித்துள்ளார். படத்தின் நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் அன்பு எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். கதாபாத்திரத் தேர்விலேயே இயக்குநர் போஸ் வெங்கட் பாதி வெற்றியினை உறுதி செய்துவிடுகிறார். முக்கியமாக, மலராக நடித்திருக்கும் சாயா தேவி அருமையான சாய்ஸ். அவரது அகத்தை இன்னும் கொஞ்சம் தொட்டிருந்திருந்திருக்கலாம். ஆனாலும், கதையின் கரு ஆணவக் கொலை என்பதால், அது ஒரு குறையாகத் தெரியவில்லை.

முதல் படத்திலேயே, பெரியாரின் புகைப்படத்தையும், அவரது கோட்பாட்டையும் படம் நெடுகே உலாவ விட்டு அசத்தியுள்ளார் போஸ் வெங்கட். மேலும் அதிர்ச்சியான க்ளைமேக்ஸ் மூலம், சமூகத்தின் கோர முகத்தையும், அதை பொறுத்துக் கொள்ள முடியாத தனிமனிதனின் மனசாட்சியையும் அழுத்தமாகப் பதிந்துள்ளன படம்.